யாருக்கு இன்டெர்வியூ - சிறுகதை மீமணிகண்டன்

யாருக்கு இண்டெர்வியூ?
கதை: மீ.மணிகண்டன்
நாள்: 02-Dec-2019

சமையற்கட்டில் தேநீர் ஆற்றிக்கொண்டிருந்தான் பிரகாஷ். குடித்துவிட்டு நாளை இன்டெர்வியுவிற்கு நன்றாக தயார் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் ஆற்றிய தேநீரை ஒரு குவளையில் எடுத்துக்கொண்டு தன் அறை நோக்கிச்சென்று கொண்டிருந்தான், எதிர்பாராத விதமாக எதிரில் நண்பன் சினேகன் வரவைப்பார்த்து "வாடா இப்பதான் வறியா ?"

"ஆமா... "சற்று நிதானித்துத் தொடர்ந்தான், "சொல்லவே இல்ல ..." என்றான் சினேகன்.

"என்னடா.."

"நாளைக்கு இன்டெர்வியூவாம்..."

"யாரு சொன்னா...", கேட்டான் பிரகாஷ்.

"அம்மாதான்... நேற்று வீட்டிற்கு வந்திருந்தாங்க... அப்ப... சொன்னாங்க..."

"முதல்ல உட்காரு..." என்று சினேகனை உட்காரச்சொல்லிவிட்டு தானும் சோஃபாவில் அமர்ந்தான். "இதென்ன முதல் இன்டெர்வியூவா... எத்தனை இடத்துக்கு பொய் வந்தாச்சு..." அலுத்துக்கொண்டான் பிரகாஷ்.

"யு டோன்ட் ஒர்ரி டா, இப்பதான் சனி திசை மாறுது இல்ல.... உனக்கு எல்லாமா நல்லா நடக்கும்.."

"இது யாரு சொன்னா.."ஆச்சர்யமாக கேட்டான் பிரகாஷ்.

"ம்... அம்மாதான்..."

"ஏண்டா.. அம்மா உங்க வீட்டுக்கு வந்தது என்னப்பத்தி எல்லாத்தையும் சொல்றதுக்குத்தானா... வரட்டும் வச்சுக்கறேன்..."

"அதிருக்கட்டும்... இப்ப எங்க இருக்காங்க அம்மா..."

"ம்... அக்கா வீட்டுக்கு போயிருக்காங்க நாளைக்குத்தான் வருவாங்க..." என்று பதிலளித்தான் பிரகாஷ்.

"ஒ... அப்ப தனியாத்தான் இருக்க... சரி விடு... இந்தத்தடவை நீ பாஸ் பண்ற... அத நாம கொண்டாடுறோம்.... கிளம்பு..." என்று எழுந்து பிரகாஷ் கையைப் பிடித்து எழச்சொன்னான் சினேகன்.

"கொண்டாட்டம் எல்லாம் இன்டெர்வியுவிற்கு அப்பறம்..." என்று மறுத்த பிரகாஷ் தொடர்ந்தான், எனக்கு வேற சனி திசை ஆரம்பிக்குதாம் இன்னிலேருந்து ரொம்ப கவனமா இருக்கணும், அவசியம் இல்லாம நான் வெளியில வர்றதா இல்ல..." என்று தீர்மானமாகச்சொன்னான் பிரகாஷ்.

"அது நீயா தனியா போகும்போது பாத்துக்கோ, இப்ப என் கூடத்தான் வரப்போறே... சோ டோன்ட் ஒர்ரி..." என்றான் சினேகன்.

"இப்ப எங்க என்ன இவ்வளவு அவசரமா கூப்புடுற..." என்று சற்று வேகமானான் பிரகாஷ்

"பிரகா..ஷ், நீயும் தனியாத்தான் இருக்க வா ரெஸ்டாரெண்ட் போயிட்டு டின்னர் முடிச்சுட்டு வருவோம்..." என்றான் சினேகன்

சட்டென சனியின் நினைவு வந்தது பிரகாஷிற்கு, 'அச்சச்சோ.... சனி ஸ்டார்டிங்... வெளில வந்தா ஒண்ணுக்கு ரெண்டா செலவாயிடும்.... நோ நோ... நான் வரல..."

"பிரகாஷா.... " சற்று யோசித்தான் சினேகன், பின் தொடர்ந்தான், "சரி இப்படி வச்சுக்குவோம்..."

"என்ன...."

