சிவனும் அரங்கனும்

சிதம்பரத்திலே கூத்தப் பிரானைப் போற்றிச் சொல்லிய அதே செய்யுளைத் திருவரங்கத்திற் சென்ற பொழுது சொல்லி அரங்க நாதப் பிரானையும் போற்றினார் காளமேகம். கண்டவர் வியப்புற்று நிற்க, இருகடவுளர்க்கும் ஏற்பப்பொருள் கூட்டி உரைத்து அவர்களைத் தெளிவு படுத்தினார், அந்த அருமையான செய்யுள் இது.

கட்டளைக் கலித்துறை

இருந்தாரை கேள்வனை யோங்கு மராவை எழுபுனலைத்
திருந்தாரை வன்னி முடிமுடித் தோன்செய்ய வேளை(ப்)பண்டு
தருந்தாதை நாயகன் சுந்தரன் தூதன் சமரிலன்று
பொருந்தார் புரத்திட்ட தீப்போள் மதியம் புறப்ப(ட்)டதே! 99

- கவி காளமேகம்

பொருளுரை:

சிவபெருமான்:

அழகினாலே சிறப்புற்ற தாரையின் விருப்பத்திற்கு உரியவனான சந்திரனையும், படமெடுத்து உயரும் பாம்பினையும், எழுகின்ற புலனான கங்கையினையும், செவ்வையான ஆத்தி மாலையினையும், வன்னி மலரையும், முன்னாளிலே திருமுடியிற் கொண்டோன், செய்யவனாகிய முருகவேளை முற்காலத்தே தந்தருளிய தாதையுமானவன், உலகுக்கெல்லாம் ஒரு நாயகன், சுந்தரமூர்த்திகளுக்காகத் தூதும் நடந்த பெருமான். போரிடத்தே அன்று பகையானோரின் முப்புர கோட்டைகளுக்கும் அவன் இடுவித்த தீயைப் போன்ற கொடுமையுடனே, அதோ சந்திரனும் செவ்வொளி பரப்பிக் கீழ்வானத்தே எழுந்ததே? இனிச் செய்வதுதான் என்னே?

திருமால்:

பெருமை பொருந்திய தாரையின் கணவனான வாலியையும், ஓங்கி உயர்ந்த மராமரத்தையும், எழுகடலையும், பகைவரையும், வன்னியென்னும் அரக்கனையும் முன்னாளிலே கொன்று அழித்தவன் திருமால்.

சிறந்த மன்மதனை முன்னாளிலே பெற்றுத் தந்த தகப்பனும் அவனேயாவான். உலகுக்கு நாயகனாம் அழகான இராமனும் அவனே; அவன் தூதனாகிய ஆஞ்சனேயன் அந் நாளிலே பகைவரூரான இலங்கையிலே இட்ட தீயைப் போன்றதான கொடுமையுடனே சந்திரனும் இப்போது எழுந்ததே? இனி யான் யாது செய்வேன்?

காதலனைப் பிரிந்திருந்து வாடும் ஒரு தலைமகள் சந்திரனின் உதயத்தினாலே மனங்கலங்கி இங்ஙனம் கூறி வாட்டமடைவதாகக் கொள்ளுக. சந்திரனால் அவள் அடைந்த வேதனையின் மிகுதி இப்படிக் கூறப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-May-20, 10:15 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 59

மேலே