கனவு மெய்ப்பட வேண்டும்
முப்போதும் நல்லதமிழ் காதில்விழ வேண்டும்!
முத்தமிழே எந்நாளும் பாராள வேண்டும்!
தப்பேதும் நடவாத தனியுலகம் வேண்டும் !
தன்மானம் சிதறாத சமத்துவமும் வேண்டும்!
ஒப்பில்லாத் தலைமையுடன் நல்லாட்சி வேண்டும் !
ஊழலென்ற ஒன்றென்றும் இல்லாமை வேண்டும் !
அப்பழுக்கில் லாதமனம் யாவர்க்கும் வேண்டும் !
அடைமழையாய் உளத்திலன்பு பொழிந்திடவே வேண்டும் !!
சாதிமதம் இல்லாத சமுதாயம் வேண்டும்!
தரணியிலே தமிழருக்கு முன்னுரிமை வேண்டும்!
வீதியெங்கும் தமிழ்த்தேரே பவனிவர வேண்டும் !
வீற்றிருக்கும் தமிழன்னை அகங்குளிர வேண்டும் !
பேதமின்றி உயிர்களிடம் பரிவுகாட்ட வேண்டும் !
பெற்றோரைத் தெய்வமென மதித்தொழுக வேண்டும் !
போதிமரம் இருமருங்கில் சாலைகளில் வேண்டும் !
புத்தனைப்போல் எல்லோரும் ஞானம்பெற வேண்டும் !!
மதுவென்ற அரக்கனையே ஒழித்துவிட வேண்டும்!
மலர்ந்தமுகத் தோடுபெண்கள் நடமாட வேண்டும் !
எதுவேண்டு மென்றாலும் உடன்கிடைக்க வேண்டும் !
இயற்கையுடன் இயைந்துவாழும் பெரும்பேறு வேண்டும் !
நதிகளெல்லாம் ஒன்றிணைந்து வளங்கொழிக்க வேண்டும் !
நலம்பெருகி உழைப்பாளர் நிலையோங்க வேண்டும் !
பொதுநலத்தைப் பேணும்நல் வாழ்வமைய வேண்டும் !
பொன்னான என்கனவு மெய்ப்படவே வேண்டும் !!!
சியாமளா ராஜசேகர்