தொடர் ஓட்டம்

*அணையா ஜோதி தொடர் ஓட்டம்*

*1.ஏக்கம் மிகுந்த நாட்கள்*

நேற்று இடையாற்றுமங்கலம் புனித அந்தோனியார் ஆலயத்தில் எப்போதும் கொடியேற்ற பெருவிழா கொண்டாடப்படும். அதை ஒட்டிய இரண்டு ஞாபகங்கள் மனதில் நிழலாடுகின்றன. அந்த ஞாபகங்களை உங்களோடு பகிர்கிறேன்.

எங்கள் கிராமத்தில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளாக அணையா ஜோதி தொடர் ஓட்ட குழு என்ற இளைஞர் அமைப்பு இன்னும் உயிரோட்டத்துடன் செயல்பட்டு வருகின்றது.

எங்களது சித்தப்பா கால கட்டத்தில் துவங்கி இன்றைய இளம் தலைமுறை வரை இளைஞர்கள் மட்டும் மாறுவர் குழு உயிர்புடனே இருக்கும். எங்கள் அண்டை கிராமங்களான பெரியவர்சீலி மயிலரங்கம் மற்றும் கொன்னைக்குடி ஆகிய கிராமங்களில் இன்றும் இப்பழக்கம் நீடித்து வருகின்றது.

நாங்கள் சிறு குழந்தையாக இருந்தபோது இவர்கள் தான் எங்களின் கதாநாயகர்கள். ஆம் அக்காலத்தில் உவரி, ஓரியூர், தூத்துக்குடி போன்ற புண்ணிய தலங்களில் இருந்து வருடாவருடம் அங்குள்ள அருட்தந்தையர் செபித்து ஒளியேற்றிய அந்த தீபத்தை எங்கள் கிராமம் வரும் வரை அந்த தீபத்தை அணையாமல் மென்மேலும் ஒளியேற்றி சுடர செய்து பாதுகாப்பாக எடுத்து வருவார்கள்.

எங்கள் ஊரின் ஆரம்பம் தண்ணீர்பந்தல் என்ற இயற்கை எழில் சூழ்ந்த இடமாகும். ஆம் கரிகால் சோழனின் கல்லணை செல்லும் நுழைவாயில் அது.

அந்த தண்ணீர் பந்தலில் ஊர் பெரியவர்கள் அனைவரும் ஒன்று கூடி அவர்களுக்கு மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி மேளதாளம் முழங்க அன்னையின் திருக்கொடி முன்செல்ல அணையா தீபம் பின்செல்ல அதன் ஒரு மருங்கில் உதவியாய் உழைத்த மிதிவண்டியும் அதிலுள்ள எண்ணை கலந்த நூலுள்ள வாலியும் அன்னநடை பயில அதன் பின்னே எங்கள் ஆலய அந்தோணியார் படம் பொறித்த சீருடையுடன் அந்த இளைஞர்கள் மூவர் மூவராய் அணிவகுக்க அதன் பின்னே ஊர்மக்கள் புடைசூழ ராஜ மரியாதையுடன் நடைபெறும் வரவேற்பு அவர்களுக்கு.

தண்ணீர் பந்தலில் இருந்து கிட்டதட்ட ஒரு கிலோமீட்டர் நடந்தவுடன் இடையாற்றுமங்கலம் வரும். ஒவ்வொரு வீடாக ஆராத்தி கரைத்து சில வீடுகளில் வசதிக்கேற்ப துண்டு அணிவித்து சிலர் நெருங்கிய உறவினராக இருப்பின் துணிமணி போர்த்தி ஆரவாரமாக வரவேற்பார்கள். பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் கலர், டீ, காபி,மோர்,சர்பத் என அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அனைவருக்கும் கொடுப்பர். இதை அவர்களிடம் வாங்கி குடிப்பதற்காக அவர்கள் பின் சென்ற நாட்கள் உண்டு.ஒன்னுல்லாத வீட்டு புள்ளையாட்டம் அலையிறத பாரு என வீட்டில் திட்டுவிழும் இருந்தாலும் அதை பொருட்படுத்தாத நாட்கள் அவை.

