தனித்திருப்போம் அதுவரை

அடங்கிக் கிடக்கிறது
ஊரும் உலகும்
அடங்காமல் சுற்றுகிறது
அகிலத்தை கொரோனா ...

முடங்கிக் கிடக்கிறான் மனிதன்
முழுநேரம் வீட்டில் அடைபட்டு
ஒட்டிக் கொள்ளத் துடிக்கிறது
பதுங்கி பாய்கிறது வைரஸ் ...

சாதிமத பேதம் இல்லை
ஆண் பெண் பார்ப்பதில்லை
வயது வரம்பு என்றில்லை
தேவை அதற்கு மனிதன் ....

ஐந்தறிவிற்கு உள்ள சுதந்திரம்
ஆறறிவு உள்ளவர்க்கு இல்லை
சட்டம் பாய்கிறது சகட்டுமேனிக்கு
பொறுப்பை ஆற்றுகிறது காவல்துறை...

ஊன்றாமல் முளைக்கும் விதைகள்
செவ்வாய் கிரகமாய் விளைநிலங்கள்
கால்வயிறு கஞ்சியுடன் விவசாயி
எரியூட்டாத அடுப்புடன் வீடுகள் ...

பழுதாகும் நிலையில் இயந்திரங்கள்
அழுக்கான ஆடையில் தொழிலாளர்கள்
பசியால் களைத்த உழைப்பாளிகள்
ஆளில்லா பாலையாக அங்காடிகள்...

மனிதரில்லா ஊராக சாலைகள்
பார்வைக்கு உடலாக நலிந்தோர்
மறைந்து போன போக்குவரத்து
காணாமல் சென்ற வாகனங்கள்...

அடையாளம் இழந்த டீக்கடைகள்
எவருமிலா பேருந்து நிறுத்தங்கள்
சீறிப்பாயாத இளைஞர் பட்டாளம்
விவாதங்கள் இல்லாத தெருமுனை ...

காட்சிகள் மாறிடுமா விரைவில்
அச்சம் நீங்கிடுமா உள்ளத்தில்
அடிபணிந்து ஓடிடுமா கொரோனா
இயல்புநிலை திரும்பிடுமா உலகில் ...

காத்திருப்போம் நற்விடியலுக்கு
தனித்திருப்போம் அதுவரை !

பழனி குமார்
16.04.2020

எழுதியவர் : பழனி குமார் (16-Apr-20, 3:56 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 293

மேலே