"நான் சாப்பிடறதுக்கு நான் பில் பெ பண்றேன்.... உன் சாப்பாட்டுக்கு நீ பெ பண்ணு... ஓகே ?" என்று கேள்வி தொடுத்தான் சினேகன்.

நண்பனின் வற்புறுத்தலை தவிர்க்கமுடியாமல் பிரகாஷும் யோசித்தான், 'சரி நான் சாப்பிடறதுக்கு நான்தானே பெ பண்ணப் போறேன்... ஓகே சொல்லுவோம்', என்று சிந்தித்தபடி சினேகனுக்கு பதிலளிக்கத்தொடங்கினான், "சரி... ஆனா வெஜ் ரெஸ்டாரெண்ட் தான் போகணும்... அப்பனா வறேன்..."

பிரகாஷின் சம்மதம் கிடைத்ததே பெரிய சங்கதி என்று எண்ணிக்கொண்டு, "சரி", என்றான் சினேகன்.

ரெஸ்டாரண்ட் சென்ற இருவரும் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்து மெனுவை வாசிக்கத்தொடங்கினர். உணவு பரிமாறுபவர் அருகில் வந்து "என்ன சாப்பிடறீங்க..." என்றார் பிரகாஷைப் பார்த்து.

"அவனைக் கேளுங்க அதுக்குள்ளே நான் கொஞ்சம் மெனு பார்த்துக்கறேன்.." என்றான் பிரகாஷ்.

"சார் என்ன சாப்பிடறீங்க..." என்றார் சினேகனைப் பார்த்து

"காபேஜ் கட்லெட் இரண்டு, ஆனியன் ரவா கீ அதிகமா போட்டு ஒண்ணு, அப்பறம் மினி இட்லி வித் சாம்பார்..." என்று தன் ஆர்டரை முடித்தான் சினேகன்

ஆர்டர் எடுத்துக்கொண்ட அவரும் மீண்டும் பிரகாஷிடம் வந்து, "சார் ரெடியா..." என்றார்

சனியின் நினைவு வரவே ஏதும் வில்லங்கத்தில் மாட்டிவிடக் கூடாது என்று எண்ணி தன் பேண்ட் பாக்கெட்டை தடவிப் பார்த்தான் பிரகாஷ், வாலெட் இருந்தது. மெனுவை மூடி வைத்துவிட்டு, "ம்..." என்றான் பிரகாஷ்.

"சொல்லுங்க..."

சற்று யோசனைக்குப் பிறகு, "ஒரு… மசால் தோசை..." என்றான் பிரகாஷ்

"வேற..." என்றார் ஆர்டர் எடுத்தவர்.

"ம்.." அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, "மசால் தோசை..." என்று சொல்லிவிட்டு அவ்வளவுதான் எண்பதுபோலத் தலையசைத்தான் பிரகாஷ்.

"ஓகே சார்... வேற..." என்றார் ஆர்டர் எடுப்பவர் மும்முரமாக கையில் டச் பேடில் ஆர்டர் குறித்துக்கொண்டே...

தான் தலையசைத்தது இவருக்குப் புரியவில்லையோ என்ற நினைப்பில், "மசால் தோசை அவ்வளவுதான் சார்.." என்று முழுதாகச்சொல்லி முடித்தான் பிரகாஷ்.

"ஓகே... சார்.." என்று நகர்ந்தார் ஆர்டர் எடுத்தவர்.

ஆர்டர் எடுப்பவர் சென்றதும், சினேகனைப் பார்த்துக் கேட்டான் பிரகாஷ், "ஏண்டா காலைல இருந்து ஏதும் விரதமா..."

"ஏண்டா..."

"இல்ல... வரிசையா ஆர்டர் பண்றியே.. அதான்..."

"வர்றது எப்பவோ ஒரு தடவை... வரும்போது என்ஜோய் பண்ணனும்... அதான் இத்தனை ஆர்டர்..."

"ஓகே ஓகே..." என்று சினேகனுக்கு பதில் சொன்னாலும் மனதுக்குள் நினைத்துக்கொண்டான் 'நீ சாப்பிடறதுக்கு நீதானே பெ பண்ணப்போற'. பிரகாஷின் கை ஒரு முறை பேண்ட் பாக்கெட்டை தடவிப் பார்த்துக்கொண்டது.

சற்று நேரத்தில் அவர்கள் ஆர்டர் மேசைக்கு வந்தது.

"சார் கேபேஜ் கட்லெட்.." என்றார் பரிமாறுபவர்
"அங்க வைங்க.." என்று எதிர்பக்கத்தைக் காட்டி சினேகனிடம் வைக்கச்சொன்னான் பிரகாஷ்,

"ஆனியன் ரவா..."