அந்த அக்ரஹாரத்தில் துவங்கி மேலத்தெரு வரை கிட்டத்தட்ட அரை முதல் முக்கால் கிலோமீட்டர் நீடிக்கும் இந்த கோலாகலமான வரவேற்பு.எங்களுடன் இணைந்து பிற மத சகோதரர்களும் வருவர் ஜோதி எடுக்க ஒற்றை குடும்பமாய்.

அதன்பின் குருவானவர் வந்து புனித அந்தோணியாரின் திருக்கொடியினை மந்திரித்து அணையா ஜோதியினை அதற்கான இடத்தில் இறக்கி வைப்பார். அதன் பிறகு திருவிழா முடியும்வரை அந்த அணையா தீபம் சுடர்விட்டு எரிந்து கொண்டிருக்கும்.

ஆம் பள்ளி பயின்ற அந்த சிறுவயதில் மனதிற்குள் ஆசை துளிர் விட்டது நாமும் இதேபோல் ஒரு நாள் பெரியவனாகி அணையா ஜோதி எடுத்து வர வேண்டும் என்ற ஆவல் அணையா தீபமாய்..


*2.குழப்பமான சூழல்*

ஒருவழியாக நாங்களும் வளர்ந்து அந்த அணையா ஜோதி தொடர் ஓட்டக்குழுவின் அங்கத்தினராக மாறிய தருணம்.

முதன் முதலில் வேளாங்கண்ணி மாதா தேவாலயத்திலிருந்து அணையா ஜோதி எடுத்துவரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்காடு, கொடைக்கானல், ஊட்டி, பொள்ளாச்சி மற்றும் இறுதியாக எனது பயணம் வாடிப்பட்டியுடன் நிறைவுற்றது.

இதில் வாடிப்பட்டி பயணத்தை ஒருங்கிணைக்கும் வாய்ப்பு அந்நாட்களில் எனக்கு கிடைத்து இறைவனின் அருளால்.

எப்போதும் ஒருவர் மிதிவண்டி ஓட்டுவதும் தேவைப்படும் போது எண்ணை கலந்த நூலை தயார் நிலையில் வைப்பதுமாகவும் மற்றொருவர் அணையா ஜோதியை ஏந்திக்கொண்டு (ஒலிம்பிக் தீபம் போல்) ஓட்டத்திலும் இருப்பர். நான் சென்ற ஐந்து வருடங்களும் எனக்கு இணையாக வந்தவர் எட்வின் ஜெயக்குமார்.

எங்களது இணை எப்போதும் மற்ற இணைகளுக்கு பலத்த சவால் விடும். ஆம் முதல் ஆண்டில் எங்களது இணை பதினெட்டு கிலோமீட்டர் ஓடினோம். வருடா வருடம் கூடிக்கொண்டே சென்றது எங்களது இலக்கு இறுதி ஆண்டு வரை. அதற்கு முக்கிய காரணம் எட்வினின் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்.

ஒருமுறை பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது ஜோதி எடுப்பதற்காக கொடைக்கானல் திட்டமிட்டு இருந்தார்கள்.திங்கட்கிழமை இரவு அனைவரும் கிளம்புவதாக முடிவெடுத்து இருந்தார்கள். எனக்கோ செல்லவேண்டும் என்ற ஆசை ஆனால் செவ்வாய் கிழமை செய்முறை தேர்வு ஒன்று இருந்தது.

என்ன செய்வதென்றே புரியவில்லை. ஆனால் கல்லூரி சுற்றுலா கொடைக்கானல் சென்று வந்ததால் ஓரளவு பரிட்சயம். ஆனால் இதுவரை தனியாக இவ்வளவு தூரம் பயணித்து பழக்கம் கிடையாது. மனதிற்குள் பயம் வேறு.

பயமா ஆசையா எதற்கு கீழ்படிவது குழப்பமான சூழல். அவர்களோடு செல்ல அறுதியாக வாய்ப்பு இல்லை. சரி வேறு யாரேனும் நம்மைப்போல் இங்கேயே இருந்துவிட்டு அடுத்தநாள் என்னுடன் பயணிக்க தயாராக உள்ளாரா என்ற தேடல் துவங்கியது.

