தமிழர் திருநாள் வாழ்த்துகள் கவிஞர் இரா இரவி
தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
கவிஞர் இரா. இரவி.
******
உலகிற்கு எழுத்தறிவித்தவன் தமிழன் என்று
உணர்த்தியது தொல்லியல் ஆய்வில் கீழடி இன்று !
உலகத்தமிழர்கள் யாவரும் ஒன்றிணைந்து
ஒற்றுமைப் பொங்கலை இட்டு மகிழ்வோம் !
பாவாணர் உரைத்தார் அன்றே நன்றே
பைந்தமிழே உலகின் முதல்மொழி என்றே !
தமிழர்களாகப் பிறந்ததற்குப் பெருமை கொள்வோம்
தமிழ்மொழியின் சிறப்பை தமிழர்கள் அறிந்திடுவோம் !
உலகிற்கு நாகரிகம் கற்பித்தவன் தமிழன்
உன்னத அறிவியலும் அறிந்தவன் தமிழன் !
நாமக்கல் கவிஞரின் வைர வரிகளை நினைத்து
நாம் தமிழர்கள் என்று தலைநிமிர்ந்து நிற்போம் !
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு
அற்புதத் தமிழுக்கு உண்டு என்பது உணரு !
தமிழிலிருந்து பிறந்தவை தான் மற்ற மொழிகள்
தமிழ்ச் சொற்கள் பல உண்டு ஆங்கிலத்தில் !
கன்னடத்திலும் பல உண்டு தமிழ்ச்சொற்கள்
கேரளாவின் மலையாளத்திலும் உண்டு தமிழ்ச்சொற்கள் !
ஆதியில் சிறந்து பிறந்த அற்புதம் தமிழ்
அனைத்து மொழிகளின் தாய் நமது தமிழ் !
செம்மொழிகள் சில இருந்திட்ட போதும்
செம்மொழிகளில் சிறந்த மொழி நம் தமிழ் !
காலத்தால் அழியாத கற்கண்டு நம் தமிழ்
கண்டு உணர்ந்து கற்பிப்போம் குழந்தைகளுக்கு தமிழ் !
உழவைப் போற்றிடும் உன்னதத் திருநாள்
உழைப்பைப் போற்றிடும் ஒப்பற்ற நன்னாள் !
புத்தரிசிப் பொங்கலிட்டு புத்தாடைகள் அணிந்து
பூரித்து மகிழ்ந்திடுவோம் உலகத் தமிழர்கள் யாவரும்! !
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
தரணிக்கு உரக்க நீ சொல்லடா புறப்படு தமிழா!