பட்டாசு வெடித்தல் _- எச்சரிக்கை
டேய் தம்பி.
காசு கொடுத்துத்தானே
என்னை வாங்கினாய்? ஆசைப்பட்டுத்தானே
என்னை விலைக்கு வாங்கினாய்?
என் திரியில தீயை வைத்துவிட்டு ஏன்டா அஞ்சி ஓடுகிறாய்?
விரும்பும் ஒரு பொருளைக் கண்டு அஞ்சுவதா பெருமை?
இனிப்பை விரும்புகிறாய்.
அச்சத்தோடா அதை உண்கிறாய்?
ஆசைப்பட்டு என்ன வாங்கிய நீ
திரியில் தீயிட்டுவிட்டு
அஞ்சி ஓடுவது என்னை
அவமானப்படுத்தும் செயல் ஆகாதா?
என் மீது உனக்கு அன்பிருந்தால்
உன் கையில் பிடித்துக்கொண்டு
என் திரியில் தீயிட்டு என்னை
வெடிக்க வைடா பார்க்கலாம்.
காசைக் கரியாக்கும் உன்னைப்
பாராட்டுவதா அல்லது உன்
கோழைத்தனத்தை ஏளனம் செய்வதா?
என்ன செய்வதென்று
நீயே சொல்லடா என்மீது
ஆசை வெறிகொண்ட அபிமானியே!
சுற்றுச் சூழலைப் பாதிக்கும்
என்னை வெடித்து
எதற்கடா கர்ப்பிணிப் பெண்டிரையும்
வயது முதிர்ந்து
மரணப் படுக்கையில் கிடப்போரையும்
பச்சிளம் குழந்தைகளையும்
பிணியோடு போராடுவோரையும்
வீட்டு விலங்குகளையும்
பாடித் திரியும் பறவைகளையும்
இடியோசை எழுப்பி
அச்சுறுத்துகிறாய்?
இரத்த அழுத்தம் உள்ளவரை
’எக்ஸ்பிரஸ்’ வேகத்தில்
எமலோகம் அனுப்பி வைக்கவா
காலனுக்கு அழைப்பு விடுகிறாய்?