ஒருவர் இரட்டை மனநிலையில் இருந்தார் நான் மங்கனூர் திருவிழா( செவ்வாய் கிழமை) பார்த்துவிட்டு கிளம்பலாம் என்றுள்ளேன் என்றார். எனக்குள் நான் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டேன். இறைவா நன்றி என்று.

அடுத்தநாள் விடிந்து பார்த்தால் அவர்தான் முதல் ஆளாக கொடைக்கானல் பயணப்பட்டு இருந்தார். எனக்கோ உச்சகட்ட விரக்தி.பயமோ மெல்ல மெல்ல என்னை தின்று கொண்டிருந்தது.

இறுதியாக எனது ஒற்றை நம்பிக்கை எங்களது ஒருங்கிணைப்பாளர் தங்கப்பா சித்தப்பா..
பிரிட்டோ ஒன்னும் கவலபடாத நாம ஜோதி எடுக்கப்போற கோவிலிலேயே தான் நாங்க தங்க போறோம். பயப்படாம வந்து சேந்திடு என்ற வார்த்தைகள் தான்..

கவலை தோய்ந்த முகத்துடன் கல்லூரி சென்றேன் செய்முறை தேர்விற்காக, ஆண்டவா என்ன சோதனையிது என்று எண்ணியவாறே..


*3.கொடைக்கானலை_நோக்கி*

ஒருவழியாக செய்முறை தேர்வும் முடிந்தது. கொடைக்கானல் செல்லலாமா வேண்டாமா என்று குழப்பம் மேலும் மேலோங்கி நின்றது. பயத்தை ஆசை வெற்றிகொண்ட தருணம் அது.மனமெங்கும் ஆசைத்தீ பற்றி எரிய அதைவிட இரண்டு மடங்கு தனிமை பயண பயத்துடன் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். அப்போது நேரடியாக பேருந்தும் கிடைக்கவில்லை. தற்போது போல் அலைபேசி சேவையும் அந்த காலகட்டத்தில் கிடையாது.

நமது அரசுப் பேருந்தோ அனைத்து நிறுத்தங்களிலும் ஆற அமர அசைந்தாடி தேவைக்கும் அதிகமாய் நேரத்தை செலவிட்டு கொடுத்த காசிற்கும் மேல் பொறுமையுடன் பயணித்துக்கொண்டிருந்தது வத்தலக்குண்டு வரை.

ஒரு வழியாக அந்தி சூரியன் தனது அன்றாட கடமைகளை முடித்துவிட்டு தனது தொலைதூர பயணத்தை மேற்கொண்டு வனங்களைக் கடந்து மலைகளின் மடியில் தலைசாய்ந்து கொண்டிருந்தது.

வத்தலகுண்டு பேருந்து நிலையத்தில் கொடைக்கானல் செல்லும் பேருந்திற்காக காத்திருந்தேன் அச்சம் மேலிட்டவனாய். அந்திவானம் தனது உடலெங்கும் இளஞ்சிவப்பை பூசிக் கொள்ள விடியற்காலையில் வெகுதூரம் சென்ற குருவிகளும் மெல்ல மெல்ல தனது கூட்டடத்தினரோடு கூடுகளில் அமர்ந்து அன்றைய அனுபவங்களையும் அடுத்தநாள் திட்டத்தையும் யாரைப் பற்றியும் கவலை கொள்ளாமல் சப்தமாய் பேசிக் கொண்டிருந்தன அந்த பேருந்துநிலையத்தை சுற்றியிருந்த மரத்தடிகளில்.

அடச்சே அந்த குருவிகளுக்கு உள்ள தைரியம் கூட உனக்கில்லையே என்றது மனம். அது கூட்டிற்கு நேரத்தோடு வந்துவிட்டு கூடிப் பேசிக்கொண்டிருக்கிறது நமக்கு அப்படி இல்லையே என மறுபுறம் ஆறுதல் வார்த்தையை இதயம் அளித்தது.