"அதுவும் அங்கே வைங்க..." என்று எதிர் திசையைக் காட்டினான் பிரகாஷ்.

"இது மினி இட்லி..."

"அதுவும் அங்கே தான்..." என்றான் புன்னகையோடு பிரகாஷ்.

சினேகனின் ஆர்டரை பரிமாறி முடித்த அவர், மூன்று தனித்தனி தட்டுகளில் மூன்று மசால் தோசைகளை பிரகாஷின் முன் வைத்தார் சிப்பந்தி.

"என்னது மூணு..." என்று சந்தேகமாகக் கேள்வி தொடுத்தான் பிரகாஷ்.

"உங்க ஆர்டர் சார்.." என்றார் புன்னகையோடு சிப்பந்தி.

"நான் மசால் தோசை ஒண்ணுதானே கேட்டேன்..." என்று அப்பாவியாகக்கேட்டான் பிரகாஷ்.

"சார் நல்லா யோசிச்சுப் பாருங்க... நான் வேற வேற ன்னு கேட்டபோதெல்லாம் நீங்க மசால் தோசைதான் ஆர்டர் பண்ணீங்க, எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... மூணாவது மசால் தோசை செல்லும்போதுதான் நீங்க அவ்வளவுதான்னு சொன்னீங்க... சந்தோஷமா சாப்பிடுங்க சார்..." என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சிப்பந்தி.

பிரகாஷிற்கு அசரீரி ஒலித்தது, "சனி ஆரம்பம் ஆகுது, வாய் வார்த்தையிலே கவனமா இருக்கணும்", சனி இப்படியும் வேலையைக் காட்டுமா என்று அண்ணாந்து பார்த்தான் பிரகாஷ்.

****

அழைப்பு மணி ஓசை கேட்டு உறக்கம் களைந்து எழுந்தான் பிரகாஷ். வாசல் நோக்கி நடந்தான், கதவைத்திறன்தான் வெளியில் அம்மா. "என்னம்மா, காலைலயே வந்துட்ட, அக்கா வெரட்டி விட்டுடுச்சா.." என்றான் பிரகாஷ் வாசலில் நின்றிருந்த அம்மாவைப் பார்த்து.

"டேய் உன்ன இன்டெர்வியூவுக்கு அனுப்பணுமில்ல, அதான் சீக்கிரமா வந்துட்டேன்", என்று சொல்லிக்கொண்டே கையில் பையுடன் உள்ளே நுழைந்தவர் வேகமாக சமையல் அறைக்குச் சென்றார், "சீக்கிறம் குளிச்சுட்டு கிளம்புடா, அக்கா வீட்டுல இருந்து டிஃபன் கொண்டு வந்துட்டேன், நீ குளிச்சு முடிச்சு வந்த உடனே சாப்பிட்டுட்டு கிளம்பலாம்" என்றாள் அம்மா.

"அது ஒரு உப்பில்லாத உப்புமா கிண்டியிருக்கும், அத மாமா வேணும்னா தலையெழுத்தென்னு சாப்பிடலாம், இத வேற நீ பத்து ஊருக்கு கேட்குறமாதிரி அக்கா வீட்டு டிஃபன்னு பெருமையடிச்சுக்கற"

"ம்... உனக்கும் ஒருத்தி பொண்டாட்டியா வருவாள்ல, அப்ப அவ இதையாவது கிண்டுறாளான்னு பாக்குறேன்" என்றாள் அம்மா கோபமாக.

"ஆமா… முன்னாடி என்ன சொன்ன இன்டர்வ்யூவா... ஆ... இன்னிக்கு இன்டெர்வ்யூ... அச்சச்சோ.. மறந்தேபோச்சு..." அவசரமானான். மனதுக்குள் எண்ணிக் கொண்டான், "ம்... மூணு மசால் தோசையை மொத்தமா தின்னா தூக்கம் வராம என்ன வரும்"

குளித்து விட்டு வந்த பிரகாஷ் அவசரம் அவசரமாக தன் அறைக்குச்சென்று அலமாரியில் இருந்து தேடி அயன் செய்த சட்டை பேண்டை எடுத்தான். உடையணிந்தவன் வேகம் வேகமாக பாலிஷ் செய்து வைத்திருந்த ஷூவை அணிந்தான்.

