சுர்ஜித்திற்கு இரங்கல் கவிதை
கண் மூடி நினைத்தாலே
கை மூடி நீ இருக்கும்..
கோரக்காட்சி வந்து...
கொலை நடுங்க வைக்குதடா....
பயத்தோடு நீ கொடுத்த
அலறல் சத்தமெல்லாம்..
ஆழ் மனதில் சென்று...
ஆட்டிப் படைக்குதடா...
நஞ்சுக்கொண்டிருக்கும்
உன் பிஞ்சுக்கைபார்த்து
தூக்கிப்பிடித்து விட..
நெஞ்சம் துடித்ததடா...
பத்து மாதம் சுமந்தமகள்
பால்கொடுத்த பாவிமகள்...
மார்பில் அடித்துக் கொண்டு..
அழும் சப்தம் கேட்கலையோ...
அப்பன் வெட்டிய குழியில் தான்...
ஆயுசு முடியும் என....
கருக்குழியில் தெரிந்திருந்தால்...
அங்கேயே கலைந்திருப்பாய்...
கருக்குழியில் நீ இருந்து..
ஆண்டு இரண்டு முடிவதற்குள்...
சவக்குழிக்குள் செல்லத்தான்...
அவசரம் கொண்டாயோ...
சொந்த குழிக்குள்ளே..
சொர்க்கம் உன்னை தொலைத்துவிட்டு..
நரகம் செல்லும் வரை.
நடை பிணம் தான் உன் அப்பன்...
உன் சட்டையைக் கட்டிக் கொண்டுபெற்றவள் அழுகையிலே..
எங்கள் நாடிநரம்பெல்லாம்..
நடுநடுங்கிப் போனதடா...
செத்தா தான் சொந்த மண்ணில்
சமாதியா போவாங்க...
நீ உசுரோட உம் மண்ணில்.
உருக்குலைந்து போனாயோ...
பால் மணம் மாறாத..
பிஞ்சுப்பூ உனக்கு...
பால் ஊற்றும் அவலநிலை
பாவிகள் தந்தனரே.
நட்ட நடு ராத்திரியில்...
நடுக்காட்டு பட்டியிலே...
ஊரு சனம் எல்லாம்..
தூங்காமவிழித்திருக்க..
கோடான கோடி மக்களெல்லாம்..
கோலாகலம் மறந்து...
கோமகன் உனைக்காண..
நம்பிக்கையில் காத்திருக்க...
உன் கரம் பிடித்து
உயிர் காக்க..
வீரர் கூட்டமெல்லாம்..
வியர்வையில் உழைத்திருக்க.
ஆள் அரவமில்லா..
அற்பக்காட்டுக்குள்ளே...
ஆயிரம் ஜனங்களை ..
வர வைக்க நினைத்தாயோ..
விஞ்ஞான கருவியெல்லாம்..
விதவிதமாய்வந்திறங்க
அத்துனையும் வீணாய் போக..
தலைகுனிந்து நின்றனவே..
ஆயிரம் விளக்கேற்றி
அர்ச்சனைசெஞ்சாலும்..
கல்நெஞ்சம் கொண்டவன்..
கல்லாய்த்தான் நின்றானே....
இரு கைகள் விரித்து
உயிர் துறந்த தேவனுக்கு...
இரு கைகள் கட்டி..
நீ கதறும் குரல் கேட்கலையோ....
சிறுவா உன் உயிர் காக்க
வேண்டாத தெய்வமில்லை...
தெய்வமே வேண்டாமென...
நினைக்கத் தோன்றுதடா......
நாத்திகம் பேசுபவனை..
நம்பத் தோன்றுதடா..
தீபத்திருநாளில்..
நீ எழுந்து வந்திருந்தால்...
கோலாகலமாய் உன்னை
கொண்டாடி தீர்த்திருப்போம்...
நீ வந்தால் தான் பண்டிகை என..
குழி மேல் விழி வைத்து...
மக்களெல்லாம் காத்திருக்க..
ஏமாற்றி விட்டாயடா...
பூமித்தாயே...
உன்னிடம் தங்கமா கேட்டோம்...
தண்ணீர் தானே கேட்டோம்..
வெட்டிய குழியெல்லாம்.
வெல்லமாய் நிறைந்திருந்தால்...
வெற்றுக்குழியாக விட்டுட்டுசெல்வானா.
பாறைகள் எல்லாம் வழி விட்டிருந்தால்.. பாவி மகனைபறி கொடுத்திருப்போமா.... இயற்கையே சதிசெய்தால்..
இயலாதவன் என்ன செய்வான்...
விஞ்ஞானியே. சந்திரனுக்கு செல்ல.. சந்திராயன்வேண்டாம்...
சதி செய்யும் இயற்கைக்கு..
புது விதி வேண்டும்....
ஆள்பவனும் கைவிட்டான்..
ஆண்டவனும் கைவிட்டான்...
ஆண்டவனைப் பார்த்தால்
அவனிடம் கேள் மகனே..
எதற்கு படைத்தான்...
எதற்கு பறித்தான் என...
மீண்டு வர முடியாவிட்டாலும்
மீண்டும் பிறந்து வா ..
உன் தாய் வயிற்றிலேயே..
காத்திருக்கிறோம் உன்
பிறப்பிற்காக.. இப்படிக்கு
உன்னை பெற்றெடுக்காத
இன்னொரு தாய்...(பிரியா)