முதல் ஆட்டம் படம் பார்க்க

இரண்டு மாடுகளோடு வண்டிக்கட்டி
தெரு மக்களையெல்லாம் ஒன்றுக் கூட்டி
வேக வைத்த வள்ளி கிழங்கை
ஊடு உணவிற்கு எடுத்துக்கொண்டு

முதல் ஆட்டம் படம் பார்க்க
பக்கத்து ஊருக்கு பயணம் செய்து
பார்ப்போரை எல்லாம் கேலி செய்து
பட்டாளமாய் கொட்டகை அடைந்தால்

பார்க்கும் இடமெல்லாம் மக்கள் கூட்டம்
அடித்து பிடித்துக் கொண்டு சீட்டு வாங்க நிற்கையிலே
ஐம்பது காசு சீட்டெல்லாம் காலி என்று கூற
ஒன்றேகால் சீட்டையே இருபது பேருக்கு எடுத்துவிட்டு

உட்கார இடந்தேடி கொட்கையினுள் செல்கையிலே
குப்பென்ற பீடி நாற்றம் கூடவே வியர்வை நெடி
பெரும் ஓசைக் கூச்சலிலே இடந்தேடி அமர்ந்து விட்டு
படம் போடும் நேரத்திலே பெரிய விசில் சத்தம் தானே

மூன்று மணி நேர படம் முடிஞ்சு
வெளியில் வரும் போது முழு நிலவு விளக்காக
முழு பாதையையும் தெளிவாக்கிக் காட்டி வைக்க
கொம்பின் மணியாட மாடுகளோடு வண்டி சென்றது

நிலவு வெளிச்சத்தில் தெரிந்த விளைச்சல் நிலங்களில்
கம்பு கேழ்வரகு சோளம் திணை ஆகியவற்றை பறித்து
சுவைபட தின்றுக் கொண்டு ஓடை நீரைப் பருகி
வீடு வந்து சேர்ந்த பொன்னான பருவம் மீண்டும் வருமோ.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (23-Dec-19, 9:37 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 65

மேலே