முறைதானோ தாயே

முன்னூறு நாள் கருவறையில், தன் மூச்சாய் உனை காத்தவள்; கண்.
முன் மண்ணில் நீ விளையாடி
மகிழும் தருணம் உனை காக்க
மறந்தது ஏனோ?
மாசில்லா உன் பொற்பாதம்
மண்ணில் பட்டால் கூட
மடவை இவள் சகியாள்,
மடி மீது துயில் கொள்ளும், வெண்
மதியவன் தூக்கம் கலைந்து விடுமென
மேனியில் தான் அணிந்திருக்கும் சேலை கூட உன்
மீது உரசவிடாது காத்தவள், தான்
மறந்தாலும் தாயே நீ
மறவாது காப்பாய் என்று எண்ணினாளோ! உன்
மத்தாப்பு சிரிப்பொலியும், மனநெகிழும் அழுகை ஒலியும்,
மாறி மாறி கேட்டு ரசித்த இவள்
மனம் அசைவின்றி, அமைதியாய்
மண்ணில் உறங்கும் உன்
மௌனம் கண்டு தன்னிலை
மறந்து தவிப்பாளோ! எங்ஙனம் மறப்பாளோ? பூந்தளிர் பாதமது
மடி மீது போட்ட ஆட்டம் தனில் மதிமயங்கி! போனாயோ அந்த
மயக்கத்தில் பெற்றவளை நீ
மறந்தாயோ தாயே! அவளை
மீளா துயரத்தில் ஆழ்ந்த
மனம் எங்ஙனம் துணிந்தாய் அம்மா!
மண்ணில் புதைத்த வித்துக்கள்யாவும் பொன்
மணிகளால் உயிர்த்தெழ, மூத்த மக்கள் தன் கடமை
மறந்த குற்றத்தை ஈடுசெய்ய
தவறி விழும் இந்த
முத்து சரங்களை உதிர்தெறிவது முறையோ தாயே?

எழுதியவர் : சங்கீதா தாமோதரன் (30-Oct-19, 12:14 pm)
சேர்த்தது : Sangeethadamodharan
பார்வை : 2055

மேலே