என் மகனே

கண்ணான கண்ணா!
என் கனவுகளின் மன்னா!
கற்கண்டு சொல்பேசி
மயக்கிய மணிவண்ணா!

என் தோளே உன் தூளியாக
துயில்கொண்ட போதிலும்
மார்மீது உதைத்து எனை
மயக்கிநின்ற போதிலும்

மழலை அது மாறாமல்
மடியினில் விளையாடி
தாயென்ற பெருமைதனை
தரணிபோற்ற தந்தவனே!

பூமி வேகம் சுழன்றதனால்
புதுப் பருவம் எய்தவனே!
பார் போற்ற நாளும் நீ
புகழதனை பெற்றிடுவாய்...

பணம் ஒன்றே கொள்கையென
பறந்து திரிந்து ஓடாமல்
மானுடத்தை காப்பதிலே
மகுடத்தை வென்றிடுவாய்...

மலர் போன்ற வதனத்தால்
மாந்தர் உள்ளம் கவர்ந்திடுவாய்...
மாக்களையும் உன் அன்பால்
மனம் நெகிழச் செய்திடுவாய்...

மதிநுட்பம் அதைக் கொண்டு
மற்றவரை மடக்கிடுவாய்...
உன்னைப்போல் யார் ஒருவர்
உலகத்தில் இருந்திடுவார்?

நாள்தோறும் உனைநினைத்து
நானும் மகிழ்கின்றேன்...
உன் அருகாமை அதைத் தொலைத்து
உள்ளம் இழக்கின்றேன்...

வாழ்வாங்கு வாழ்ந்திடுவாய்!
வையகத்தை வலம் வருவாய்!
நிம்மதியை பெற்றே
நீடுழி வாழ்ந்திடுவாய்!

எழுதியவர் : திருமகள் மு (7-Feb-20, 9:02 am)
சேர்த்தது : திருமகள்
Tanglish : en makanae
பார்வை : 641

மேலே