காதலின் கடைசி நிமிடங்கள்

இன்று உன் திருமணம் இந்த வாக்கியம் ஒன்று மட்டுமே என் நெஞ்சில் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது.

உன் ஞாபகங்கள் என்னை அணு அணுவாக உருக்குலைத்து, என்னை ஏதுமற்றதாக்கி ,நான் தனிமையில் கண்ணீரோடு கணம், கணம் வடிந்து ஒடிந்து போன வேளையில் தான், உன் திருமண அழைப்பிதழை நீ எனக்கு கொரியரில் அனுப்பி வைத்தாய்.

ஒரு காய்ச்சிய சுடு நீரை தொட்டது போல என் தேகம் அப்படி சுட்டது அதனை தொடுகையில். ஏனோ அதை தூக்கி எறிய முற்படுகையில் கண்ணை கவரும் வண்ண நிறத்தோடு நீ நின்ற புகைப்படத்தை நீண்ட நாள் கழித்து நெடு நேரம் பார்த்தேன். என் பார்வையெல்லாம் நீயாகிக் கொண்டிருந்த அந்த தருணம் அழைப்போசை என் செவியைத் தீண்ட மெல்ல சென்று அதை என் காதில் அணைத்தேன்.

அந்த சுவாசம் உணர்த்தியது அது நீ என்பதை. நீ பேசுவதற்கு அவஸ்தைபட்டுக் கொண்ட நிமிடத்தில் நான் என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு உன்னிடம்

சொல்லு ஜனனி என்றேன்

அந்த மூன்றெழுத்து நீண்டு ஒலித்த போதும் உன் பதில் மௌனமாக இருந்தது. கணங்களோடு நீ என்னை நினைத்து கண்ணீர் வடித்திருப்பாய் போல அது முனகலோடு சேர்ந்து கொஞ்சம் அனலாக வீசியது.

நீண்ட நேரத்திற்கு பின் உன் சொற்கள் அழுகையை இசைந்துக் கொண்டு தெளிவில்லாமல் உதிர்ந்து வந்தது.ஆனால் அதை முழுதுணர்ந்தவனை போல மெல்ல தலையசைக்கிறேன் ஏன் தெரியுமா நீ என்ன பேசுவாய் என்பதை என் இதயம் முன்னுணர்ந்த காரணத்தால்.

நான் பதிலேதும் கூறவில்லை ஆனால் உன் பதிலை இறக்கிவைத்தாய் துண்டிக்கப்பட்ட அழைப்பின் மூலமாக.ஒரு கனமான கேள்வி வலைக்குள் என்னை போட்டு நீ இறுக்க பார்க்கிறாய் அது தான் உன் திருமணம்

நினைவுகளை பின்நகர்த்தி சென்று பார்க்கையில் நமக்குள் எந்த பாகுபாடும் இல்லாமல் தான் பழகினோம். வழக்கமான சண்டைகள் கூட நமக்குள் ஒரு பிணைப்பை தான் ஏற்படுத்தியது. ஒருவரை நன்கு புரிந்துகொண்ட பின்னர் தான் நாம் அலட்சியமாக இருந்து விடுகிறோம் போல. இதில் நானும் விதிவிலக்கு அல்ல

அன்று மனமுருகி நீ என்னை உன் பிறந்த நாள் விழாவிற்கு அழைத்த போது ஏதொவொரு அலட்சியம் நான் அதை புறக்கணித்தேன். அதன் பின் ஒன்றிரண்டு முறை உன் பேச்சின் தோரணைகள் மாறி என்னை சங்கடப்படுத்தினாய் ஆனால் அன்று நான் உன் பிறந்த நாளை புறக்கணிக்க முக்கிய காரணம்  அலட்சியத்தை தாண்டிய மெல்லிய பயமென்று சொன்னால் பொருந்தும்.

உன் தந்தையிடம் நம் காதலை தெரிவிக்கும் சந்தர்ப்பமாக ஏனோ அதை பயன்படுத்திக் கொள்ள நீ முனைந்தாய். உண்மையில் சொல்ல வேண்டுமானால் அன்று உன்னை கல்யாணம் செய்து கொள்வதை ஏனோ வெறுத்தேன் அது என் சுதந்திரத்திற்கு தடையாக இருக்கும் என உணர்ந்து அந்த கொடிய முடிவை சாதாரணமாக எடுத்தேன். நீ எப்படியும் எனக்கென்ற ஒரு குருட்டுத்தனமான திமிர்.

ஒரு வாரம் கழித்து நீ உனக்கு வேறு மாப்பிள்ளை பார்த்து விட்டதாக தெரிவித்தபோது நிச்சயம் உடைந்து போனேன்.சுக்குநூறாக தூள் தூளாக.

