எல்லாமே ரெடி மேட் மயம் ஜகத,
சிறு கதை
எல்லாமே ரெடிமேட் மயம் ஜகத்!
அன்று:
"துணி வாங்கித் தைக்கக் கொடுத்து லோலோன்னு டெய்லர் கடைக்கு அலைஞ்சு சட்டையோ, பேண்டோ, ப்ளவுசோ தெச்சு வாங்கறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது. அதனாலே ஒரு டெய்லரிங் மெஷீன் வாங்கிக் கொடுங்க. எனக்கு டெய்லரிங் தெரியும். நானே இனி நமக்கு வேண்டிய டிரஸ்ஸையெல்லாம் வீட்டுலேயே தெச்சுக்கப் போறேன். செலவும் மிச்சம். டெய்லர் கிட்டே போய்த் தொங்க வேண்டிய அவசியமும் இல்லே. ரெடிமேட்லே வாங்கினா கொஞ்சம் முன்னே பின்னேத்தான் இருக்கும். கரெக்டா ஃபிட் ஆகாது" ன்னு சொன்னே.
சரின்னு நான் தையல் மெஷின் வாங்கிக் கொடுத்தேன்.
ஆரம்ப சூரத்தனம்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி வாங்கின ஒரு வாரம் அந்த மெஷினை டர் புர்ருன்னு ஓட்டி நாலைஞ்சு ப்ளௌசுகளைத் தெச்சே. அப்புறம் அதை உபயோகப் படுத்தின மாதிரியே தெரியல்லியே. ஏன்? என்ன ஆச்சு?
"அது ரொம்ப நேரம் இழுக்குதுங்க. ரொம்ப நேரம் தெச்சா முதுகுவலியும் கழுத்து வலியும் வருது. அதனாலே அதை உபயோகிக்கிறதை நிறுத்திட்டேன்".
"அப்படின்னா மறுபடியும் டெய்லர் கிட்டே தான் போகணுமா?"
"ஊஹும். வேணாங்க. ரெடிமேடா வாங்கிப் போம்".
"அது சரியா வராதுன்னு சொல்லித் தானே நீ தையல் மெஷினையே கேட்டே".
"அதனாலே என்னங்க? சைஸ் சரியில்லேன்னா, இப்ப ரெடிமேட் கடைகளிலே எல்லாம் ஆல்டர் பண்ணித்தர அவங்க டெய்லர்களே இருக்காங்க. ஒரு நிமிஷத்துலே ஆல்டர் பண்ணிக் கொடுத்துடுவாங்க".
அப்ப இந்தத் தையல் மெஷினை என்ன பண்றது?
நம்ம மீனாட்சிக்குக் கொடுத்திடுவோம். ஏன்னா அவளாலே காசு கொடுத்து ஒரு மெஷின் வாங்க முடியாது. இதை வெச்சி அவ பிழச்சிப் போகட்டும்.
ஓ! அப்படியா? சரி.
******************
"காப்பிக் கொட்டையை கடையிலேயிருந்து வாங்கி அதை வீட்டிலேயே வறுத்து அறைச்சி பொடியை ஃபில்டர்லே போட்டு அதுலே வென்னீரை ஊத்தி அந்த டிகாக்ஷன்லே காஃபி போட்டாத்தான் கும்பகோணம் டிகிரி காஃபி மாதிரி இருக்கும். உங்களுக்கு அதுதான் ரொம்பப் பிடிக்குமாச்சே. அதனாலே காஃபி கிரைண்டர் வாங்கிக் கொடுங்க"ன்னு கேட்டே.
நானும் வாங்கிக் கொடுத்தேன்.
ஆனா அதை மூணே நாள்லே தூக்கி எறிஞ்சிட்டு காஃபி மேக்கர் கேட்டே".
ஆமாங்க. நீங்க ஹாய்யா ஈஸிசேர்லே உக்காந்துகிட்டு காலை நேரமா இருந்தா பேப்பர்படிப்பீங்க. ராத்திரி நேரம்னா டிவி பாத்துக்கிட்டு இருப்பீங்க. ஒரு நாள்கூட கிரைண்டர்லே காஃபிப் பொடி அரைச்சுத் தரமாட்டீங்க. நானேத்தான் காஃபிப் பொடியை அரைச்சாகணும். அதனாலே தான் கா.ஃபிப் பொடியைக் கடையிலிருந்து வாங்கிட்டு வரச்சொன்னேன்".
