உன்னைநீ நின்று தெளிக நினைந்து - பண்பு, தருமதீபிகை 537

நேரிசை வெண்பா

ஏனிங்கு வந்தாய்; எதற்காக வாழ்கின்றாய்;
ஊனிங்(கு) ஒழிய ஒழிகின்றாய்; - போனவழி
ஒன்றும் கெரியா(து) உழல்கின்றாய்; உன்னைநீ
நின்று தெளிக நினைந்து. 537

- பண்பு, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இவ்வுலகில் வந்து பிறந்துள்ளதும், வாழ்ந்து வருவதும், உடலை விட்டு ஒழிந்து போவதும், போனவழி யாதும் தெரியாமல் உழன்று திரிவதும் உன் நிலைமைகளாயுள்ளன; உண்மையை உணர்ந்து உறுதி தெளிக என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் உன்னை உணர்க என்கிறது.

தனது நிலைமையை முன்னும் பின்னும் எண்ணி நோக்கின் அரிய பல உண்மைகளை மனிதன் அறிந்து கொள்ளுவான். அவ்வாறு அறியாமலிருப்பது பெரிய பரிதாபமாயுள்ளது. எதையெல்லாமோ அறிந்து கொள்ள அவாவி விரைந்து துடிக்கிறான்; தன்னை அறிவதில் பின்னமாய் மருண்டு நிற்கிறான். தான் வந்த வரவை அறிவதைவிட மனிதனுக்குப் பெரிய காரியம் யாதும் இல்லை. அவ்வாறு அறிந்தவன் அதிசய நிலையில் உயர்கின்றான். அறியாதவன் அவல நிலையில் இழிகின்றான்.

வானின் நீளத்தையும், கடலின் ஆழத்தையும், மலைகளின் நிலைகளையும், சூரிய சந்திரர்களுடைய கதி வேகங்களையும், உலக இயற்கைகளையும் துருவி நோக்கிப் பெரிய விஞ்ஞானியாய் அரிய பேர் பெற்றிருந்தாலும் தன்னை அறியாதவரையும் அவன் அஞ்ஞானியே ஆவான்.

தன் சொந்த உயிர் நிலையை உணராதவன் எந்த உயர்நிலையை அடைந்தாலும் அது அந்தகன் கை விளக்கைப் போல் பிறர்க்கு ஒரளவு பயன்படினும் தனக்குப் பேரிழவேயாம்.

ஏன் இங்கு வந்தாய்? எதற்காக வாழ்கின்றாய்? இந்தக் கேள்விகளுக்கு ஒவ்வொரு மனிதனும் சிந்தனை .செய்து பதில் சொல்ல வேண்டும். மனித வுருவில் இப்பொழுது இங்கே பிறந்து வந்திருக்கிற நாம் முன்னம் எங்கே இருந்தோம்? ஈண்டு எப்படி வந்தோம்? இப்படி வந்தது ஏன்? வந்த இப் பிறவியில் நாம் அடைந்து வருகிற அனுபவங்கள் என்ன? இனிமேல் அடைய வுரியன எவை? இத்தகைய விசாரணைகளைச் சிறிதேனும் கருதிவரின் உறுதிநெறி காண வரும். அறிய வேண்டியதை அறியாமல், அடைய வேண்டியதை அடையாமல் வறிதே பாழாய் விளிந்து போவது கொடிய கேடாய்ப் பெருகியுளது.

தன்னைச் சோதனை செய்து காண்பவன் அரிய மகானாய் அதிசய நிலைகளை அடைகின்றான். உரிமையை உணர்ந்து கொண்டவன் இருமையும் பெருமையாய் இன்புற்று மிளிர்கிறான்.

இவ்வுலகில் எவ்வளவு உயர்ந்த பதவிகளை எய்தியிருந்தாலும் தன் உயிர்க்கு உய்தியை உணர்ந்து கொள்ளாதவன் உணர்விலியாயிழிந்து ஒழிந்து போகிறான். உள்ளே உயிர் பாழாவதை உணராமையால் வெளியே வெறியனாய்க் களி மிகுந்து அலைகிறான்

எல்லையில்லாத அல்லல்களை நாளும் அனுபவித்து வந்தும் ஒல்லையில் உய்தி காணாமல் ஊனமடைந்து ஒழிவது ஈனமேயாம்.

இருட்டு வீட்டில் விளக்கு வரின் இருள் நீங்கி ஒளி ஓங்குகிறது; இருண்ட நெஞ்சில் உண்மையுணர்வு புகின் மருண்ட புன்மைகள் யாவும் ஒழிந்து தெளிந்த சீவன் முத்தனாய் அவன் உயர்ந்து ஒளி பெறுகிறான்.

ஆன்ம விசாரணையில் அகில விசாரங்களும் அழிந்து போவதால் ஏக பராபரன் போல் அவன் யோகமெய்தி உலாவுகிறான். உறுதி நலங்களை ஓர்ந்துணர்ந்தவன் உயர்ந்த கதிகளில் ஒங்கி மிளிர்கிறான்.

