267 பெரியோர் புகழை மாசுறப் பேசுவது பெரும் பிழை - பெரியோரைத் தூறல் 1

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

அரிய குணஞ்சேர் பெரிய(ர்)தமக்(கு)
..அமையக் கடல்சூழ் புவனமெங்கும்
விரியும் இசைமா கறவர்மேல்
..விளம்பும் பொய்ச்சொல் அண்டமிசைத்
திரியும் பானுக் கிரணமதைத்
..திரட்டிப் பற்றி அதன்மீது
கரியைப் பூச வேண்டுமெனக்
..கருதுந் தன்மை பொருவுமால். 1

- பெரியோரைத் தூறல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”அரிய குணங்கள் பல சேர்ந்து அமைந்த பெரியோர்க்கு, கடல்சூழ் உலகமெங்கும் அவர் புகழ் பரவுகின்றது. அப்புகழைக் கறைப்படுத்த அவர்மேல் கூறப்படும் பொய்ப்பழியானது இவ்வுலகில் வானத்தின் மீது உலாவும் ஞாயிற்றின் கதிரைச் சேர்த்துப் பிடித்து அதன்மீது கரியைப் பூசவேண்டுமென்று எண்ணுவதற்கு ஒப்பாகும்” என்றும், பெரியோர் புகழை மாசுபடப் பேசுவது பெரும் தவறாகும் என்றும் இப்பாடலாசிரியர் எச்சரிக்கிறார்.

புவனம் - உலகம். இசை - புகழ். அண்டம் - உலகம். பானு - ஞாயிறு. கிரணம் - கதிர்.
பொருவும் - ஒக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-May-20, 2:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே