மழலைக் குயில்
துரு துரு பார்வைகள்
புரியா மொழியின் கோர்வைகள்
ஒருங்கே கண்டேன் உன்னிடத்தே
அளப்பரிய தேகமும்
வலிக்கொணர்ந்த நெஞ்சமும்
சரியக்கண்டேன் என்னிடத்தே
நிலவை போன்றதொரு
மழலைக் கிளியைப் பார்க்க
வானவில்லும் தோன்றுகிறதோ
உன் கள்ளச் சிரிப்பலையை
களவு செய்யத்தான்
மயில் கூட்டமும் வட்டமிடுதோ
நித்தம் ஒருபொழுதும்
நிலையில்லா நீ ஒரு
குட்டி மேகச்சிலையோ
மொத்த பார்வையையும்
ஒருங்கே ஈர்க்கின்ற நீ
அரிய கருந்துளையோ
உள்ளங்கள் மெழுகாய்
உருகுதே உந்தன்
உதட்டுச் சினுங்களிலே
தேனீக்கள் வந்து
தேனைப் பாய்ச்சுதோ
உந்தன் மழலைக் கூச்சலிலே