"நானும் அப்பப்போ காஃபிப் பொடி வாங்கி வந்தேன். நீயும் இந்தப் பொடியை வெச்சி காஃபி போட ஆரம்பிச்சே".
கும்பகோணம் காஃபி என்னாச்சுன்னு கேட்டதுக்கு
"கும்பகோணம் காஃபி சாப்பிடாட்டா உயிரா போயிடும்? இந்தக் காஃபி மேக்கர் காஃபியும் நல்லாத்தான் இருக்கு. இதையே சாப்பிடுங்க"ன்னு சொன்னே.
என்னமோ நான் ஒருத்தன் தான் இந்தக் காஃபியை சாப்பிடற மாதிரியும் நீ என்னவோ காஃபியே குடிக்காத மாதிரியும் பேசினே.
இப்ப என்னடான்னா காஃபி மேக்கரையும் தூக்கி எறிஞ்சிட்டு இப்ப என்னை இன்ஸ்டண்ட் காஃபி வாங்கிக் கிட்டு வரச் சொல்றே".
"ஆமாங்க. ஆம்பிளைங்க உங்களுக்கு எங்கே பொம்பளைங்க கஷ்டம் புரியப் போகுது? நெனச்சா நீங்க உங்க ஃப்ரெண்டுகளை வீட்டுக்குக் கூப்பிட்டுக்கிட்டு வந்து எல்லாருக்கும் காஃபி கொடுக்கச் சொல்வீங்க. அதுக்கு இன்ஸ்டண்ட காஃபி கொடுக்கிறது தான் ஈஸி வழி. அது புரியாம நீங்க பேசாதீங்க".
"இப்ப அந்த காஃபி மேக்கரை என்ன அந்த மீனாட்சிக்குத் தரப்போறியா?"
" ஊஹூம். அதை நான் சரியா மூணு நாள் கூட உபயோகிக்கல்லே. அதுதான் புத்தம் புதுசா இருக்கே". என்ஃப்ரெண்ட் ஒருத்திக்கு விக்கப் போறேன். "
சரி. உன் இஷ்டம!
******************
(இடைப்பட்ட நாட்களில்)
"ஆட்டுக் கல்லுலே இட்லிக்கு மாவு அரைக்கிறது கஷ்டமா இருக்கு. மிக்ஸி இருந்தா சௌகரியமா இருக்கும்னு சொன்னே. அதுக்காக மிக்ஸி வாங்கிக் கொடுத்தேன். கொஞ்ச நாள் கழிச்சி இட்லி மாவு அரைக்க மிக்ஸி லாயக்கில்லே. சட்னி மாதிரி சமாசாரங்களுக்குத்தான் அது லாயக்கு. அதனாலே வெட் கிரைண்டர் வாங்கிக் கொடுங்கன்னு கேட்டே. வாங்கிக் கொடுத்தேன்.
இப்ப வீட்டுலே மிக்ஸி இருக்கு, வெட் கிரைண்டர் இருக்கு. ஆனா அதையெல்லாம் ஏன் நீ உபயோகிக்க மாட்டேங்கறே?"
"நீங்க வேறே. யாருங்க அந்தக் கல்லை தினமும் தூக்கி எடுத்து நல்லாக் கழுவி அப்புறம் கிரைண்டரையும் முழுசா தினமும் சுத்தம் செய்யறது?
போதாததுக்கு கையை வெட்டிக்காம இந்த மிக்ஸியைக் கிளீன் பண்றதும் பெரிய பாடா இருக்கு. இதுக்குப் பழைய ஆட்டுக்கல், அம்மிக் கல்லே தேவலை. அதிலேயும் குறிப்பா நான் அரைக்க ஆரம்பிக்கும்போது பாத்து சொல்லி வெச்சாப்பலே கரண்ட் இருக்கிறதில்லை."
"அப்படின்னா ஆட்டுக் கல், அம்மிக் கல்லைத்தான் உபயோகிக்கப் போறியா?"
