தீமூட்டி குளிர்காய்வோம்

மார்கழி மாதத்தில்
அதிகாலையில் என்
தோட்டமெங்கும் ஒலிஎழுப்பும்
சங்கு செவண்டிகள்.....

மார்கழி மாதத்தில்
குரவலை நடுங்கும் குளிரில்
வீதியின் முச்சந்தியில்
எள்ளு சக்கை தீ மூட்டி
குளிர்காய்வோம்

மார்கழி மாதத்தில்
தினம்தோறும் எங்கவூரு
பிள்ளையார் குளித்து
அரளிப்பூவால் கிரீடம் சூடுவார்

மார்கழி மாதத்தில்
வாசல்தோறும் -கோமாதா
சாணம் தெளித்து
வெங்கச்சாம் பொடியில
சூரிய கோலம்போட்டு
சூரியனை தொழுதுடுவாள்
என் ஆத்தா சாலம்மா

மார்கழி மாதத்தில்
பாவாடை தாவணியில்
பருவப்பெண்ணு குடமெடுத்து
வீதியில நடந்துபோய்
விநாயகரை குளிப்பாட்டுவா
வினைகள் தீர வேண்டிக்கொள்வாள்
என்னை இதயத்தில்வைத்து
கோயிலையும் சுற்றிடுவாள்

மார்கழி மாதத்தில -பூசாரி
சாமிக்கு படையல்போட்டு
பூவரசம் இலையில -பூசாரி
சாமைப் பொங்கல் தந்திடுவார்

மார்கழி மாதத்தில
அதிகாலை நேரத்தில
எங்கவூரு வேப்பமர கல்லுக்கட்டு
இசையால் நிரம்பியிருக்கும்
குலுப்பைக்காரா தாத்தா வந்து
நையாண்டி ராகத்தில
திருப்பாவை பாடிடுவார்

மார்கழி மாதமெல்லாம்
பீடை மாதமென்பார்
சாமக்கோழி கூவும்போது
கண்விழித்து முகம்கழுவுயென்பார்
புராணக்கதைகளை புரட்டிப்படியென்பார்

மார்கழி மாதமெல்லாம்
ஆண்டாளின் மாதமென்று
முக்காடு போட்டுக்கிட்டு
கைபேசியில் இசையைக்கேட்கிறாள்
கிராமத்தை மறந்த
நகரத்து என்பொண்ணு

எழுதியவர் : இரா .அரிகிருஷ்ணன் (27-Dec-19, 1:00 pm)
சேர்த்தது : இராஅரிகிருஷ்ணன்
பார்வை : 82

மேலே