காலத்தை வென்ற தமிழ்🙏🏽🙏🏽

காலத்தை வென்ற தமிழ்!!🙏🏽🙏🏽

தமிழா! தமிழா!
தலைதாழாதே
தலை வணங்காதே
தன்னிகரற்ற தமிழா
தாள் பனியாதே.

நீ போட்ட விதை.
நீ வளர்த்த மரம்.
பூத்து குலுங்கும் மலர்கள்.
காய்க்கும் பழங்கள்
எல்லாம் உனக்கு சொந்தம்.
நீ பறிக்க கூடாது என்று யாராவது சட்டம் போட முடியுமா?
நீ கட்டிய கோவில்.
நீ வடித்த சிலைகள்.
நீ வணங்கிய தெய்வம்.
இன்று நீ அருகே சென்று குடமுழுக்கு செய்ய உனக்கு உரிமை
இல்லையாம்.
அநியாயம்!
தமிழா!
இது உனக்கு மிக பெரிய இழுக்கு.


ஆதிதமிழன் வணங்கியது மூதாதியர்களை.
நடுகற்களாக நிறுத்தி
போரில் இறந்த வீரர்களை.
பின்பு வந்தது தான்
சிலை வழிபாடு கோயில்கள் எல்லாம்.

வேந்தனுக்கு எல்லாம் வேந்தன்!
மன்னாதி மன்னன்!
மறத்தமிழன்!
ராஜராஜசோழன் பெருந்தகை கட்டியதே
உலக அதிசயமாம்!
தமிழரின் பண்பாட்டு சின்னமாம்!
தஞ்சை பெருவுடையார் பெரிய கோயில்.
முதன் முதலில் ஆகம விதிப்படி தெய்வ மொழியாம் தமிழில் தான் தஞ்சை பெரிய கோயிலுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது.

விஜய சாம்ராஜ்யம் வரவுக்கு பின்பே ஆகமம் வடசொல் வடிவம் பெற்று
குடமுழுக்கு சமஸ்கிருதம் வசம் சென்றது.

நல்லதை, வல்லமையானதை
அனைத்தும் தன் மொழியில் மொழி பெயர்ப்பு செய்வது
ஆரியர்களின் பழக்கம்.
ஆகமம் அவர்கள் கூற்று படி
' வந்தது ' என்று அர்த்தம்.
அப்படி என்றால் தமிழிலிருத்து ஆகமவிதியை வடமொழிக்கு ஏற்றுமதி செய்தது யார்.
இங்கே பிறந்து சிவத்தொண்டாற்றிய சிவாச்சாரியார்கள்.
பிற்காலத்தில் அதுவே பழக்கம் ஆகிவிட்டது.

சிவன் உடுக்கையில் இருந்து பிறந்த மொழி தமிழ் என்றால் சிவனுக்கு குடமுழுக்கு செய்ய தமிழுக்கு அறுகதையில்லையா?
ஆகமவிதப்படி தான் கோயில்கள் கட்டப்பட்டது.
சரி, தமிழன் அதை ஆமோதிக்கிறான்.
ஆகமவிப்படி அதிகப்படியான கோயில் இருப்பது தமிழகத்தில் தானே.
அப்போது தமிழனுக்கு ஆகமம் தெரியாதா?
மந்திரங்கள் தெரியாதா?
பண் பாட தெரியாதா?
பூசை செய்ய தெரியாதா?
சிவனை வழி பட தெரியாதா?
நன்நீர் விட தெரியாதா?

பண்ணிரண்டு திருமுறையில் இருப்பது அனைத்தும் சிவனை போற்றி பாடுவதுதானே.
பக்தி இலக்கியம் தமிழில் இருப்பது போல் வடமொழியில் உண்டா?
அறுபத்து மூன்று நாயன்மார்கள், நூற்றி எட்டு சித்தர்கள், இப்படி சிவனே கதி, அவன் பணி செய்வதே எம் கடமை என்று இருந்தவரின் பட்டியல் நீளும். நீண்டு கொண்டே போகும்.

மறைத்து, செல்லரித்து கிடந்த, திருமுறை ஓலை சுவடுகளை தில்லையில் கண்டெடுத்து அந்த அறிய பெரிய பொக்கிஷங்களை வைத்து தானே பெருந்தகை ராஐராஜசோழன் தான் கட்டிய தஞ்சை பெரிய கோயிலுக்கு முதன் முதலில் தமிழில் குடமுழுக்கு செய்தான்.
பின் ஏன் தமிழில் இப்போது குடமுழுக்கு செய்ய மறுக்க படுகிறது.
ஏன்? ஏன்? ஏன்?

சிவன், உமையாள்,
அவன் நெற்றியிலிருந்து பிறந்த முருகன் எம் கடவுள்.
பதஞ்சலி முனிவர் பிற்காலத்தில் அறிமுக படுதியதே வினாயக பெருமான்.
சிவனின் குடும்பத்தில் அவரும் ஒரு அங்கம் வகித்தார்.
தமிழன் பெருந்தன்மையோடு அதையும் ஏன்று தொடர்ந்து சிவப்பணி செவ்வனே செய்தான்.

தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி!

திருச்சிற்றம்பலம் சிவபுராணம் - -நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன் அனேகன் இறைவன் அடிவாழ்க!

யாம் எந்த மொழிக்கும் எதிரியல்ல.
எந்த மொழியையும் குறைந்து பேசுவது தமிழனின் பண்பாடும் அல்ல.
எல்லாம் உள்ள எம்மொழியில்,
தமிழில், இறைவனுக்கு
தொண்டு செய்வதையே
யாம் விருப்ப படுகிறோம்.
வாழ்க தமிழ், வளர்க தமிழ்.

- பாலு.

எழுதியவர் : பாலு (1-Feb-20, 8:09 am)
சேர்த்தது : balu
பார்வை : 10899

மேலே