இருட்டும் தருணத்தில் ஒரு குட்டிப் பேருந்து கொடைக்கானல் என்ற அடையாளம் பேருந்தின் முகப்பில் இட்டுக்கொண்டு மெல்ல மெல்ல நுழைந்தது வத்தலக்குண்டு பேருந்து நிலையத்தில்.

வழக்கம்போல் அடித்துப் பிடித்து அந்த குட்டிப்பேருந்தின் பின்னே இறுதி இருக்கையில் எனக்கான இடத்தை தேர்வுசெய்து கொண்டேன்.

அந்த மாலைநேர இருட்டில் மலை முகடுகளில் மெல்ல மெல்ல மறையத் துவங்கியது அந்த குட்டிப்பேருந்து.

கூடிக்குதூகலித்து மறைந்த அந்த குருவிகள் சப்தமும் மெல்ல மெல்ல குறையத்துவங்கியிருந்தது. அடர்ந்த காரிருளோடு சேர்ந்து ஆளரவமற்ற நிசப்தமும் அந்த அடர்ந்த வனத்தில் மலையேறும் பேருந்தின் வழியெங்கும் படர துவங்கியிருந்தது.

அந்த குட்டிப்பேருந்து மட்டும் தன்னந்தனிமையில் ஒளிக்கதிர்களை அந்த இருள் சாம்ராஜ்யத்திற்குள் பயந்து பயந்து பாய்ச்சிக் கொண்டு இரவுக்காவலனைப்போல் நம்பிக்கையற்று பயணித்துக்கொண்டிருந்தது.


*4.அடர்ந்த இருளும் அப்படிக் கொண்ட பயமும்*

பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்தவர் பாவம். எனது பயத்தின் பாதியை அவர்மேல் பரப்பிவிட்டுக்கொண்டிருந்தேன். கொடைக்கானல் எப்ப வரும், உங்களுக்கு அந்த ஆலயம் எப்போதுவரும் என்று தெரியுமா, வந்தால் கோவிச்சசுக்காம கொஞ்சம் சொல்லுங்களேன், இவ்வாறாக அடிக்கடி வார்த்தைகளை அனிச்சையாக உதிர்த்து வந்தேன் தைரியம் இழந்தவனாய். அவரோ இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்துவிடும்பா என ஆற்றுபடுத்திக்கொண்டே வந்தார்.

அந்தக்குட்டிப் பேருந்தும் மலையின் கொண்டை ஊசி வளைவுகளை கட கடவென விழுங்கிக்கொண்டே கொடைக்கானலை நெருங்கிக் கொண்டிருந்தது.

ஆம் நன்றாக ஞாபகமிருக்கிறது அந்த பேருந்துநிலையம் கீழ்நோக்கியும் அதனைத்தொடர்ந்து சாலைகள் வளைந்து வளைந்து மேல் நோக்கியும் செல்லும். பேருந்தில் உடன் பயணித்தவர் உற்சாகமாய் தம்பி இங்கே ஒரு தேவாலயம் உள்ளது என்றார். நீங்கள் கேட்டது அதுவாகத்தான் இருக்கும் என நம்புகின்றேன் என்றார்.

எனக்கோ ஆனந்தக்களிப்பு மனதிற்குள் அப்பாடா ஒருவழியாக வந்து சேர்ந்தாச்சு என்று.எனது உடமைகளை எடுத்துக்கொண்டு பேருந்தின் படிகளில் பயணம் செய்பவர்களை இறங்கச் சொல்லிவிட்டு மெல்ல இறங்கினேன் கூட ஒருவர்கூட இறங்கவில்லை. அந்த இடமோ அப்படி இருள் கவ்வியிருந்தது வானுயர்ந்த மரங்கள் இருள் கவ்விய ராட்சச உருவமாக அசைந்தாடி இதயத்துடிப்பை இரட்டிப்பாக்கி கொண்டே இருந்தது.