"டேய்... டிஃபன்..." என்றாள் அம்மா

"அந்த ரவையை நீயே சுவை, நான் இன்டர்வ்யூ சக்ஸஸா முடிச்சுட்டு வெளில விருந்தே சாப்டுக்கறேன்" என்று பதில் அளித்தான் பிரகாஷ்.

"கண்ணா இந்தா விபூதி சாமிய நல்லா மனசில நினைச்சுக்கோ" என்று சொல்லிக்கொண்டே பயபக்தியுடன் தெய்வங்களை வேண்டிக்கொண்டு பிரகாஷின் நெற்றியில் பூசிவிட்டார்.

"இத பூசிக்கிட்டா வேலை கன்பார்ம் ஆயிடுமா", நக்கலாகக் கேட்டான்.

"டேய் பேசாம சொல்றத கேளு, போன இன்டர்வ்யூ நான் சொன்னதை நீ கேட்கல, இப்ப சனி திசைவேற ஆரம்பிச்சிருக்கு"

"இப்படி செஞ்சா சனி பயந்துடுமா?" என்று கேட்டான் பதிலுக்கு

"அப்படி இல்லடா ஒரு பாசிட்டிவ் வைப்ரஷன், அதுக்குதான் இதெல்லாம்"

"சரி சரி... நான் கிளம்பறேன்" அம்மாவிடம் விடைபெற்று கிளம்பினான் பிரகாஷ்.

****

வேகவேகமாக தனக்கான இன்டர்வ்யூ அலுவலகம் வந்தடைந்தான் சரியான நேரத்திற்கு வந்துவிட்டோமா என்று ஒரு முறை கைக்கடிகாரத்தை சரி பார்த்தான். 'அம்மா நீ கொஞ்சம் முன்னாடி வந்து என்ன எழுப்பிவிட்டிருந்தா இப்ப இப்படி லேட்டா வந்திருக்கமாட்டேனெ..' மனதுக்குள் எண்ணியவாறே ரிசெப்ஷன் சென்று அங்கிருந்த பணிப்பெண்ணிடம், "ஹை ஐ அம் பிரகாஷ், ஐ ஹேவ் அன் இன்டர்வ்யூ அப்பாயின்ட்மென்ட் டுடே" என்றான் அவசரமாகவும், மெதுவாகவும், அதேவேளை புன்னகை கூட்டிய முகத்தோடும். மனதினுள் எண்ணிக்கொண்டான், 'இவ்ளோ அழகா இருக்காளே கடலை போடுறதுக்கு கொஞ்சம் கூட நேரமில்லையே...'

பணிப்பெண்ணும் புன்னகை தவழும் முகத்தோடு பதில் தந்தாள், 'ப்ளீஸ் உட்காருங்க, வீ வில் கால் யு'

சற்று நேரத்தில் அழைப்பு வர இன்டர்வ்யூ அறைக் கதவைத் தட்டினான், "மே ஐ கம் இன்.."

"எஸ் ப்ளீஸ்..." உள்ளிருந்து பனியுருகும் குரலொன்று அழைக்க, அழைத்தவளைப் பார்த்த மாத்திரத்தில் அதிர்ந்தேவிட்டான் பிரகாஷ், 'வாவ் வாட் எ பியூட்டி' மனதினுள் நினைத்தவன் மின்னல் வேகத்தில் எண்ண அலைகளில் அவளுக்கு காதல் தூது விட்டான், 'எப்படியும் இன்டர்வ்யூ பாஸ் பண்றோம் இவள லவ் பண்றோம்' முடிவுடன் உள்ளே நுழைந்த பிரகாஷ் வாய் திறந்தான், "தேங்க்ஸ்..."

"ப்ளீஸ் ஹேவ் யுவர் சீட்...' என்று தனக்கு எதிர் இருக்கையைக்காட்டி இருக்கச்சொன்னாள் அவள்.

"ஐ அம் ப்ரேமி, இங்க ஐ டி டிவிசனுக்கு நான் தான் ஹெட், கேன் வீ ஸ்டார்ட்?" என்று அடுக்கிக்கொண்டே போனாள் அந்த ஐ டி ஹெட்

உறைந்திருந்த பிரகாஷ் சற்று சுதாரித்து, "சாரி..." என்று வினவினான்

"ஐ மீன்.. இன்டர்வ்யூ ஸ்டார்ட் பண்ணலாமா..." என்றாள்

"ஷுர்..."

ஒரு முறை தன் கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்ட அவள் தொடர்ந்தாள், "இன்டெர்வுவிற்கே இவ்வளவு லேட்டா வர்ற நீங்க எப்படி தினமும் வேலைக்கு கரெக்ட் டைமுக்கு வருவீங்க?"

