மனவலி தீர்க்கும் மருந்து

தடுத்திட விலையெனில் தவிப்பது நிசமென
-தனிமையை மருந்தென அருந்திடக் கூறும்
கொடுத்துத வுதற்கென கிருமியின் வடிவினில்
-கொடியவர்க் குணர்த்திடு மிதுவொரு பாடம்
படுத்தவ ரெழுவது படைத்தவன் செயலெனப்
-படுத்திடு மிதுகொடும் படைக்கள மாகும்
வடுக்களை வலிகளை விதையென விதைத்திட
-வருமிதன் வழிதனை அடைப்பது வீரம்
**
அகப்படு மெவரொடு மடைக்கல மடைந்திட
-அணுகிடும் கிருமிய ரருகிலி ராது
முகத்தொடு கவசமு மணிவத னவசிய
-முணர்ந்திடு முனையது அணுகுவ தேது
சுகத்துட னிருந்திட வழிபல விருப்பினும்
-சிரந்தினி லிருத்திட மறுத்திடும் போது
நகத்தொடு சதையென நமதுட னிருந்தெமை
-நசுக்கியப் படிவிடு மதுசுடு காடு.
**
அறைகளி லடைபடு வதுமொரு வதையென
-அறிவது முனதொரு அனுபவ மாகும்
சிறைகளி லிருப்பவர் துயரதை யுணர்கிற
-சிறுவழி யிதுவென புரிந்திடு போதும்
கறையுள மனத்தொடு கவலைகள் வளர்ப்பதைக்
-கடந்திட இதுவொரு படிப்பினை காலம்.
முறையொடு பயிலென முடக்கிய நிலைதனை
-முறையிடு இறையொடு மனவலி தீரும்.
**
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (26-Apr-20, 10:53 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 139

மேலே