ஏங்கிய மனதை நொறுக்கி போனாயோ
ஏங்கிய மனதை நொறுக்கி போனாயோ
ஆடி களைத்த
அன்பு தளிரே,
அன்னை எனும் உன்
அன்பு பெட்டகத்தை நாடி
ஆனந்தமாய் ஓடி வந்த கனியே!
அரும்பசியில் நீ வரும் வேளை
அள்ளி உனை உச்சி முகர்ந்து
அமுதூட்ட காத்திருப்பாள்
அன்னை என எண்ணி உன்
இன்முகம் காட்டி
அவளை மதி மயக்க ஓடி வந்தாயோ!
அமுதூட்டிய மடிதனில்
ஆரிராரோ அவள் பாட
அச்சுதமே நீ கண்ணயர்ந்து
அனந்த சயனம் கொள்ள
அழகோவியமே வாஞ்சையோடு வந்தாயோ! காத்திருக்கும்
ஆபத்தை உணராது தன்
அன்னை முகம் காண
ஆவலாய் தத்தி வந்த பைங்கிளியே!!
ஆழ்துளை வடிவில் உனை
ஆட்கொண்டாளோ பூமித்தாய்!
அப்பா வருவாயோ எனை
அழைத்து செல்ல
அம்மா வருவாயோ அமுதூட்டிட என அழுது அழுது சோர்ந்து
அமைதியாய் உறங்கி போனாயோ! கனவில்
நடந்தாலும் பதைபதைக்கும்
நிகழ்வு தனை தொலைக்காட்சி
நேரலையில் இந்த வையமே
நடுநடுங்க எப்படியாவது
நீ மீண்டு வந்துவிடமாட்டாயா என ஏங்கிய இதயங்களை
நொறுக்கி சென்ற பூந்தளிரே!
நினைத்திருப்பாளோ உன் தாய்
நீ இனி அவள் மடியில் ஆடாது மண்மடி நாடி செல்வாய் என்று!
வரமாய் பெற்ற நம் செல்வங்களது
வாழ்வு நம் அலட்சியத்தால்
வறண்டு போகும் போது அந்த
வலி தாங்க பெற்ற இதயத்திற்கு மட்டுமல்ல மற்ற இதயத்திற்கும்
வலிமை இல்லை என உணர்ந்தால்
வசந்தம் நம்மை விட்டு
விலகிட எண்ணுமோ? நம்மிடமிருந்து
விடைபெற்ற இந்த உயிரே இறுதியாக
இருக்க வரம் தாரீரோ! இல்லை
இதையும் கடந்து செல்வீரோ!