அப்போது தான் எனக்கு ஞாபகம் வந்தது இது செண்பகனூர் என்று ஏற்கனவே கல்லூரி சுற்றுலா வந்தபோது அந்த ஆலயம் மற்றும் உயிரியல் அருங்காட்சியகம் கண்ட ஞாபகம் மனக்கண் முன் வந்து பளீரென மறைந்தது.

அந்த புள்ளத்தாச்சி பேருந்தோ பொதிகளை சுமந்தபடி ஆடி அசைந்து மெல்ல நகர துவங்கியிருந்தது. எனக்கோ உடம்பில் உயிரில்லை, ஆம் அந்த இடத்தில் ஆள் அரவமற்ற சூழல் ஒரே ஒரு ஒற்றை தெருவிளக்கு மட்டும் அதுவும் என் நேரம் பயந்து பயந்து கண்ணைக் கசக்கிக்கொண்டே எரிந்து கொண்டிருந்தது உயிரோட்டம் இல்லாமல் என்னைப் போன்று.

உடலில் உள்ள மொத்த சக்தியையும் ஒருங்கிணைத்து என்னையறியாமல் ஓலமிட்டேன் அண்ணே பேருந்தை நிப்பாட்டுங்க நிப்பாட்டுங்க என்றாவாறு உடமைகளை சுமந்துகொண்டு ஓடியபடியே. அடுத்தப் பேருந்து அந்நேரத்தில் சத்தியமா இருக்காது என்று ஆழ்மனதில் ஓர் எண்ணம் அடித்தளமிட்டு அமர்ந்து கொண்டது. அட என்னடா இடையாத்துமங்கலத்தானுக்கு வந்த சோதன...

பேருந்தும் மேல்நோக்கிய வளைவில் மெல்ல முதல் வளைவைக்கடந்து மறையத்துவங்கிக்கொண்டிருந்தது. நானும் விடாமல் கத்திக்கொண்டே சுமைகளோடு இருளில் கலக்க துவங்கியிருந்தேன்.


*5.தேவாலயத்தை_கண்டடைதல்*

மேல் நோக்கிய வளைவைக்கடந்து பேருந்து நிற்க முடியாமல் நின்றுகொண்டிருந்தது. நானும் மூச்சிறைக்க ஓடி பேருந்திற்குள் புகுந்தேன் மறுபடியும் ஓர் பெருமூச்சு அந்த ஆளரவமற்ற இருள் தேசத்திலிருந்து மீண்ட திகிலோடு.அப்பாடா அந்த ஆனந்தத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை இன்றுவரை. அந்த பேருந்தில் உள்ளவர்களோ பரிதாபப்பட்டு என்னைப்பற்றி ஏதோதோ அவர்கள் கற்பனைக்கு தகுந்தவாறு கதைபேசிக்கொண்டிருந்தனர்.

நேரம் செல்ல செல்ல ஒளிவெள்ளம் பூண்ட கொடைக்கானல் கண்முன்னே விரியத் துவங்கியிருந்தது. அப்பாடா அந்த காரிருள் வேளையில் கனத்து குறுகுறுத்த இதயம் மெல்ல மெல்ல இலகுவாகத் துவங்கி இருந்தது பிரகாசமான வெளிச்சக்கீற்றுகளை உள்வாங்கியபடியே.

பேருந்து நிறுத்தத்திற்கு முன்பே மிக உயர்ந்த இடத்தில் மிகப்பெரிய தேவாலயம் காணப்பட்டது. நான் தேடிய தேவாலயத்திற்குறிய அனைத்து அம்சங்களும் ஒத்து போயின. பெயர்ப்பலகை பார்த்து உறுதி செய்தால் போதும் என்ற தன்னம்பிக்கை ஒருவழியாய் மனதிற்குள் துளிர்விட துவங்கி இருந்தது.

மனதிற்குள் நிம்மதிப் பெருமூச்சு மீண்டும் அடுத்த சோதனை இருக்கிறது என்பதை அறியாமல் மனம் ஆனந்த களியாட்டம் நிகழ்த்தியது. தேவாலயத்தை கண்ட மகிழ்வில் பசி பஞ்சாய் பறந்தோடியது. துள்ளல் நடை பயின்றேன் தேவாலயத்தை நோக்கி. அடுத்தது தேவாலயத்தின் பெயரை சரிபார்த்ததும் ஒரு கோடி ரூபாய் புதையல் கிடைத்த மகிழ்ச்சி.

