காதலித்து கரைந்து போ

பார்வையை தின்று பசியாற பழகு
இதயம் முழுதும் புகைப்படம் மாட்டு
இரவும் பகலும் தவிப்புடன் கிட
பார்க்கும் யாவிலும் அவள் முகம் தேடு
பசியை மறந்து பட்டினியாய் இரு
நடை உடை மாறி புதிதாய் பிற
சிறகுகள் இன்றி வானத்தில் பற
இரவு முழுதும் விழித்தே கிட
சாலைகள் ஓரம் தவங்கள் புரி
எழுத்துப் பிழைகளுடன் கவிதைகள் இயற்று
மெதுவாய் நகரும் கடிகார முட்களுடன்
சண்டைகள் போடு
ஒரு நொடி பார்வைக்காய்
மணிக்கணக்காய் காத்திரு
கடந்து போகும் நிமிடத்திற்காய்
கால் வலிக்க காத்திரு
கண்ணாடி முன் நின்று
ஒத்திகை பார்த்துக்கொள்
நண்பர்களை விட்டு தனிமையில் தவி
அனைவரிடமும் அதிகமாய்
பொய் சொல்லக் கற்றுக் கொள்

இளமை என்றும் திரும்புவதில்லை
இது ஹார்மோன் செய்யும் பருவ தொல்லை

சரியோ தவறோ நீயே முடிவெடு
இன்பமோ துன்பமோ நீயே அனுபவி
அறிவுரை கூறினால் ஆராய்ந்து தெளி
பருவ நாடகம் முடிந்தே தீரும் முடிந்தால் தெளிவு பிறந்தே தீரும்

ஆசை தீரும் மட்டும்
ஏக்கத்தை கூட்டு
ஏக்கம் தீரும் மட்டும்
காதலித்து கரைந்து போ

கரைந்து முடிந்து
கரையேறி திரும்பி வா
உனக்கான உலகம் புதிதாய் காத்திருக்கும்...

எழுதியவர் : ந.சத்யா (8-Dec-19, 2:45 pm)
பார்வை : 282

மேலே