மௌனிக்கும் சொற்கள்🙊

வெறும் கொண்டாட்டங்களிலும்
களிப்புகளிலும் வாழ்வை தேடுபவர்களுக்கு

எங்கே தெரியப் போகிறது
தாம் தொலைத்துவிட்ட பாதைகள்

வரையறுக்கப்பட்டதுதான் வாழ்வென்றால்- அந்த
வரையறை எதுவரை
பெண்ணென்ற மெய் சுமந்து
பெட்டிப்பாம்பாய் தலையாட்டும் பொம்மையாய்!

உடையும் நடையும் அலங்காரமும்
வேண்டும்தான்- வாழ்வில்
வேறொன்றுமுண்டென்று
ஏன் எள்ளளவும் எண்ணத்தோன்றவில்லையா-இல்லை
தோன்றி யென்னபலனென்ற தொன்மைக்குணமா?

வீறு கொண்டெழுந்திடென்பது
இன்னும் தோற்கவில்லை தோழியரே!

பட்டாடையுடுத்தி பவ்வியமாய் நடந்தது போதும்
பகட்டான வாழ்வு பாழ்படுத்திவிடும் உன்னை
சாதிக்க துணிந்திடு சரித்திரம் படைக்க- இல்லையேல்
பொசுக்கிவிடிம் உன்னை-இந்த
போதித்த சமூகம்!

துச்சமென துணிந்துவிட்டால்
எட்ட வைக்கும் என் சமூகமென்று
அச்சமதை பூண்டுவிட்டால்

கிட்ட யிருந்து எதைக் கண்டாய்
வேடமிட்டு வெறும் வாழ்வு வாழ்கிறீரே
உள்ளத்தை தொட்டு உரக்க கூறுங்கள்
உச்சி முதல் உள்ளங்கால் வரை
உறுத்தவில்லை பெண்ணடிமையென்று

வேரறுந்த மரமாய் வெளி வேசம் தேவையில்லை
நாள்பட்ட புண்போல் உடனிருந்து
உயிர்கொல்லும் நோயாய்;
மௌனிக்கும் சொற்கள்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (6-Dec-19, 7:03 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 1632

மேலே