தனிமை
தனிமை....
விடியலின் ஒளிக்கீற்று
உச்சி வெயில் சுட்டெரிப்பு
அந்திமாலை மந்தாரம்
நாள்முடிவின் இருள் கோலம்
அலைபுரவியின் ஆலிங்கனம்
அருவித் தழுவலின் மெய்படு சுகம்
விரசுக் காற்றின் வீரிய உரசல்கள்
விருட்ச நர்த்தன அபிநயங்கள்
அடுப்பங்கரை முந்தானை முணங்கல்கள்
ஆழ்மன அகழ்வின் அங்கலாய்ப்புகள்
அடிவயிற்றின் பட்டினி இரைச்சல்
அயரா உழைப்பின் அங்க உளைச்சல்
மாளும் உயிர்களின் துடிப்பு
மயானம் எங்கும் குவிப்பு
மருத்துவத்தின் மலைப்பு
மௌன பூமியின் தவிப்பு
அத்தனை அத்தனை ஒலியதிர்வுகளும்
பிரபஞ்ச நுரையீரலின் பேரிரைச்சல்கள்
செவியுற்று தனிமையில் தவமாய் கிடக்கின்றேன்
வெட்டவெளி வானில் விண்சிமிட்டல்களை கணக்கிட்டபடி....