எத்தனை பெரிய ஏமாற்றம் அதுவென்றால் நீ அதை கஷ்டத்தோடு சிரித்தவாறே கூறியது தான். நான் அந்த கணம் உன்னை பார்த்தது நீயில்லை உன்னை கட்டாயப் படுத்தி சொற்றொடர்கள் நிரப்பி அனுப்பி வைத்த உன் பெற்றோரின் தற்கொலை பயத்தை.

நீ என் முடிவை கேட்க வரவில்லை உன் முடிவை கூறிச் செல்லவே வந்தாய் என்பது உன் முகம் தழுவிய பயம் கலந்த பதட்டத்தில் தெரிந்தது. எனக்கு அப்பொழுது சொல்ல தோன்றியதெல்லாம் ஒன்றெயொன்று தான் நீ என்றுமில்லாது அன்று அவ்வளவு அழகாக இருந்தாய் இத்தனை நாள் இருந்த நெருக்கத்தில் இதை எப்படி இரசிக்க தவறினேன் இல்லை இந்த திடீர் இடைவெளி உண்டாக்கிய மெல்லிய வெளிச்சமா அது

எப்படியென்றாலும் நீ என்னை தாண்டி எங்கோ நெடுந்தூரம் சென்றுவிட்டதை உணர்ந்து மெல்ல இறுகி போனேன் இன்றும் அந்த இறுக்கம் தான் என்னை உன்னிடமிருந்து துண்டித்து கொண்டிருக்கின்றது.

கல்யாண மேடையில் நீ அலங்கரிக்கப்பட்ட மலர் போல மனையில் அமர்ந்து மந்திரம் ஓதும் அய்யர் கொடுத்த எதையோ சிறுக சிறுக மூட்டிய நெருப்பில் தூவிக் கொண்டிருந்தாய் ஒருவேளை அது என் காதலையா இல்லை அந்த குற்றத்தை உனக்கு அளித்த என்னையா தெரியவில்லை

எரியும் நெருப்பு அருகே உன் முகம் குனியும் போது பனித்துளி போல உன் முகத்தில் சிந்தும் வியர்வையை நீ உன் கைக்குட்டை கொண்டு அலட்சியமாக துடைத்தாய்

அதீத முகப்பூச்சுகள் வடிந்து உன் முகம் மெல்ல அழகாகிக் கொண்டிருந்தது மாப்பிள்ளை அங்கே அப்போது தலைநீட்டினான் நல்ல ஆரோக்கியமான வீட்டுப் பிள்ளைப் போல. முகத்தில் பாலோடு சேர்ந்து கொஞ்சம் வியர்வையும் வடிந்தது.

திரும்பும் திசையெங்கும் பேச்சொலிகள் வளையல் குலுங்கள்கள் சமான் உருளல்கள் நாற்காலி நகர்த்தல்கள் மின்விசிறி சுழல்கள் குழம்பிய நிலையில் நான் ஓர் மூலையில் கிடந்த நாற்காலியில் சென்றமர்ந்து உன்னை பார்க்கிறேன் நீ என்னை பார்க்காமல் தவிர்த்தாய் இல்லை உள்ளூர தவித்தாயோ

அருகே நெருங்கி நெருங்கி உன் கழுத்தில் ஏறப்போகும் தாலிக்கயிறு என்னிடம் நெருங்கி வந்தது அந்த கணம் உன் பார்வையும் என் மீது பட்டுவிட்டது போல அதன் பின் உன் கண்கள் என் திசையில் உருளத் தொடங்கின நிச்சயம் நான் வரப்போவதில்லை என நீ கணித்த முடிவோ என்னவோ

அதன் பின் என் பக்கம் நீ காணும் போதெல்லாம் உன் பார்வையில் நான் கம்பூளி பூச்சி போன்ற ஓர் அருவருப்பை உனக்கு அளித்திருப்பேன் போல என்னை காணாது நீ தவிர்த்த கணங்களை நான் உள்ளூர உணர்ந்தேன்.

ஏனோ அப்பொழுது உன் கல்யாணம் திடீரென்று நின்று விடுவது போல ஒரு கற்பனை தமிழ் படங்களில் வருவது போல நிறுத்துங்க என்ற குரலுக்காக என் காதுகள் பட்டைத் தீட்டிக் கொண்டன.

ஆனால் ஒரு கட்டத்தில் அது அபத்தம் என உணர்ந்து நான் உள்ளூர சிரித்துக் கொண்டேன்

பின் சிறிது நேரத்தில் மண்டபம் பரபரப்பு அடைந்தது. மேள தாளங்கள் வான் முழங்க மந்திரங்கள் வாழ்த்தொலி பாட மண மேடையில் உன் திருமணமும் என் மனதின் மேடையில் நம் காதலின் மரணமும் இனிதே நடந்து முடிந்தது.

முற்றும்...

எழுதியவர் : சே.ரவிச்சந்திரன் (28-Mar-20, 5:20 pm)
சேர்த்தது : Ravichandran
பார்வை : 340

மேலே