217 கொலைஞர்க்கு உலகெலாம் கூறும் எமனாம் – கொலை 4
கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
பெறலரு முயிர்தரும் பிறப்பி லானதை
அறவொரு வழிசெய் வாண்மை பூண்டனன்
பறவையை நரர்விலங் கினைப்ப டுக்குமோர்
மறவனுக் குலகெலா மறலி யென்பவே. 4
– கொலை
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
”பெறுவதற்கு அரிய உயிர் தரும், பிறப்பு இறப்பு இல்லாத கடவுள் உயிர்கள் உய்ய அவைகட்குப் பிறப்பை அருளி, அவைகள் பிறப்பற வகை செய்யும் வலிமையும் பூண்டான். பறவைகளை, மக்களை, விலங்குகளைக் கொல்லும் தீயவர்களுக்கு உலகத்திலுள்ளோர் எல்லாம் எமன் என்று சொல்வார்கள்” என்கிறார் இப்பாடலாசிரியர்.
ஆண்மை - வலிமை. படுத்தல் - கொல்லுதல்.
மறலி - எமன்.