பெரோஷி, மழையில், மற்றும் நான்

========================================================

நான் உறங்குகிறேன்.

அதை அவர்கள்
பார்க்கிறார்கள். மேலும்
மழை பொழிகிறது.

காற்றின் ஈரத்தில் குளிர்
கூடி வருகிறது.
நான் குளிரில் கலைவதை
அவர்கள் விசனத்துடன்
அங்கலாய்க்கிறார்கள்.

தெரியும் கால்களில் சிதறிய
சிறு பனியை விலக்கி பின்னர்
போர்வையில் மூடுகிறார்கள்.

மழை விசிறி பெய்வதை
அவர்கள் உணர்கிறார்கள்.
என் உறக்கத்தின் மீதான
நம்பிக்கை தளர்கிறது.

அவர்கள் இப்போது
மழையை வெறுக்கின்றனர்.

மழை, ஆகாயத்தின் ரம்யம்
என்று பெரோஷி கூறுகிறாள்.

நான் இடப்புறம் திரும்பி
ஒருக்களித்து கொள்கிறேன்.

என்னிடமிருந்து சிற்சில
நட்சத்திரங்கள் நழுவி ஓடுகிறது.

இரவுகள் பின்னர் அதனை
பொறுக்கி அணியும்போது
நிலவு கூச்சம் கொள்ளும் என்று
பெரோஷி மீண்டும் சொல்கிறாள்.

மழை திசை மாறுகிறது.
இருப்பினும் ஓய்வின்றி
காற்றுக்குள் பயணிக்கிறது.
பெரோஷி நீலவர்ணத்து
மெழுகுவர்த்தியை
ஏற்றி பூச்சிகள் இருக்கிறதா
என பார்த்து அறிந்துகொண்டு
திருப்தியுடன் அணைக்கிறாள்.

அவர்கள் கண்கொட்டாது
பார்க்கிறார்கள். மூடனின்
அலைச்சல் போல் சில
மழைத்துளிகள் தெறிக்கின்றன.

அவர்கள் இரவை
மழையை நதியோசையை
கறுப்பு பெண்டூல காற்றை
கவனிக்கிறார்கன்.

பெரோஷி கிசுகிசுப்பாய்
அவர்களிடம் சொன்னாள்.

அவன் தூங்குகிறான்.
இருப்பினும்
நம்மோடு இருந்தபடியே
அவன் அவனை பார்க்கிறான்.

அப்போது
நான் பெரோஷியின்
கைகளை பற்றிக்கொள்ள
விரும்புகிறேன்.

ஆயினும்.....?

----------------------------------------------------------------

எழுதியவர் : ஸ்பரிசன் (27-Nov-19, 10:06 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 85

மேலே