குமரேச சதகம் - அவரவர்க்கு வலிமை - பாடல் 25
பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
அந்தணர்க் குயர்வேத மேபலம் கொற்றவர்க்
கரியசௌ ரியமேபலம்
ஆனவணி கர்க்குநிதி யேபலம் வேளாளர்க்
காயின்ஏ ருழவேபலம்
மந்திரிக் குச்சதுர் உபாயமே பலம்நீதி
மானுக்கு நடுவேபலம்
மாதவர்க் குத்தவசு பலம்மடவி யர்க்குநிறை
மானம்மிகு கற்பேபலம்
தந்திரம் மிகுத்தகன சேவகர் தமக்கெலாம்
சாமிகா ரியமேபலம்
சான்றவர்க் குப்பொறுமை யேபலம் புலவோர்
தமக்குநிறை கல்விபலமாம்
வந்தனை செயும்பூசை செய்பவர்க் கன்புபலம்
வாலவடி வானவேலா
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 25
- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்
பொருளுரை:
என்றும் இளைஞனான வேலனே! மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு மலைமேவு குமரேசனே!
மறையவர்களுக்கு மேன்மையுடைய மறையே வலிமை; வெற்றியுடைய அரசர்கட்கு அருமையான வீரமே வலிமை; ஆக்கந்தேடும் வணிகர்களுக்குப் பொருளே வலிமை; ஆராய்ந்தால் வேளாண்மை புரிவோர்க்கு உழவுக்குரிய ஏரே வலிமை;
அமைச்சனுக்கு நால்வகைச் சூழ்ச்சிகளே வலிமை; அறத்தலைவனுக்கு நடுநிலையில் நிற்பதே வலிமை; பெரிய தவத்தினர்க்குத் தவமே வலிமை; பெண்களுக்கு ஒழுக்கத்திலே நிற்றலாகிய பெருமை மிக்க கற்பே வலிமை;
சூழ்ச்சியிற் சிறந்த பெருமை மிக்க சேவகர்களுக்குத் தம் தலைவனுடைய அலுவலை முடிப்பதே வலிமை; பெரியோர்களுக்குப் பொறுமையே வலிமை; புலவர்களுக்கு நிறைந்த கல்வியே வலிமை;
வணக்கம் புரியும் வழி பாட்டாளர்க்கு அன்பே வலிமை.
கருத்து:
இங்குக் கூறப்பட்டவர்கள் அவரவர் தமக்கு உற்ற வலிமையறிந்து கூறப்பட்ட அவற்றையே கைக்கொள்ளல் வேண்டும்.