செல்வம் போற்றினார் தன்னை வளர்க்கும் தழைத்து – செல்வம், தருமதீபிகை 561

நேரிசை வெண்பா

இவ்வுலக வாழ்க்கை இனியபொரு ளாலியங்கும்
செவ்வி தெரிந்து செயல்தெளிந்தே – எவ்வழியும்
பொன்னை வளர்த்துப் புகழ்பெறுக; போற்றினார்
தன்னை வளர்க்கும் தழைத்து. 561

- செல்வம், தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

இந்த உலகவாழ்வு எப்பொழுதும் பொருளால் இயங்கி வருகிறது.

அந்நிலையைத் தெளிவாய் உணர்ந்து எவ்வழியும் நல்வழியில் பொருளைச் சம்பாதித்துப் புகழ் பெறுக.

தன்னை உரிமையோடு பேணி வருவோரை அப்பொருள் பெருமையாக உயர்த்தி வரும்.

’இவ்வுலக வாழ்க்கை இனிய பொருளால் இயங்கும்’ என்றதிலிருந்து இவ்வையக வாழ்வுகள் நடந்து வருகிற மெய்ம்மை தெரிய வந்தது.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க வீடு முதலியவை மனித வாழ்வுக்கு அவசியத் தேவையாக உள்ளன.

பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றது தெய்வநூல். உயிர் வாழ்க்கைக்கு ஆதாரமாயுள்ளதால் செல்வம் பல்வகையிலும் புகழ்ந்து போற்றப் பெற்றது.

இன்னிசை வெண்பா

அத்திட்ட கூறை அரைச்சுற்றி வாழினும்
பத்தெட் டுடைமை பலருள்ளும் பாடெய்தும்
ஒத்த குடிப்பிறந்தக் கண்ணுமொன் றில்லாதார்
செத்த பிணத்திற் கடை. 281

என்ற நாலடியார் பாடலில் பொருளின் பெருமையும், பொருளின்மையின் இழிவும் கூறப்படுகிறது.

நேரிசை வெண்பா

கல்லானே ஆனாலும் கைப்பொருளொன்(று) உண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர்கொள்வர்; - இல்லானை
இல்லாளும் வேண்டாள்;மற்(று) ஈன்றெடுத்த தாய்வேண்டாள்;
செல்லா(து) அவன்வாயின் சொல். 34

என்ற ’நல்வழி‘ பாடலில் கல்வி அறிவு இல்லாதவனுக்குச் செல்வம் இருந்தால் அவனையும் எல்லோரும் சென்று போற்றிப் புகழ்வர்.

செல்வம் இல்லாதவனை அவனது மனைவி கூட விரும்பமாட்டாள்; அவனைப் பெற்ற தாயும் விரும்பமாட்டாள்;

அவன் சொல்லும் சொல்லை யாரும் பெரிதாகக் கருதி ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று செல்வத்தின் உயர்வை ஒளவையார் பாடியுள்ளார்.

பொருளினாலேதான் இவ்வுலக வாழ்வு நடைபெறுகிறது; அது இல்லையாயின் அல்லலும், இருளும் படிந்து மனித வாழ்வு அவலமடைந்து போகும் என்று மேலேயுள்ள பாடல்கள் உணர்த்துகின்றன.

பொன்னை வளர்த்துப் புகழ்பெறுக; போற்றினார்
தன்னை வளர்க்கும் தழைத்து.

தன் குடும்ப வாழ்க்கை செழித்துத் தழைத்து வர எவன் உழைத்து வருகிறானோ அவன் உயர்ந்து விளங்குகிறான். சுகமாக மதிப்போடு வாழ்ந்து வரும் வாழ்வெல்லாம் பொருளினாலேயாம். அதனைக் கருதி, தன் கையில் செவ்வையாகப் பொருளைச் சேர்த்தும், வகையறிந்து செலவு செய்தும் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது சிறப்பாகும்.

கருத்துரை:
வேலாயுதம் ஆவுடையப்பன் • 17-Nov-2017 3:35 am

கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார் நேரிசை வெண்பா
நாலடியார் & ’நல்வழி பாடல்களும் போற்றுதற்குரிய படைப்பு

என்றும் அழியாதாய், நம் உடம்பு அழிந்தாலும் தான் அழியாமல் நமது உயிரோடு சேர்ந்து நம்மை எல்லாப் பிறப்புக்களிலும் தொடர்ந்து வருவதாய் உள்ள அழிவில்லாப் பெருஞ் செல்வத்தையே அடைதற்குக் கண்ணுங்கருத்துமாய் இருக்கவேண்டும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Dec-19, 9:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

சிறந்த கட்டுரைகள்

மேலே