பாலபலி
கவிதைலான்
முன்னுரை விளக்கம் : மது, கைடபர் இரு அரக்கரும் பிரம்மனிடம் இருந்து புத்தகங்கள் சிலவற்றைத் திருடிச் செல்கின்றனர். வராக வதாரத்தில் மீட்க வந்த திருமால் பூமாதேவியுடன் கூடிப் பிறக்கிறான் பவுமன். பின்னாளில் இவன்தான் நரகாசுரன் ஆகிறான். இவன் தவமிருந்து பிரம்மனிடம் தன்னை பெற்ற தாய் தவிர வேறு யாரும் கொல்ல முடியாத படிக்கு வரம் ஒன்றை வாங்குகிறான். மனிதர்க்கு தீங்கு பல செய்த காரணத்தால் திருமால் கிருஷ்ண அவதாரம் தரித்து சத்திய பாமாவான பூமாதாவைக் கொண்டு தன் மகனையே வதம்
செய்து கொல்கிறார். கடைசி நேரத்தில் மனம் மாறிய நரகாசுரன் தான் அழிந்துபட்ட நாளை தீப ஒளித்திருநாளாய் கொண்டாட வேண்டும் என்னும் வரத்தை பெற்றுச் சாகிறான். அந்த நாளே தீப ஒளி நாளாம் தீபாவளி.
இக்கவிதையை ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த பாலக சுர்ஜித்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்.
புராணத்தில் பிரம்மன் கைகொண்டெழுதிய
புத்தகம் கையாடப்பட்டது கைடபர் மது என்ற அரக்கரால்!
வானம் தன் வியர்வை கொண்டெழுதிய தண்ணீர் புத்தகம் பாதாளம் சென்றது மனிதரின் செயல்களால்!
புத்தகம் மீட்க ரட்சகன் திரு மால் இச்சகத்தில்
இறங்கினான் வராக வதாரமாய்!
தண்ணீரை மீட்க மதி கெட்ட மாந்தர் மண் தரையில் இறக்கியதோ எந்திர வதாரங்கள்!
அவதார வராகர் பூமா தேவியைத் தொட்டார்;உற்றான்
பவுமன் கருவில் பிள்ளையாய்
மாலின் மகன் மகானாக வேண்டாம்;
மனிதனாகக் கூட இல்லை.
மாறாய் நரமாமிசம் உண்ணும் மாசுரன் ஆனான்.
கற்ற கலையும் பெற்ற வரமும் கொண்டு
சுற்றம் எங்கும் சுகம் அளிக்கவில்லை;
சுகம் அழித்தான் ; நிம்மதி கெடுத்தான்.
பட்டத்து ராசன் அட்டகாசங்கள் எட்டுத்திக்கும்
மட்டற்றுப் பெருகிப் பரவின.
அவதார எந்திரங்கள் பூமியைத் தொட்டன
தொட்ட இடமெல்லாம் வட்டக் கேணிகள்
கேணி, கேணியாய் இல்லை; பாதாளம்
செல்லும் ஏணியாய்த் திரிந்தன
மனிதர் கற்ற கலையும் பெற்ற அறிவும்
சுற்றம் அழித்தன; நிம்மதி மாய்த்தன.
படித்தென்ன? பட்டம் பெற்றென்ன?
அறிந்தென்ன? அறியாதிருந்தென்ன?
கட்டுப்பட இல்லை; பட்டும் திருந்த வில்லை;
மட்டில்லை மனிதரின் மதி மயக்கம் அதற்கு!
தண்ணீரும் சேரவில்லை; நிலத்தடி நீர் உயரவில்லை.
துளைத்தானே பூமிதனை 'புண்ணிய'மனிதனவன்
சளைத்தானில்லை பொறுப்பின்றி மண்மேல் பிழைத்திருக்க
துளைத்த கேணி மூடவுமில்லை; யாருமதைச் சாடவுமில்லை
பவுமன், அசுரனானான்; கேணி, அரக்கன் ஆனது.
பாலபலி பல கொடுத்தும் வாய்தனை மூடவில்லை ராட்சச கேணி.
பவுமன் பெற்றான் வரம்:
'பெற்ற தாயன்றி
மற்றவர் கொல் வதற்கில்லை' என்று.
துளைக்கேணி பெற்ற வரம்:
'ஆட்சிஎன்ன ? அதிகாரமென்ன?அரசரென்ன?
அதிபரென்ன, அமைச்சரென்ன? அடிமையென்ன?
பொறுப்பின்மை மரிக்கும் வரை பேராற்றலும்
பேராண்மையும் ஒரு பொருட்டல்ல
நெருப்பு கொண்டெரித்தாலும்
துருப்புகொண்டழித்தாலும்
தன்னை அழிக்கும் பிரம்மாஸ்த்திரம்
பொறுப்புடைமையே!' என்று
காலமோ கலிகாலம்; கல்கியாய்
பரியேறிப் பெருமால் வந்தாலும்
கிஞ்சித்தும் கவலையில்லை,
நவீன நரகாசுரன் ஆழ்துளைக்
கிணற்றுக்கு.
பாலகர்கள், அவன் பற்களில்
மாட்டும் மாமிசத்துண்டுகள்.
பெற்றவள் கண்ணீர், அவன்
மதுக்கோப்பை நிரப்பும் சோம பானம்.
பிஞ்சின் வலியும் வேதனையும்
அவன் ரசிக்கும் நாடகம்.
முகநூலில் புலனத்தில்
பொறுப்பாய் கவலைகள்
பரிமாறிக்கொண்டும்
இன்ஸ்டா கிராமில் சஞ்சலம்
கொண்டு சஞ்சரித்துக் கொண்டும்
நாகரீக மனிதர்கள்.
கண்ணீர் இல்லாத அழுகை,
வேரில்லாத மரங்கள்,
உணரவில்லா உயிர்,
கருப்பையற்ற பெண்மை - இவை
மானுடம் மரித்து, விட்டுச்
சென்ற எச்ச வடுக்கள் !
மானுடமே!
பொறுப்பாயுதம் எடுத்து போர் செய்யும் வரை,
உங்கள் தீபங்களில் பாபங்கள் படிந்திருக்கும்
பார்வைகளில் புரையோடியிருக்கும்
நரகாசுர துளைக்கேணிப் பிழைகள்
பிள்ளைகளின் உயிர் குடிக்கும்.
தீபாவளித் திருநாள் கூட
சாப இருட்டின் நாளாய் திரியும்
தீப ஒளித் திருநாள் பாலபலி கேட்டு
தீக்கொல்லி நாளாய்த் திரியும்
பெருநாள் எல்லாம் நம் வேறருத்து
நம் வாழ்நாளே வெறுநாளாகும்.
புத்தபூர்ணிமைகள் இருள்கோர்த்திருக்கும்.
வெளிச்ச கிரகணங்களில் இருட்தூசி படிந்திருக்கும்.
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.
தெய்வங்கள் அரக்கரிடம் வீழலாமோ?
பொறுப்பாயுதம் எடுப்போம்;
அரக்கரினம் அழிப்போம்!