இதுவும் ஒரு வேலையா

நகைச் சுவை - கணினி நகைச்சுவை.
"இதுவும் ஒரு வேலையா?"
எனது நண்பர் சண்முகம் ஒருநாள் தனது மகளை எங்களது கணினிப் பயிற்சி மையத்தில் சேர்க்க வந்திருந்தார். அவர், தன் விவசாயத் தொழிலை அன்றி வேறு எதிலும் விருப்பம் இல்லாதவர். வேறு தக்வல்களிலும் நாட்டம் இல்லாதவர்.
என் அலுவலக மேசைக்கு எனக்கு எதிரில் அவர்களை அமர வைத்து நான் அவர் மகளை விசாரித்து விண்ணப் படிவத்தில் பதிவு செய்து கொண்டிருந்தேன். சண்முகம் எதுவும் பேசாமல் கணினியையும் திரையையும் மாறி மாறிப் பார்த்தபடி இருந்தார். அதாவது இரண்டையும் பின்பக்கமிருந்தபடி பார்த்தவாறு இருந்தார். அத்துடன் மற்ற மேசைகளிலும் மாணவியர் மாணவ்ர் தமது கணினிகளின் முன் அமர்ந்து "ஏதோ" செய்வதையும் பார்த்தபடி இருந்தார்
பதிவு செய்வது முடிந்தபின்தான் அவரிடம் பேச முடிந்தது. கணினிப் பயிற்சியைப் பற்றி அவரது மகள் மற்ற தகவல்களைக் கேட்டவாறு இருக்க அவர் என்னுடன் பொதுப் படையாகப் பேசிக் கொண்டிருந்தார்.
வேலை முடிந்ததும் இருவரும் எழுந்தனர். அவருக்கு ஏதோ பெரிய சந்தேகம் இருப்பது அவரது முகத்தில் தெளிவாகத் தெரிந்தது. என்னிடம் அவர் எதையும் கேட்கவில்லை. வாயிற்படிக்கருகில் சென்றபின் தன் மகளிடம் அவர் கேட்டது இது.--------
"ஏன் ஜானகி, இப்படியேதான் எல்லாரும் எல்லா நாளும் வேலை செய்து கொண்டும் பயிற்சி எடுத்துக் கொண்டும் இருக்கிறார்களா? அவர்களால் எப்படி எல்லா நேரமும் அப்படி ஒரே பக்கத்தில் பார்த்தபடி இருக்க முடிகிறது? அங்கிருக்கும் எல்லாப் பெட்டிகளிலும் மேலும் கீழுக் வயர்கள்தான் இருக்கின்றன. அதையே எப்படி உற்று உற்றுப் பார்த்தபடி இருப்பதோ!! இதுவும் ஒரு வேலையா? ஒரு மணி நேரத்திற்கு நான் பார்த்ததற்கே வெறுத்துப் போய்த் தலைசுற்றுகிறது. நீ என்ன செய்யப் போகிறாயோ!! இதை நீ பழகித் தான் ஆகவேண்டுமா? எதற்கும் நன்றாக யோசனை செய்து பார்!"
எனக்குத் தாளமாட்டாத சிரிப்பு வந்தது! இருந்தாலும் அத்தனை பேர் முன்னால் அவரது அறியாமையை வெளிப் படுத்த் விரும்பாததால் பேசாமல் இருந்து விட்டேன்.
அவர் சொன்னதும் உண்மைதானே? கணினி, திரை ஆகியவற்றின் பின்பக்கத்தில் இணைப்புக் கேபிள்கள்தானே கண்ணிற்குத் தெரியும்? அவர் என்னருகில் வந்து திரையையப் பார்க்காததால் உண்மை தெரியவில்லை!!
அவரை வீட்டில் விட்டுவிட்டு வந்த ஜானகி, சிரிப்பை அடக்கிக் கொண்டு தன் தந்தைக்கு விளக்கியதை என்னிடம் சொன்னாள்!!