அந்த தேவாலயம் அனைத்து பக்கஙளிலும் இழுத்து பூட்டப்பட்டு இருந்தது. கோவிலின் பின்புறம் ஒரு சிறிய அறை இருந்தது. அங்கே சென்று ஐயா ஐயா என்று கூக்குரல் இட்டேன். சிறிது நேரம் கழித்து ஒரு வயதானவர் தூக்கக் கலக்கத்துடன் மெல்ல எழுந்து வந்து கதவைத் திறந்தார்.

ஐயா நான் இடைத்துமங்கலத்திலிருந்து வருகின்றேன் என்றேன். என்னது இடையாத்துமங்கலமா என்றார். எனக்கோ தூக்கி வாரிப்போட்டது.நம்ப தங்கப்பா சித்தப்பா இங்கே தானே தங்குவதாக கூறியிருந்தார். இவர் எதுவும் தெரியாதது போல் கேட்கிறாரே என்று.

மீண்டும் அச்சம் மேலிட்டவனாய் பதட்டத்துடன் ஒரு வேனில் வந்திருப்பார்களே பத்திற்கும் மேற்பட்டவர்கள் திருச்சியிலிருந்து என்றவுடன் அவரும் ஆமோதித்தவராய் ஓ அவங்கள கேட்குறீங்களா அவங்க காலேல வர்றேன்னு சொல்லிட்டு போயிட்டாங்க நீங்க காலேல வாங்க தம்பி என்றார் சர்வ சாதாரணமாக.

என்னங்க ஐயா இவ்வளவு எளிமையா சொல்லீட்டிங்க இந்த இரவு ஒன்பது மணிக்கு எங்க போவது இங்க யார தெரியும் என்று மனதிற்குள் எண்ணியவனாய். ஐயா ஏதேனும் தொலைபேசி எண் கொடுத்தார்களா என்றுகேட்டேன் மீண்டும் படபடப்புடன்.
அவரோ தம்பி அவங்க மதியம் வந்தாங்க இங்க தங்க இடம் கேட்டாங்க அத்தனை பேர் தங்க இங்க இடமில்ல அதனால் நாளைக்கு வர்றேன்னு போயிட்டாங்க என்றார்.

மீண்டும் கவலை தோய்ந்த முகத்துடன் மெல்ல நடைபயின்றேன் பேருந்துநிலையத்தை நோக்கி. சரி கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பேருந்து நிலையத்தில் மக்களோடு மக்களாக உறங்க வேண்டியது தான் என்று மனதை தேற்றிக்கொண்டேன். இருந்தாலும் அங்கு இரவில் நிலவிய குளிர் உடலெங்கும் பரவி தந்தியடிக்க ஆரம்பித்திருந்தது அச்சத்துடனும் பசியுடனும் இணைந்து கொண்டு.

*6. முதல் நினைவின் முடிவு*

பேருந்து நிலையம் வந்துசேர்ந்ததும் சரி கடைசியா ஒரு முயற்சி செய்து பார்ப்போம் என்று உள்ளுக்குள் உறுதி ஏற்றவனாக பசியை மீண்டும் ஓரங்கட்டிவிட்டு அந்த ஏற்ற இறக்கமிகுந்த கடைவீதியில் இருக்க இடமின்றி நடந்து கொண்டிருந்தேன். அந்த வீதியில் ஒருமுறை கீழ்நோக்கி சென்றுவிட்டு மறுமுறை மேல்நோக்கி மீண்டும் நம்பிக்கையற்று அதேவீதியில் நடந்து கொண்டிருந்தேன்.

