காவி
அகம் மலர்ந்தது
முகமும் மலர்ந்தது
பிரபஞ்சப் பருப்பொருளின்
பிரபாவத்திலிருந்து விடுபட்டு
ஆதி ஆற்றலான பேருண்மையில்
அகத்தாற்றல் கலந்திருக்க
ஜாதி மத பேதமெல்லாம் பொருளிழக்க
இடம் இனம் மொழியெலாம்
கடந்து போக
பேரன்பு கொண்டு
உயிர்நோக்க
உணர்ந்திருந்தான்
பேரானந்தப் பரவசம் பகிர
மனிதகுலம் மலரும் தருணம்
இதுவென்று எண்ணி
தவ வாழ்க்கையை
நிறைவு செய்தான்
அதிகாலை வேளையொன்றில்
மனித வெளியில் கால் வைக்க
மேனி மறைக்கும் கந்தலாடைக்
கட்டிக்கொண்டான்
பெருந்திரள்
கூட்டமொன்று நின்றிருக்க
அகம் மலரும் ரகசியம் பகிர
பேருவகை கொண்டு
ஆறத்தழுவ கைவிரித்து
ஆனந்த நடனமிட்டு
முன்னகர்ந்தான்
சற்று நேரம் கழித்து
பெருந்திரள் திரும்பிக்கொண்டிருந்தது
குருதி படர
சிதைந்த உடலொன்று
அசைவற்றுக் கிடக்க
காற்றில் அசைந்து கொண்டிருந்தது
அந்த காவி கந்தலாடை