செப்பு
உறவுகளை இணைக்க எவளோ கண்டுபிடித்ததாம் இந்த செப்பு
சில உறவுகள் பூசாணம் பிடித்துக் கிடப்பதும் இந்த செப்பினாலே
சொபின் பேக்கினுள்ளே சீனியும் அங்கரும் சம்மாரம் கோரியிருக்க
கேக்குப் பெட்டி ரெண்டு கவுண்டு படுத்திருக்க அன்ன நடை போடுது செப்பு
சுமார் ஆயிரம் செலவழித்தால் உறவுக்கு ஓர் பலம் சேர்க்கும் செப்பு
பிள்ளை பிறந்தாலும் பெரிசு செத்தாலும் கையில் இருக்கணும் செப்பு
மாசம் பிறந்தாலே செலவுப் பட்டியலில் முன்னுக்கு வந்து நிற்கும் செப்பு
கல்யாண வீட்டிற்கு பெரிய பொட்டியிலே கொண்டு போயிடணும் செப்பு
நோன்பு வரமுன்பே மாமியாட்ட அனுப்பிடணும் 30 நாள் ஈச்சம்பழச் செப்பு
கலியாணம் முடிச்ச பின்பு மூணாம் நாளிலே அனுப்பிடனும் பிலால் செப்பு
மௌத்தான ஊட்டுக்கு மூணு கழியும் வரை ஆக்கி அனுப்பிடணும் சோத்துச் செப்பு
வருத்தக்கார வீட்டுக்கு கட்டாயம் கொடுத்திடணும் உப்பு விசுக்கத்து செப்பு
அல்லயல்காரிக்கும் கொஞ்சம் அனுப்பிடணும் வீட்ட காய்ச்ச மாங்கா செப்பு
புள்ளத்தாச்சி எண்டா மாமியாவும் அனுப்பிடணும் கொழுக்கட்டச் செப்பு
தெரிஞ்ச பிள்ளையொன்று வயசுக்கு வந்தாலும் கொடுத்திடணும் மோதிரச் செப்பு
அந்தப் புள்ள கெம்பசு போனாலும் அனுப்பிடணும் எலக்ரோனிக் செப்பு
“அவளவுக்கு வந்து பாக்க நேரம் கெடைக்கலயா” எண்டு அங்கலாய்க்கும் போதெல்லாம்
கூட வந்து நிண்டு எட்டிப்பார்த்து நிற்கும் அந்த எழவு பார்த்த செப்பு
சின்னத்துக் கலியாணத்துக்கு போக முன்னே மஞ்சக் கவருல காசிச் செப்பு
அதுவும் அவ வெச்ச வெகுமதியவிட ஆயிரம் கூட வெச்ச இறுமாப்பு
கையிலே செப்பின்றிப் போனாலோ வெறும் தேத்தண்ணி மாத்திரமே
செப்போடு நீ சென்றால் சம்ஸாவும் வாழைப்பழமும் வந்து நிற்கும் முன்னாலே
உறவுகள் ஒவ்வொன்றாய் கழன்று விழுவதைப் பார்த்தாயோ செப்பாலே
உறவாடு உன் உறவோடு செப்பின்றி மனதார மகிழ்வாக இன்றோடு
கவிச் செப்போடு
அப்துல் ஜப்பார் முஹம்மது தாஸீம்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
