வீட்டுக்கு வீடு
வீட்டுக்காரி
அவ வேலை வெட்டி இல்லாம சும்மாதானே வீட்டிலே இருக்கா?
********
நீங்க எங்கே சார் வேலை செய்யறீங்க?
நான் பாங்கிலே மானேஜரா இருக்கேன்.
உங்க மனைவி?
அவ வேலை இல்லாம வீட்டிலே சும்மாதான் இருக்கா.
அப்படியா? ஆமாம். அவங்க தினமும் காலையிலே எத்தனை மணிக்கு எழுந்திருப்பாங்க? நீங்க எத்தனை மணிக்கு எழுந்திருப்பீங்க?
நான் ஆறு மணிக்கெல்லாம் எழுந்திருச்சிடுவேன். அவ அஞ்சு மணிக்கு எழுந்திருப்பா.
எழுந்திருச்சி நான் காலைக் கடன்களை எல்லாம் முடிச்சிக்கிட்டு பேப்பர் படிப்பேன்.
அவங்க?
அவ வீட்டு வாசல்லே தண்ணி தெளிச்சி கோலம் போட்டு காலை பிரேக் ஃபாஸ்டுக்கான ஏற்பாடுகளை பண்ண ஆரம்பிப்பா. பிறகு காபி போட்டு எனக்குத் தருவா. நான் பிஸியா பேப்பர் படிச்சிக்கிட்டு இருப்பேன்.
அவங்க?
அவ வேலை இல்லாம வீட்டிலே சும்மாதான் இருக்கா. அவ குழந்தைகளை எழுப்பி…
உங்களுக்கு எத்தனை குழந்தைங்க?
ரெண்டு. அவ அவங்களுக்குப் பல் தேச்சி விட்டு குளிப்பாட்டி தலை வாரிவிட்டு டிரஸ் பண்ணிவிட்டு எனக்கு டிபன் தந்த பின்னாலே நான் ஆபீஸுக்குப் புறப்பட்டுடுவேன்.
அவங்க என்ன பண்ணுவாங்க?
வேலை இல்லாம சும்மாதான் வீட்டுலே இருக்கா. அவங்களை டிபன் சாப்பிட வச்சி, ஆளுக்கு ஒரு சாப்பாடு பொட்டணம் கட்டிக் கொடுத்து அவங்களை ஸ்கூல் பஸ் ஸ்டாப்புக்கு அழைச்சிக்கிட்டு போய், ஸ்கூல் பஸ் வரவரையிலும் வெயிட் பண்ணி பஸ் வந்த உடனே பஸ்ஸுலே ஏத்தி விட்டுட்டு வீட்டுக்குப் போயிடுவா.
அப்புறம்?
ஆபீஸிலே வேலைக்குக்கேட்கணுமா? சாயந்தரம் அஞ்சு மணி வரையிலும் தான் வேலைன்னு பேரு. தினமும் வீட்டுக்குப் போகும் போது மணி எட்டாயிடும். ( இதுலே பாதி நேரம் அரட்டை அடிக்கிறதுலே, கேன்டீனுக்குப் போறதுலே, லஞ்ச் ப்ரேக்கிலே போயிடும்)
அவங்க வீட்டிலே அத்தனை நேரமும் என்ன பண்ணுவாங்க?
வேலை இல்லாம சும்மாதான் வீட்டிலே இருக்கா. குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பிச்சிட்டு குளிச்சி சாமி கும்பிடுவா. அப்ப ரோடுலே வீல்மார்ட்காரனோ, காரியோ குரல்கேட்டா..........
அதென்னது வீல்மார்ட்?
அதுதான் நம்ம ஊர் வால்மார்ட். அதாவது தள்ளுவண்டி காய்கறிக் கடை.
அவனோட பேரம்பேசி சமையலுக்கு வேண்டிய காய்கறி, அது இதுன்னு ஏதாவது வாங்குவா. அப்புறம் சமையலை ஆரம்பிப்பா.