வலதுபுற ஓரமாய் எண்ணற்ற வாகனங்கள் வரிசைகட்டி நின்றுகொண்டு இருந்தன. திடீரென்று புதிய எண்ணம் மேலிட்டவனாய் ஒவ்வொரு வாகனத்தையும் உற்று கவனிக்க துவங்கியிருந்தேன் அந்த வாகன அணிவகுப்பில்.

எங்கள் ஆலய அடையாளமிட்ட அந்த ஓவியர் எழுதிய அணையா ஜோதி தொடர் ஓட்டக்குழு என்ற கொட்டை எழுத்தில் எழுதிய துணி தூரத்தில் நின்ற ஒரு வாகனத்தில் பளிச்சிட்டது.

அப்பாடா என்ற நிம்மதி பெருமூச்சு மீண்டும். புரியுது என்ன சொல்ல வர்ரீங்கன்னு. எத்தனை முறை நிம்மதி பெருமூச்சு விடுவடா அதானே.. என்னங்க பன்றது என் நிலைமை அப்படி.. சரி தூங்குவதற்கு நமது வாகனம் இருக்கிறது என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

ஒரு வழியாக வாகனத்தையும் வந்து அடைந்துவிட்டேன். பார்த்தால் அனைத்து ஜன்னல்களும் கதவும் இறுக்க மூடப்பட்டு இருந்தது. நானும் அண்ணே அண்ணே என்று வாகனத்தை தட்டியவாறு சுற்றுபிரகாரம் வந்து கொண்டிருந்தேன் வாகனத்தை வட்டமிட்டபடியே. ஆனால் என் நேரம் வாகனத்தில் யாருமில்லை.

எனது நடவடிக்கைகளை தூரத்திலிருந்து நோட்டமிட்டு கொண்டிருந்த தனியார் விடுதி காவலர் ஒருவர் தம்பி இங்க வாப்பா என்றார். அவர் மனதில் என்ன எண்ணம் தோன்றியது என்று தெரியவில்லை. திருடன் என்று தோன்றியிருந்தால் விரட்டி பிடித்திருக்க வாய்ப்பு இருக்கிறது.

என்னப்பா என்ன பன்ற என்றார். இல்லணே எங்க ஊரிலிருந்து இந்த வாகனத்தில் வந்திருந்தாங்க எங்க தங்கி இருக்காங்கன்னு தெரியல. அதான் ஓட்டுனர் இருந்தால் விசாரித்து பார்க்கலாம் என தட்டிப் பார்த்தேன் என்றேன்.

எனது சூழலை உணர்ந்தவராக தம்பி அந்த விடுதிக்குள் சென்று பாருங்கள் என்று அனுப்பி வைத்தார்.

நானும் அந்த விடுதிக்குள் அடியெடுத்து வைத்தேன் சற்றே உறுதியற்ற மனநிலையுடன். விடுதிக்குள் நுழைந்த உடன் தங்கப்பா சித்தப்பா மிகுந்த ஆவலுடன் எதிர்கொண்டார்.

வா வா பிரிட்டோ உன்ன எங்கெல்லாம் தேடுறது என்று. இரண்டு பேர இரண்டு மூன்று முறை பேருந்து நிலையத்திற்கும் தேவாலய வாசலுக்கும் அனுப்பி வைச்சசேன். அவங்களும் இதுவரைக்கும் நின்று பார்த்துவிட்டு இப்பதான் வந்தாங்க. ஒருவேளை நீ காலேல வர்ரீயோன்னு நினைச்சோம். பார்த்தா அவங்களுக்கு பின்னாடியே வந்து நிக்குற என்றார் மகிழ்ச்சி மேலிட்டவராய்.

சரிங்க இப்பவாவது ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொள்ளவா உங்கள் அனுமதியுடன்.


ஆம் நாம் இறைவனின் அன்பு பிள்ளைகள் இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையை நம்மில் விதைப்போம்.

*மற்றுமொரு நினைவைப் பற்றி நாளை பேசுவோம்.*


அன்புடன்

*ஆரோக்ய பிரிட்டோ*

எழுதியவர் : ஆரோக்ய பிரிட்டோ (19-Apr-20, 8:21 am)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
Tanglish : thodar oottam
பார்வை : 125

மேலே