மானம் மாண்பு மகிமை ஞான நிலையின் நறுமணம் - விநயம், தருமதீபிகை 549

நேரிசை வெண்பா

மானம் மரியாதை மாண்பு மகிமையெலாம்
ஞான நிலையின் நறுமணமாய் - வானம்
மருவி வரலால் மனித உலகம்
பெருமை புரியும் பெரிது. 549

- விநயம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மானம் மரியாதை முதலிய அரிய நீர்மைகள் எல்லாம் ஞான நிலையின் இனிய மணங்களாய் மருவி வருகின்றன; அவை மனித உலகத்தை எவ்வழியும் பெருமை செய்து மிளிர்கின்றன என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், இனிய நீர்மைகள் இன்ப வெள்ளம் என்கின்றது.

பல குண நலங்கள் ஒருங்கே சேர்ந்த பொழுதுதான் மனிதன் புனிதனாய் வெளியே ஒளி வீசி உலாவுகிறான். குண சமுதாயங்களே மனித சமுதாயத்தை யாண்டும் மகிமைப் படுத்தி வருகின்றன.

நாய் நன்றியறிவு வாய்ந்தது; கழுதை அமைதியானது; எருமை பொறுமையுடையது.
சேவல் வீரம் மிக்கது; காக்கை இனம் தழுவி உண்பது; கொக்கு கருமமே கண்ணானது.

இன்னவாறு மிருகங்களிடமும், பறவைகளிடமும் சில தன்மைகள் இயல்பாகவே அமைந்திருந்தாலும் அவை உயர்வாக மதிக்கப்படாமல் இழிவாகவே எண்ணப்பட்டுள்ளன. அந்நிலைக்குக் காரணம் பகுத்தறியும் திறனும், பான்மையினமும் மேன்மையாகப் பதியாமையேயாம்.

கூரிய மனவுணர்வும் சீரிய குண நீர்மைகளும் மனிதனிடம் ஒருசேர அமைந்து வருதலால் அவன் சிறந்தவனாய் உயர்ந்து விளங்குகிறான். சீவ ஒளியால் யாவும் தேவ ஒளிகளாய்ச் சிறந்து மிளிர்கின்றன. உயிர் ஒளி குறையின் உயர்வுகள் ஒழிகின்றன.

ஈன நிலைகளில் இழிந்து படாமல் மனிதனை இனிது பேணி வருவது மானம் என வந்தது. மனம் மழுங்காமல் இருப்பது என்னும் காரணக்குறியாய் இது பூரணம் அடைந்துள்ளமையால் மானத்தின் தலைமையும் நிலைமையும் தெரியலாகும்.

மானிகள் யாண்டும் நெறியுடையராய் எவ்வழியும் புனித நிலையில் வாழ்ந்து வருபவராதலால் ஏதேனும் இடையே ஓர் இழிவு நேரின் உடனே அவர் உயிர் அழிய நேர்கின்றனர்.

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழு(து) ஏத்தும் உலகு. 970 மானம்.

மானம் உடையார் இயல்பும் அவரது உயர்வும் இதனாலுணரலாகும். வையம் தொழ, வானம் புகழ வைத்தலால் மானத்தை உயிரினும் பெரிதாக உயர்ந்தோர் உவந்து பேணி வருகின்றனர். அருமையுடையது பெருமை அடைகிறது.

Mine honour let me try; In that I live and for that will I die. - Mowbray

'என் மானம் என்னைச் சோதிக்கட்டும், அதில் உயிர் வாழ்கிறேன்; அது நழுவின் நான் அழிவேன்’ என்னும் இது இங்கே அறியவுரியது.

உயர்ந்த மக்கள் எல்லாரும் மானத்தை உயிரினும் அருமையாகக் கருதிப் போற்றி வருகின்றனர். தம்மை எவ்வழியும் மேன்மைப்படுத்திப் புகழும் புண்ணியமும் அருளி வருதலால் மாந்தர் அதனை இவ்வாறு மருவி மகிழுகின்றனர். அரிய மகிமையுடையது பிரியமாய்ப் பேணப்படுகிறது.

மரியாதை என்பது மானத்தோடு தோய்ந்துள்ள இனிய நீர்மை. அது நிலை குலையாமல் நின்று திகழ்கிறது; இது நிலைமையைத் தலைமையாகச் செய்தருளுகிறது. உயர்ந்த உயிரின் இனிய வாசனைகளாய்க் குணங்கள் மலர்ந்து விளங்குகின்றன. மலருக்கு மணம் போல் சிலருக்கு இயல்பாகவே குணங்கள் அமைந்து வருகின்றன. இனிய நீர்மைகளோடு பழகிவரும் அளவு மனிதன் தனியே நிலவி மிளிர்கிறான்.

’தனக்கு மரியாதையைத் தான் தேடிக் கொள்ள வேண்டும்’ என்பது பழமொழி. செல்வம் கல்வியை ஈட்டுவதைக் காட்டிலும் குணங்களை ஈட்டிக் கொள்வது உயர்ந்த நலங்களாய் ஒளி புரிந்தருளுகிறது.

நேரிசை வெண்பா

ஈட்டும் பொருண்முயற்சி எண்ணிறந்த வாயினும்ஊழ்
கூட்டும் படியன்றிக் கூடாவாம் - தேட்டம்
மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்
தரியாது காணுந் தனம். 8 நல்வழி

மனிதன் உரிமையோடு விரைந்து தேடத்தக்க செல்வம் மரியாதையே என ஒளவையார் இவ்வாறு அருளியுள்ளார். தேட்டம் மரியாதை காணும் என்றது அதன் காட்சியைக் கருதியுணர வந்தது.

மரியாதை விநயத்தின் இனிய துணையாயிருத்தலால் அதனை யுடையவனை யாவரும் உவந்து பேணி வருகின்றனர். அவனது மேன்மையை இப்பான்மை உயர்த்திக் காட்டுகிறது.

Thy modesty’s a candle to thy merit. - H. Fielding

’உன் தகுதிக்கு உனது மரியாதை ஒரு விளக்கு’ என்று இது உரைத்துளது. உயர்ந்து விளங்கச் செய்வது உளந்தெளிய நின்றது.

யாண்டும் விநயமாய் நடந்து யாவரிடமும் மரியாதையாய் ஒழுகி வருபவன் அரிய ஒரு பெரிய மனிதன் ஆகிறான். தன்னைப் பெருமைப்படுத்தி இருமையும் இன்பம் கருதி, அருமை நீர்மைகளை உரிமையாக மருவி உயர்கதி பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Dec-19, 9:38 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

சிறந்த கட்டுரைகள்

மேலே