வீட்டு வேலைக்காரி வந்த உடனே பாத்திரத்தை எல்லாம் எடுத்துப்போட்டு அவளை அவ போற வரையிலும் கண்காணிச்சிக்கிட்டு இருப்பா.
அவ போன பிற்பாடு பாத்திரங்களை எல்லாம் எடுத்து துடச்சி அடுக்கி வெச்சிட்டு, கேரியர் ஆள் வந்த உடனே கேரியர்லே சாப்பாட்டை நிரப்பி எனக்குக் கொடுத்தனுப்புவா.
அப்புறம் அவ சாப்பிட்டு பாக்கி சமையலை எல்லாம் ஃப்ரிட்ஜுலே எடுத்து வெச்சிட்டு TV பார்ப்பா. வேலை இல்லாம சும்மாதான் இருக்கா.
அதனாலே வீட்டுலே கூரியர் போஸ்ட் வரும்போது வாங்கி வெப்பா.
மீட்டர் ரீடிங், காஸ், துணி சலவைக்குப் போட்டு வாங்கி வெக்கறது, கடைக்காரனுக்கு ஃபோன்பண்ணி வீட்டுக்கு வேண்டிய சாமான்களை அப்பப்போ வாங்கி வெக்கறது, இந்த மாதிரி சின்னச் சின்ன வேலைகளை எல்லாம் கவனிச்சிக்கட்டு இருப்பா.
திடீர்னு எதிர்பாராத விதமா விருந்தாளிகள் வந்துட்டா அவங்களை கவனிச்சி அவங்களுக்கு வேண்டியதை செஞ்சி கொடுப்பா.
அப்புறம் நாலு மணி சுமாருக்கு குழந்தைகள் ஸ்கூல் பஸ் வர நேரத்துலே அவங்களை பஸ் ஸ்டாப்புக்குப் போய் வெயிட் பண்ணி வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வருவா.
அப்புறம் அவங்களுக்கு ஸ்னாக்ஸோ, பட்சணமோ இருந்தா கொடுப்பா. இல்லே பண்ணிக் கொடுப்பா.
சாயந்திரமானா, முடிஞ்சா குழந்தைகளைக் கோவிலுக்குக் கூட்டிக்கிட்டு போவா இல்லே. அவங்க விளையாடி முடிச்ச உடனே அவங்களைப பாடம் படிக்க வெச்சி அவங்களுக்கு பாடத்துலே ஹெல்ப் பண்ணுவா. அவ வேலை இல்லாம வீட்டுலே சும்மாதான் இருக்கா.
நீங்க வீட்டுக்குப் போன உடனே?
நான் வீட்டுக்கு, முதல்லேயே சொன்ன மாதிரி, ஒரு ஏழு அல்லது எட்டு மணிக்கு ரொம்ப டயர்டா போய்ச் சேருவேன். ஈஸி சேர்லே சாஞ்சி ரெஸ்ட் எடுத்துப்பேன். அவ எனக்கு காபி கொண்டு வந்து தருவா.
அப்புறம் ஒன்பது மணிக்கு எங்க எல்லாருக்கும் சாப்பாடு போட்டுட்டு பத்து மணிக்கு அவ சாப்பிட்டுட்டு அப்புறம் எல்லாத்தையும் எடுத்து வெச்சி டைனிங் டேபிளை சுத்தம் செஞ்சிட்டு அவ பதினோரு மணிக்கெல்லாம் படுக்கப் போயிடுவா.
அவங்க என்ன படிச்சிருக்காங்க?
அவ டிகிரி ஹோல்டர். B.Com படிச்சி இருக்கா. வீட்டுலே வேலை இல்லாம சும்மாதான் இருக்கா
ஏதாவது வேலைக்குப் போகச்சொல்ல வேண்டியதுதானே?
அப்புறம் வீட்டு வேலையை எல்லாம் யார் செய்யறதாம்?.
வாரத்துலே எத்தனை நாள் ஆபீசுக்குப் போவீங்க?
