உயிர்போக நேர்ந்தாலும் ஊறு பிறர்க்குப் பயிலாது இருத்தல் பரம் - இதம், தருமதீபிகை 502

நேரிசை வெண்பா

பெரிய மனிதரெனப் பேசுவார் யாரும்
அரிய கருணையால் ஆனார் - உரிய
உயிர்போக நேர்ந்தாலும் ஊறு பிறர்க்குப்
பயிலா(து) இருத்தல் பரம். 502

- இதம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அரிய கருணை யுடையவரே பெரியார் என்று உலகில் யாண்டும் புகழ்ந்து போற்றப் பெறுகின்றாராதலால் உன் உயிர் போக நேர்ந்தாலும் பிறர்க்கு இடர் புரியாதிருத்தல் உயர் நலமாகும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், தயையுடையவன் உயர்வான் என்கின்றது.

இனிய நீர்மை பெருகிய அளவு மனிதன் சீர்மையுறுகிறான். நல்ல பான்மையால் எல்லா மேன்மைகளும் விளைந்து வருகின்றன.

பெரிய மனிதர் எனத் தம்மைப் பிறர் புகழ்ந்து பேச வேண்டுமென்று எவருக்கும் பிரியம் மிக உண்டு. அந்த உள்ளப் பிரியத்திற்கு உரிய தகுதி தம் உள்ளே இல்லையாயின் அது எள்ளலுடையதாய் இகழப்படுகிறது.

அரிய பண்பாடுகள் இனிது நிறைந்த பொழுதுதான் பெரிய மகிமைகள் உளவாகின்றன. எந்த உயிருக்கும் இரங்கி இதம் புரியும் தன்மை ஒருவனிடம் இயல்பாக அமையுமாயின் அவன் ஒரு தெய்வப் பிறவியாகவே வையம் புகழப் பெறுகிறான்.

தண்ணளி செய்வதால் புண்ணியம் விளைகின்றது; அதனால் எண்ணிய இன்ப நலங்கள் எல்லாம் எளிதே அமைகின்றன.

தரும நிலையமாயுள்ளமையால் கருணைப் பண்பு குணகணங்களுள் தலைமையாய் நிலவி நிற்கிறது. எவ்வழியும் சீவர்களுக்கு இதமாய்ப் பெருகி வருதலால் சீவதயை தேவ வுரிமையை மருவுகிறது. இனிய உதவி புனித பதவியாகிறது.

பசி, தாகம் முதலியவற்றால் வாடி அலமருகிற உயிர்களுக்குக் கண்ணோடி உபகாரம் செய்கின்ற மனிதனைக் கடவுள் கண்ணோடி நோக்கி எண்ணோடி யருள்கின்றார்.

உயிரினங்கள் எல்லாம் கடவுளுடைய உடைமைகளாதலால் அந்தச் சீவர்களுக்குச் செய்யும் உதவியைத் தேவன் உவந்து கொள்கிறான்.

எவ்வுயிரின் உள்ளும் இறைவனுளன் என்றறிந்தேன்
எவ்வுயிர்க்கும் செய்தேன் இதம்.

உயிர்கள் யாவும் பரமன் உருவங்கள் என்னும் உண்மையுணர்வு உதயமாயின் அக்த மனிதன் பெரிய ஞானியாய் யாண்டும் இனியனவே செய்ய நேர்கின்றான்.

“There is one life in all, and that life is God.”(One self)

எல்லாவற்றிலும் ஒரு சீவன் உளது; அதுதான் கடவுள்' என்னும் இது ஈண்டு அறிய உரியது. யாண்டும் இறைவன் பரவியிருக்கும் இயல்பினை உணர்ந்து எவ்வழியும் இதமே செய்ய வேண்டும்.

அரிய கருணையால் பெரிய மனிதரானார்; பெருமைக்கு உரிய உரைகல்லை இது உணர்த்தியுள்ளது.

உள்ளம் உருகி எவ்வளவுக்கு எவ்வளவு உதவி புரிகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவ்வுயிர் உயர்ந்து போகின்றது. பிற வுயிர்களிடம் அன்பு புரிந்து உதவி வருவதில் தன் உயிர் இன்ப நிலையமாய்த் தழைத்து வருகிறது. உபகாரம் தரும உருவமாதலால் அதனையுடையவர் பெருமகிமைகளை அடைகின்றார்.

இதம் புரிகின்றவன் இன்ப வித்துக்களை விதைத்து வருகிறான். இடர் புரிவதால் துன்பங்கள் விளைந்து வருமாதலால் அதனை யாண்டும் யாரிடமும் செய்யாதிருப்பதே மெய்யான தவமாம். உய்தியுணர உயிர் உயர்கிறது.

’உன் உயிர் போக நேர்ந்தாலும் பிறர்க்கு ஊறு செய்யாதே’ என்றது தயா தருமத்தின் தத்துவ முடிவாய் நின்றது.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறி(து)
இன்னுயிர் நீக்கும் வினை. 327 கொல்லாமை

முன்னிலை ஏவலால் சீவர்களுக்கு இவ்வாறு வள்ளுவர் உபதேசித்திருக்கிறார். ;தன்னைக் கொல்ல வந்த பசுவைக் கொல்’ என்னும் பழமொழியை எதிர்மறுத்து இந்தச் அருள் மொழி பொருள் பொதிந்து வந்துள்ளது

துயரைப் பொறுத்துக் கொள்ளுவதில் புண்ணியமும் தெய்வ உரிமையும் உண்டாகின்றன; பொறுக்காமல் ஒறுத்து நிற்பதில் அவை இாண்டும் இல்லாமல் போகின்றன.

துயர் தாங்கி உயிர் நீங்கின் அது உயர் பேரின்பமாய் ஓங்குகின்றது; அந்த உண்மையை நோக்கி இத நீர்மையான இந்த நன்மையைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் என்றும், யாண்டும் இதம் செய்; எவ்வகையினும் இடர் செய்யாதே என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Oct-19, 5:35 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 73

சிறந்த கட்டுரைகள்

மேலே