அறுசீர்க் கழிநெடிலாசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

உலகெது? நாம்ஆர்? என்ன
..உற்றுநின்(று) உணரு மட்டும்
கலகமார் பிறவி மோகம்
..கங்குல்போல் மூடி நிற்கும்;
அலகறும் உலகும் தாமும்
..அழிவில்சிற் சோதி என்றே
சலனமில் கண்ணால் கண்டோர்
..தத்துவ நிலைமை கண்டோர்.

- கவிராஜ பண்டிதர்

புனிதமான ஆன்ம உணர்வு பரமான்மாவை இனிது காட்டி இன்புறுத்தும் என இது உணர்த்தியுள்ளது. தன்னை உண்மையாகக் கண்டவன் உரிமையான தலைவனையும் உடனே கண்டு கொள்ளுகிறான்.

தீய நினைவுகள் ஒழிந்து மனிதன் தூயன் ஆனபொழுது பரிசுத்த சோதியோடு கலந்து ஒருமித்து ஒளிர்கிறான். அடைய உரியதை அடையாதிருக்கும் வரையும் மடையனாகவே மறுகி அலைகிறான். நிலைமையை நினைந்து பாராமையால் நெடிது மருண்டு நீண்டு திரிகிறான்.

‘உன்னை நீ நினைந்து தெளிக’ தன்னை நினைந்து பார்ப்பதால் இன்னல்கள் பல நீங்கி விடுகின்றன. இன்பங்கள் ஓங்கி வருகின்றன. சரியான குறியோடு தன்னை மனிதன் பார்ப்பதில்லை. புறத்தே போர்த்துள்ள உருவம் பேர்களிலேயே கருவம் கொண்டு திரிகிறான். குலச்செருக்கு, அதிகார மமதை முதலியன மனிதனைப் புலைப்படுத்தி விடுகின்றன.

உயிர் நோக்கு ஒழிந்து உடலையே நோக்கி ஊனங்கள் புரிந்து வருதலால் ஈனங்கள் பல விளைந்து வந்தன. ஞானக்காட்சி நேர்ந்த போது இந்த ஈனங்கள் எல்லாம் ஒழிந்து போகின்றன

தன்னை உண்மையாக உணர்ந்தவுடன் மனிதன் ஈசனோடு வாசி பேச நேர்கின்றான். உறவு தெரிய உரிமை தெரிகிறது. உறுதி உண்மைகளை இறைவனிடம் பெற எதிர் வழக்காடுகிறான்.

என்றுநீ யுளைமற் றன்றே யானுளேன்
15 அன்றுதொட் டின்றுகா றலமரு பிறப்பிற்கு
வெருவர லுற்றில ன்ன்றே யொருதுயர்
உற்றுழி யுற்றுழி யுணர்வதை யல்லதை
முற்று நோக்க முதுக்குறை வின்மையின்
முந்நீர் நீந்திப் போந்தவன் பின்னர்ச்

20சின்னீர்க் கழிநீத் தஞ்சா னின்னும்
எத்துணைச் சன்ன மெய்தினு மெய்துக
அத்தமற் றதனுக் கஞ்சல னியானே
இமையாது விழித்த வமரரிற் சிலரென்
பரிபாக மின்மை நோக்கார் கோலத்
25 திருநடங் கும்பிட் டொருவனுய்ந் திலனாற்
சுருதியு முண்மை சொல்லா கொல்லென
வறிதே யஞ்சுவ ரஞ்சாது
சிறியேற் கருளுதி செல்கதிச் செலவே. 20 சிதம்பர மும்மணிக்கோவை

தில்லைப் பரமனை நோக்கிக் குமரகுருபரர் இவ்வாறு கூறி யிருக்கிறார். 'எம் பெருமானே! நீ என்று தோன்றினயோ அன்றே நான் தோன்றியுள்ளேன். என் தீவினையால் உன்னைப் பிரிந்து போய்ப் பல பிறவிகளை அடைந்து திரிந்தேன்; அறிவின்மையால் இன்றும் பிறவிக்கு அஞ்சாமல் நிற்கிறேன். ஆயினும் கனக சபையில் வந்து உன்னை ஒருநாள் கண்டு நான் கும்பிட்டேன், ’கூத்துவனைக் கண்டார் பின் கூற்றுவனைக் காணார் காண்’ என்பது ஆக்க மொழி. நான் மீண்டும் பிறவியில் விழுந்தால் வேதமும் பொய் சொல்லுமோ? என்று தேவர் அஞ்சி விழிப்பர், அவருடைய அச்சத்தை நீக்கும் பொருட்டாவது என்னைப் பிறவியிலிருந்து நீக்கியருள்' என இறைவனை நோக்கி இவர் வேண்டியிருக்கும் வித்தகம் எவ்வளவு புத்துணர்வை நமக்குப் போதித்துள்ளது! உய்த்துணர்ந்து உண்மை தெளிய வேண்டும்.

வெய்ய துயரங்களை நீக்கிக் கொள்வதே எய்திய பிறவிக்கு இனிய பயனாம். உள்ளத்தில் உயர்ந்த பண்புகளைப் பேணி எவ்வுயிர்க்கும்.அன்பனாயொழுகி எவ்வழியும்.உறுதி நலங்களைக் காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Nov-19, 9:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 64

மேலே