அஞ்சு நாள். எப்பவாவது ஒரு சனியோ, ஞாயிரோ போக வேண்டி வரும்.
வருஷத்துக்கு இது தவிர எத்தனை நாள் லீவு வரும்?
.
அது ஒரு பதினைஞ்சு நாளோ, பதினாறு நாளோ வரும்.
அது தவிர வேறே ஏதாவது லீவு உண்டா?
காஷுவல் லீவு 15 நாள், மெடிக்கல் லீவு இப்படி.
ஆனா அவங்களுக்கு லீவு?
அவளுக்கு லீவு கொடுத்துட்டு, வீட்டிலே எல்லோரையும் பட்டினி கிடக்கச் சொல்றீங்களா?
அப்படின்னா அவங்களுக்கு வருஷம் பூராவும் லீவே கிடையாதா?
வீட்டிலே சும்மா இருக்கிறவளுக்கு எதுக்கு லீவு? நெனச்சா லீவுதான். தோணினா கால்நீட்டி வீட்டுலேயே படுத்துப்பா. நான் ஆபீசுலே அப்படி பண்ண முடியுமா?
அவங்க பிறந்த வீட்டுக்குப் போகணும்னா?
ஒருதடவை அவளை அனுப்பிச்சிட்டு நான் பட்ட பாடு போதும். அதுக்கப்புறம் நான் அவளை அவ வீட்டுக்கே அனுப்புறதில்லை.
பின்னே அப்படி இருக்கும்போது அவங்க வேலை செய்யாம சும்மாதானே வீட்டுல இருக்காங்கன்னு வரிக்கு வரி தப்பாம சொல்றீங்க?
நான் வேலைக்குப்போய் சம்பாதிக்கறேன். அவ வீட்டுலே உட்காந்துகிட்டு சம்பாதிக்கிறாளா என்ன?
சம்பாத்யம் இல்லாம ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்யறாங்களே அதுக்குப் பேரென்ன?
*******
அதாவது நீங்க ஆபீசுலே எட்டு மணி நேரம் வேலை பாத்தா, அவங்க வீட்டுலே பதினெட்டுமணி நேரம் வேலே செய்யறாங்க எந்த லீவுமில்லாம. அவங்க ஒருநாள் வேலை செய்யல்லேன்னா வீடு வீடாகவே இருக்காது. இது எல்லா ஆம்பிளைகளுக்கும் தெரியும்.
கேட்டா அவங்க வேலை இல்லாம வீட்டிலே சும்மா இருக்கிறதா ஒவ்வொரு ஆம்பிளையும் சொல்லிக்கிட்டு பொழுதைப் போக்கிக்கிட்டு இருக்காங்க.
அவங்க செய்யற வேலை வெறும் வெட்டி வேலை.
இவர் செய்யறது வெட்டி முறிக்கிற வேலை.
இதுதான்யா உலகம்.
அவர்கள் செய்யற வேலைக்கு அங்கீகாரம் கிடைப்பதே இல்லே. அதுதான் எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம்.
எண்ணிக்கு நாம மாறப்போறோம்? அண்ணிக்குத்தான் அவங்களுக்கு உண்மையான விடுதலை. ஒண்ணும் பெரிசா செய்துடவேண்டாம். அவங்க செய்யற வேலைக்கு அங்கீகாரம் கொடுப்போம், எப்பவும் கிண்டல் பண்றதை விட்டு விட்டு.
முடிந்தால் ஒத்தாசை செய்வோம். இல்லேன்னா வாயையாவது மூடிக்கிட்டு கிட்ப்போம். 'அவங்க' இருக்கிற வரையிலும் அவங்க அருமை தெரியாது.
மனைவியை இழந்த கணவன்மார்களைக்கேட்டுப்பாருங்க. அவ இருக்கும்போது அவளை எப்படி எல்லாம் கோவிச்சிக்கிட்டேன்னு சொல்லி வருத்தப்படாத புருஷனே கிடையாது.
அப்படி வருத்தப்படாதவன் புருஷனே கிடையாது.