வண்ணப் பாடல்

வண்ணப் பாடல்
* * * * * * * * * ** * * *
சந்தக்குழிப்பு
* ** * *** *** * *
தந்ததன தானனன தந்ததன தானனன
தந்ததன தானனன தனனானா

மஞ்சுதவழ் வானமதி லம்புலியும் பேரழகு
வண்டலுட னாறுகளு மழகேதான் !
வண்டமரும் பூவிதழில் வெண்பனியி னீரமதில்
வந்தொளிரு மேகதிரு மெழிலோடே !

செஞ்சிறிய கால்களொடு தண்டலையில் நீலமயில்
திந்திமிதி தீதியென வடிவோடே !
தென்றலுட னாடிவர மங்கையுளம் போலவது
சிந்தைமகிழ் வோடுநட மிடுதேகாண் !

கொஞ்சிவரு பூமணமும் வஞ்சிமகள் மேனியொடு
கொஞ்சமுற வாடவென வரலாமோ ?
கொண்டலொடு தேவதையின் நெஞ்சுதவழ் சேலையொடு
குந்தளமு மாடுகையில் மனமாடும் !

விஞ்சுமெழி லோடுநதி நங்கையென வோடுமுனை
விண்பறவை யேறிவர விடுவேனே ?
விந்தைதனை யேபுரியு மன்புமிக வேபெருக
மென்சிதர மாயெனையு மணைவாயே !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (31-Oct-19, 2:09 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 79

மேலே