முடிசூடலாம்

==============
ஒருநாளிலை யொருநாளுன துயிரானவ ராயே
=உறவாடிட நினைப்பாருட னுறவாவது தீதே
சருகாகிய இலைபோலுனை சதிராடிட தாமே
=சரியானதை பிழையேயென சதிப்பாரவ ராமே
இருவேடமு மிடுவாரவ ரிலைமேலுல நீரே
=இவராரென வறிவாயெனி ரிலையேதுய ராமே
உருமாமனி தரைபோலழ குடனோடுள தாலே
=உயர்வானவ ரெனநீயவ ரொடுகூடிட லாகா.
**
இழிவாயுனை நினைவாரவ ருடனாடிவி டாதே
=இரவோடிர வுளவாபுது களவாணிக லாயே
அழித்தேவிட மவதூறுட னவமானம தாலே
=அறுத்தேவிடு மெவராகிலு மகன்றேவிடு வாயே!
எழிலோவிய சிலைபோலுள இளமாதரை நாடா
=திருந்தேவிடு எதிரேவரு மிடரோடிடு மேடா
வழிமாறிய தறியாதவர் வலிமாறிட நீயே
=வழிபோலிரு விழிபோலிரு வரமேயது தானே!
**
விடியாதொரு பொழுதேயிலை விரைவாயெழு வாயே
=விதியேயென அழுதேமன முடைவாயது நோயே
இடியோமழை புயலோவெயி லெதுவோவரு மாமே
=எளிதாயவை கடந்தோடிட இளைஞாதுணி வாயே
கொடிபோலுனை மரமோடினை குறைவேதறி வாயே
=கொடைதானென கனிபூவவை கொடுப்பாயட நீயே
முடியாதென முயலாலது முடிவாகிட லாகா
=முடிவோடொரு முடிவேயெடு முடிசூடிட லாமே!
**
*

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (16-Feb-20, 2:23 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 59

மேலே