உனதருள் எப்போ
(சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா.)
===================================
உழைத்துழைத்தே உடல்தேய்ந்து உருக்குலைந்த மனிதர்க்கு
இழைக்கின்ற துன்பத்தை எவருந்தான் தடுப்பதில்லை
பிழைப்பதற்கு வழியற்றோர் பெரும்பாவம் புரிந்தவரோ?
(இல்லையெனில்)
பட்டினியால் வாடிநிதம் பரிதவிக்கும் துயரவரை
விட்டுவிட மாட்டாத விதியெனவே தொடர்வதுமேன்?
(தொல்லைதனை)
வாழ்வினிலே தந்துவிட்டு வருத்தமுற வேண்டுமென
சூழ்நிலைகள் ஏற்படுத்தும் சுந்தரனே ஆண்டவனே..!
(முல்லையென)
புன்சிரிப்பை அவரிதழில் பூக்கவிட்டுப் பார்ப்பதற்கு
உன்னருளை தந்துதவி உயிர்பிழைக்க விடுவாயே
(அலைமோதும்)
மக்கள் மனத்துயர் மறைந்து விலகி
சிக்கல் கலைந்து சிறக்க
எக்கணம் நினதருள் எனச்சொல் வாயே!
**
மெய்யன் நடராஜ்