காதலின்
ஒரு நேசத்தின்
அன்பின்
காதலின் வாதை என்பதனை
யாரேனும் அறிவீரோ..
ஒரு மரணத்தின்
இனிய தழுவல் போன்றது அது.
அன்பின் பாதையில்
அகப்படும் ஒருவன் அவனாய்
இருப்பதில்லை..
அவனாய் இருப்பதையும் அவன்
விரும்புவதில்லை..
ஒரு பைத்தியகாரனாய்
ஒரு பேரறிஞனாய்
ஒரு சூன்யமாய்
மாறிமாறி பயணம்செய்து
இறுதியில்
ஏகாந்தமானவனாய் பறக்கத்துவங்குகிறான்..
எதிர்படும் யாவிலும் அவனை
பீடித்துள்ளவர்களை தேடித்தேடி
முட்டாளாகிறான்.
பசுங்கிளிமுதல்
தெருநாய் வரை கொஞ்சித்திரிகிறான்..
அவன் கனவுகள் அனைத்துமே
வண்ணமயமானவை
அதில்
தேவதைகள் யாவரும்
அழகில் குறைந்தவர்களாகவே வலம்வருவர்.
அன்பின் குப்பையில் உழல்வது
அவனுக்கு அவ்வளவு பிடித்தமானது
அன்பின் வாதையை அனுபவிக்கும்
ஒருவன்
எப்போதுமே
அவனாய் இருப்பதை
விரும்புவதே இல்லை.
Rafiq