எலியும் - கூண்டும்

வீட்டிற்கு வந்த விருந்தாளியை
விரட்டி விரட்டி துரத்துவது

உங்கள் இனத்திற்கு அழகில்லை
உள்ளத்திலிருந்து சொல்லுகிறேன்

தங்க இடமும் இல்லாமல்
கிடைக்கின்ற இடத்தில் வசித்துக்கொண்டு

எங்கள் வாழ்க்கையை கடக்கின்றோம்
ஏதோ நாங்களும் வாழ்கின்றோம்

உங்கள் வீட்டில் நாங்கள் வந்தால்
உங்களுக்கு என்ன பிரச்சனையோ

நிரந்தரமாகவா இருக்கின்றோம்
அவ்வப்பொழுது வந்து போகின்றோம்

எங்களையும் நீங்கள் எதிரிபோல
பாவிப்பதின் நோக்கம் என்ன

எதையும் திருட நாங்கள் வரவில்லை
எதையும் எடுத்துச் செல்லவும் முடியாது

பரந்து விரிந்த உங்கள் வீட்டில்
உல்லாசமாய் நாங்களும் திரிகின்றோம்

மறைந்து மறைந்து வாழவில்லை
உங்கள் கண் முன்னாலேயே இருக்கின்றோம்

நட்புக் கரம் நீட்டி எங்களை அழைத்தீரா
உணவு வகைகள் தான் கொடுத்தீரா

எங்களை நீங்கள் சிறை பிடிக்க
எல்லா யுக்தியையும் கையாளுகின்றீர்

இருந்தும் ...

ஆசை காட்டி மோசம் செய்யும்
அல்ப குணம் ஏன் உங்களுக்கு

கூண்டை வாங்கி அதில் உணவும் வைத்து
எங்கள் ஆவலை தூண்டுகிறீர்

எங்கள் மீது அக்கறை கொண்டு
இதை செய்கிறீர் என நினைத்து

பசியால் மயங்கி ஓடி வந்து
அவசரம் அவசரமாய் உண்கையிலே

இடியின் முழக்கம் போல வந்த சத்தத்தால்
நிலை குலைந்து நாங்கள் போகின்றோம்

விஷயத்தின் வீரியத்தை உணருமுன்னே
நாங்கள் சிறையில் இருப்பதை உணருகிறோம்

ஆசையாய் சாப்பிட்ட உணவும் தான்
செரிமானமாய் உடனே வெளி வருகிறது

பயத்தில் மனமும் வலிக்கிறது
ஏனிந்த பிறப்பு என நினைக்கிறது

கூண்டின் சத்தம் கேட்டவுடன்
உங்கள் மனதில் ஏன் இத்தனை ஆனந்தம்

நீங்கள் ஒன்றும் எங்களிடம்
நேரடியாய் மோதி ஜெயிக்கவில்லை

வஞ்சகம் செய்து எங்களை தோற்கடித்து
வெற்றி பெற்றதாய் நினைக்கின்றீர்

வெட்ட வெளியில் கொண்டு போய்
கூண்டை நீங்களும் திறந்து விட்டால்

துள்ளிக் குதித்து சென்றிடுவோம்
உங்கள் செய்கையை மெச்சிடுவோம்

ஆனால்....

அப்படி எதுவும் செய்யாமல்
கூண்டை கையில் பிடித்துக்கொண்டு

எங்கள் எதிரியை அன்பாய் அழைத்து
அவர்களுக்கு உணவாய் எமைக் கொடுக்கும்

உங்கள் புத்தியை என்ன சொல்ல
மனமும் மரத்துப் போகிறது

இவ்வளவு நடந்த பிற்பாடும்
உங்கள் இல்லம் தேடி வருகின்றோம்

எதிரியாய் நீர் எம்மைப் பார்த்தாலும்
நட்புக்கு கரம் நீட்டி காத்திருக்கின்றோம்

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (17-Jan-20, 2:38 pm)
பார்வை : 57

மேலே