எங்கும் இயங்கும் இயல்பினால் தங்கும் தலைமை தழைத்து - பதவி, தருமதீபிகை 571

நேரிசை வெண்பா

தலைவன் ஒருவன் தனிநின் றருள
நிலைகள் பலவும் நெறியே - உலைவின்றி
எங்கும் இயங்கும் இயல்பினால் யாண்டுமே
தங்கும் தலைமை தழைத்து. 571

- பதவி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

தனி முதல் தலைவனை இறைவனருளால் உலக நிலைகள் யாவும் ஒழுங்காய் இயங்கி வருகின்ற தன்மையால் பல சிறிய தலைமைகள் உரிமையாய் எங்கும் தழைத்து வந்துள்ளன என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், பதவியின் பான்மையை உணர்த்துகின்றது.

தலைவன் என்னும் சொல் உயர்ந்த நிலைமையை உணர்த்தியுள்ளது. உடலில் உயர்ந்திருக்கும் சிறந்த உறுப்பைத் தலை என்று வழங்கி வருகின்றோம். எல்லா உலகங்களுக்கும் தனி முதல்வனாய் உள்ளமையால் கடவுளும் தலைவன் என நின்றான். அந்த முழுமுதல் தலைவனுடைய அருள் வழியே அரசர் முதலாயினோரும் இங்கே தலைவர் என வந்தார்.

அவன் என்றும் நிலையான நித்தியத் தலைவன். இவர் நிலைமாறி அழியும் அநித்தியத் தலைவர், அவன் யாராலும் அறியப் படாதவன். இவர் எல்லாராலும் அறியப் பட்டவர்.

அவன் எதையும் செய்ய வல்ல அதிசய நிலையினன். இவர் இயன்றதைச் செய்யும் எளிய இயல்பினர்.

அவனுடைய தன்மையும், வன்மையும், நன்மையும் நீதியும் தோய்ந்து எம்மையும் நிலையாய் இயங்கி வருதலால் என்றும் தலைவனாய் நின்று நிலவுகின்றான். அவனது அதிசய நிலைகள் எவராலும் தெளிவாயறிய முடியாதன.

தன்மை பிறரால் அறியாத தலைவா! என இறைவனை நோக்கி மாணிக்கவாசகர் இவ்வாறு உருகி உரையாடியிருக்கிறார். சிவனைத் தலைவன் என்றது சீவனுடைய நிலையைத் தெரிய வந்தது. தலைவி தலைவனைத் தழுவியிருந்தால் இனிய மகிழ்ச்சியும் இன்ப போகங்களும் சுரந்திருக்கின்றன. பிரிந்து நின்றால் பெருங்கவலைகளும் கொடுந்துன்பங்களும் தொடர்ந்து நிற்கின்றன.

ஆன்மா பரமான்வைத் தோய்ந்தால் பேரானந்தம் பெருகி எழுகின்றது. தோயாது பிரிந்தால் மாயாத துன்பம் மருவி நிற்கின்றது. பிரிவும் செறிவும் அறிய அரியன.

அழியாத ஆனந்த நிலையை இழந்து விட்டு ஒழியாத அவலத் துயரில் அழுந்தி உழல்வது உயிர்க்குக் கழிகேடாயது; அக்கேட்டை விழிதிறந்து நோக்கிய போது விழுமிய இன்பப் பேற்றை அது அடைந்து கொள்கின்றது. பேரானந்த நிலையமாய்ப் பெருகியுள்ள அதனைப் பெறுவதே அரிய பிறவிப் பேறாம்:

இங்ஙனம் ஆன்ம நாயகனாயுள்ள இறைவன் ஒருவனே தலைவன் என்னும் பெயருக்கு உரியவனாயினும் உலக நிலையில் பல தலைவர்கள் நிலவியுள்ளனர். இந்த உலகம் பல வகையான வேறுபாடுகளை உடையது. அந்த மாறுபாடுகள் அளவிடலரியன.

ஐந்து விரல்களும் ஒன்று போல் இல்லை. இருக்கவும் முடியாது; இருந்தாலும் நன்கு பயன்படாது. சிருட்டி பேதங்கள் அதிசய விசித்திரங்களை யுடையன. பல்லாயிரம் பேர்களை துணுகி நோக்கினாலும் ஒருவர் முகம்போல் மற்றவர் முகம் இராது. ஒரு தாய் வயிற்றில் பிறந்த சேயரும் செயல் இயல்களில் அயலாயுள்ளனர்.

இன்னவாறு பிரிவுகளும் பேதங்களும் பெருகியிருத்தலால் உரிய இனங்களை ஒருமுகமாய் அடக்கியாள உரிமையாளர்கள் கரும வகையாய் மருவி வந்தனர். தந்தை எதிரே மைந்தர்கள் அடங்கி நிற்கின்றனர். அண்ணன் முன்னிலையில் தம்பி தணிந்து நின்று கண்ணியம் புரிகிறான். அரசனிடம் மந்திரி வணங்கி நின்று மரியாதை செய்கிறான். உரிய உறவுகள் உலாவி வருகின்றன.

இவ்வண்ணம் இயல்பான உயர்வு தாழ்வுகள் உரிமையோடு மருவி வந்துள்ளன. பிறப்புரிமையாகவே சில சிறப்பு நிலைகள் சேர்ந்திருக்கின்றன. அரசர் குடியில் பிறந்தவன் அரசனாய் வருகிறான். அமைச்சுவழி வந்தவன் அமைச்சனாய் எழுகின்றான்.

‘யாண்டும் தலைமை தங்கும்’ என்றது உலக இயக்கத்தின் நிலைமை தெரிய வந்தது. தலைமை – அதிகாரம்; உயர்ந்த நிலையிலிருந்து காரியம் செய்யும் சீரிய தன்மை சிறப்பாய் நின்றது.

தானைத் தலைவர், தண்டத் தலைவர், குடித் தலைவர் என இவ்வாறு தலைமைகள் பல வகைகளாய்ப் பரந்து விரிந்துள்ளன.

எல்லாரும் கலைவர்களாயிருக்க இயலாது; தக்கவர்களே தனியுரிமையாளராய் வருகின்றனர். காரியங்களைச் சீரிய முறையில் நடத்துகின்றவரே சிறந்த அதிகாரிகளாய் உயர்ந்து திகழ்கின்றனர். வினையாண்மைகளால் மேன்மைகள் விளைகின்றன.

அறிவு, ஆண்மை, ஆற்றல் என்னும் இந்நீர்மைகளை மருவியுள்ள அளவே அதிகாரிகள் சீர்மையும் சிறப்பும் பெறுகின்றனர்.

மதியூகமும் மன உறுதியும் அதிகாரிகளை அதிசய நிலையில் உயர்த்தியருளுகின்றன. எவரும் துதி செய்து வரும் நிலையினதாதலால் அதிகார பதவியை யாவரும் விரும்புகின்றனர். கருதிய பதவிக்குரிய தகுதியை முதலில் அடைந்து கொள்ளுபவர் பின்பு உரிமையில் உயர்ந்து பெருமைகள் பெறுகின்றனர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Dec-19, 10:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

சிறந்த கட்டுரைகள்

மேலே