"அச்சச்சோ, அப்படி இல்ல... நீங்க வேலை மட்டும் குடுத்துப் பாருங்க நான் வீட்டுக்கே போகமாட்டேன்." என்று பவ்யமாக பதிலளித்தான் பிரகாஷ்.

"கடிகாரத்துல எத்தனை முள் இருக்கு ?" என்று கேட்டாள் ஐ டி ஹெட்

"இது இன்டர்வ்யூ கொஸ்டியனா?" என்று கேட்டான் பிரகாஷ்

"என்ன பதில் சொல்லாம கேள்வி கேட்கறீங்க..." என்றாள் சற்று வேகமாக

"இல்ல...புரோகிராமர் வேலைக்கும் கடிகார முள்ளுக்கும் என்ன ரிலேஷன்னு யோசிச்சுப் பார்த்தேன்..." என்று மெதுவாக பதிலளித்தான் பிரகாஷ்

"இப்பவே கொஸ்டியன் பண்றீங்க... உங்க சீனியர் ஒரு ஜாப் கொடுத்தா அதையும் இப்படித்தான் ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்பீங்க இல்லையா.."

அசரீரி ஒலித்தது "சனி ஆரம்பம் ஆகுது வாய் வார்த்தைல ஜாக்கிரதையா இருக்கணும்". எங்கே வேலை கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் அவசரமாக, "மேம்... அப்படியெல்லாம் இல்ல... இனிமே நான் வாயே தொறக்க மாட்டேன்" என்று சரண்டர் ஆனான் பிரகாஷ்

சற்று நேர உரையாடலுக்குப் பிறகு அறையின் கதவு தட்டப்பட்டது.

"எஸ் கம் இன்..." என்றாள் பிரேமி

உள்ளே நுழைந்தவர் பெரிய அதிகாரியாக இருக்கவேண்டும் என்பதை அவர் உடையிலேயே உணர்ந்துகொண்டான் பிரகாஷ். உள்ளே நுழைந்த அந்த அதிகாரி ப்ரேமி இருக்குமிடம் சென்று அவளை பாராட்டி கைகுலுக்கினார், "எக்ஸலண்ட் பெர்பார்மென்ஸ்... அப்ரஸியேடட்... நாங்க எதிர் பார்த்துக்கு மேலயே நீங்க பெர்பார்ம் பண்ணியிருக்கீங்க... உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் மெயில் பண்ண சொல்லியிருக்கேன்..." என்று சொல்லிக்கொண்டே போனார் அந்த அதிகாரி.

அவளும் புன்னகை மாறாமல் எழுந்து நின்று பாராட்டுகளை ஏற்றுக்கொண்டு, "தேங்க்ஸ் சார்" என்றாள் பணிவுடன்.
நடப்பது என்னவென்று புரியாமல் சந்தேகப் பார்வையுடன் எழுந்தான் பிரகாஷ், அதிகாரியிடம், "சார், நீங்க எனக்கு தான் அப்பாயின்மென்ட் ஆர்டர் தரணும், தேங்க்ஸ் சோ மச்... நான் தான் இன்டெர்வியு கேண்டிடேட்", என்று தனது டையை சரிசெய்துக்கிண்டு பவ்யமாக நின்றான்.

"ஹா ஹா... தாங்ஸ் மிஸ்டர் பிரகாஷ், இன் பாக்ட் இன்னிக்கு பிரேமிதான் கேண்டிடேட், அவங்களுக்குத்தான் இன்டர்வ்யூ, எங்க ஹெச் ஆர் ல ஒரு பொசிஷனுக்கு அப்ளை பண்ணியிருந்தாங்க, ஒரு புது கேண்டிடேட்டை அவங்க எப்படி இன்டர்வ்யூ பண்றாங்கன்னு நாங்க பக்கத்து ரூம்ல இருந்து மானிட்டர் பண்ணிட்டிருந்தோம், ஷி டிட் வெல். பை தி வே ஆல் தி பெஸ்ட் பார் யுவர் ஜாப் செர்ச்". என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த அதிகாரி.

"சனி எந்த நேரத்துல எந்த ரூபத்துல வருமுன்னு யாராலையும் சொல்லமுடியாது" அசரீரி ஒலித்தது ப்ரகாஷிற்கு.

எழுதியவர் : மீ.மணிகண்டன் (19-Feb-20, 5:57 pm)
சேர்த்தது : மீ மணிகண்டன்
பார்வை : 328

மேலே