சொந்த ஊர் பெருமை

காட்டுமன்னார்குடி

என் ஊர் சாதிவெறியர்கள் கலந்த ஊர்
என முத்திரை குத்தும் சிலருக்கு
விளக்க பதில் இதோ!

ஏதோ என் ஊரில் எங்கோ ஓரிடத்தில் அடித்துக்கொள்ளும்
வெட்டிக்கொள்ளும் நிகழ்வை சித்தரித்து
பத்திரிக்கையில் ஒட்டினால்
அது சாதிவெறி நிகழ்வென்றால்
தமிழ்நாட்டின் மொத்த ஊர்களின்
நிலையும் அதுவேதான்...!

என் ஊரின் நிகழ்வை
நான் காண்பது வேறு கோணம்;
என் நட்பு வட்டம் மும்மதமும் கலந்திருக்கும்
அதில் சாதியை தேடினால் எடுக்கமுடியாது
சாதி அங்கே சங்கமித்திருக்கும்;

இங்கு விழாக்களில் எல்லாம்
மும்மதத்தையும் மொத்த சாதியையும்
அதிகமாய் காணலாம் உறவுகளைவிட!
என் ஊரில் மனிதம்
முளைத்துக்கொண்டிருக்கிறது
அது முழுதாய் இணையாது ஏதோ
சில சக்திகள் தடுக்கலாம்
அந்த சிறு விரிசலின் தாக்கத்தை
வரிகளாய் பத்திரிக்கைகளில் வடித்தும்
ஒலிகளாய் மேடைகளில் உரைத்தும்
ஒளிகளாய் செய்தி வழி கொடுத்தும்
உசுப்பேற்றப்படுகிறது இங்கு!

என் ஊரிலே சாதிக்கட்சிகள் அதிகமென்பர்
சாதிக்கட்சிக்கும் சமத்துவத்துக்கும்
சம்மந்தமில்லை அது வேறு!
என்னோடு என் நண்பன் இருக்கும் தருணம்
மனிதனாய் இருக்கிறான்;
அவன் வீட்டுக்குள் அவன் மதத்தை
அவன் சாதியை நேசிக்கிறான்
இதுவே நிதர்சனமான உண்மை;
இது ஆரோக்கியமான நன்மை;
குற்றம் கண்டுபிடிக்கும் கூட்டம்
ஆராய்ந்தால் குற்றத்தை
குடம் குடமாய் வடித்தெடுக்கலாம்
இங்கும் எங்கும் எதிலும்...!

என்ன செய்தாலும் அதை நிராகரித்து
நிறைகளை மட்டும் கொண்டாடி
தெளிவான கண்ணோட்டம் இருப்பின்
என் ஊர் எல்லோருக்கும்
எடுத்துக்காட்டான ஊர்;
காரணம்
என் ஊரில் வெட்டுக்குத்து இருக்கலாம்
எந்த குழந்தையும் இங்கு
வன்புணர்ச்சி செய்யப்பட்டதில்லை;
எந்த பெண்ணுக்கும் இங்கு
பாலியல் தொல்லை இல்லை;
மிகப்பெரிய களவாணிகள் இல்லை;
ஊழல் பெருச்சாளிகள் இல்லை;
என் ஊரில் எல்லாமே
மீசை வைத்த குழந்தைகள்;
அவர்கள் முழுதாய் யோசித்து விட்டால்
இங்கு நல்லவைகளை தவிர
எதுவுமே இல்லை...!

-மன்னை சுரேஷ்

எழுதியவர் : மன்னை சுரேஷ் (22-Feb-20, 11:45 am)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : sontha oor perumai
பார்வை : 27

மேலே