"ஊஹூம். இப்பத்தான் ரெடிமேட் இட்லி தோசைமாவே கிடைக்குதே. அதை வாங்கிட்டாப் போச்சு".
(சில நாட்கள் கழித்து)
"ஏன் ஹோட்டலுக்குப் போய் இட்லி வாங்கிக்கிட்டு வரச்சொல்றே என்னை? அதான் ரெடிமேட் மாவு இருக்கு இல்லே? அப்புறம் என்ன?"
"மாவு இருந்தா ஆச்சா? இட்லி தோசைக்குத் தொட்டுக்க சட்னி, சாம்பார் இல்லேன்னா நீங்க சாப்பிடுவீங்களா? எனக்கு இந்த சட்னி, சாம்பார் எல்லாம் காலங்காத்தாலே எழுந்து செய்ய முடியல்லே. அதான் சொல்றேன் பேசாம ஹோட்டலுக்குப் போய் இட்டிலி தோசை வாங்கிக்கிட்டு வந்துடுங்க".
“அது சரி. இப்ப அந்த மிக்ஸியையும், கிரைண்டரையும் என்ன செய்யப் போறே? வேறே யாராவது ஃப்ரெண்ட் தலையிலே கட்டப் போறியா?”
“நீங்க உங்க வேலையைப் பாத்துக்கிட்டுப் போங்க. நான் ஏதாச்சும் பண்ணிக்கிறேன்”.
“என்ன பண்ணப்போறே?”
மிக்ஸிக்கு தினமும் சமையல்லை நிறைய வேலை இருக்கு. அதை நான் யூஸ் பண்ணுவேன். கிரைண்டர் பாட்ட ஒரு மூலையிலே இருந்துட்டுப்போகட்டும்”.
“உபயோகமில்லாத கிரைண்டர் எதுக்கு?”
“அதெல்லாம் ஒரு இதுக்கு தாங்க. உங்களுக்குச் சொன்னா புரியாது. நாலு ஃபரெண்ட்ஸ் கேட்கும்போது நம்ம வீட்டிலே கிரைண்டர் இல்லேன்னா, அவங்க என்னப்பத்தி என்ன நினைப்பாங்க?”
“ஓ! அப்படி ஒண்ணு இருக்கோ? சரி, சரி, ஏதோ செஞ்சிக்கோ”
.*****************
"கார்ப்பரேஷன் குழாய்த் தண்ணியிலே புழு இருக்குன்னு சொன்னே. நானும் பாத்தேன். இந்தத் தண்ணி சுத்தம் பத்தாதுன்னு நீயும் உன் பக்கத்து வீட்டு சிநேகிதி பத்மா அவ வீட்டுலே வச்சிருக்கமாதிரி தண்ணி சுத்தீகரிக்கிற ப்யூரிஃபயர் அக்வா கார்டு வேணும்னு கேட்டே. வாங்கிக் கொடுத்தேன்.
அதுக்கு கிச்சன்லே இடம் பாத்து ஆணி அடிச்சி மாட்டி படாத பாடுபட்டு ஓவர்ஹெட் டாங்கிலே இருந்து வர பைப்புலே ஒரு டி பைப்பைப் போட்டு அக்வா கார்டுக்குக் கனெக்ஷன் கொடுத்தேன்.
நீயும் அதை உபயோகிச்சி அந்தத் தண்ணியைத்தான் இனிமேலே குடிப்போம்னு சொன்னே. அந்த மாதிரி மூணு மாசமா அதை உபயோகிச்சிட்டு இருந்தே.
இப்ப ஏன் அதை உபயோகப்படுத்தாம கேன் வாட்டர் வாங்கணும்னு சொல்றே?"
"அதை ஏன் கேக்கறீங்க? ப்யூரிபையர்லே இருந்து ரொம்ப மெல்லிசா தண்ணி வருதா, அதைப் பாத்திரத்திலே பிடிச்சு வெக்கவே ரொம்ப நேரம் ஆகுது.
வேலைக்காரிக்கிட்டே சொன்னா அவ இது என்னோட வேலை இல்லேங்கறா.
அப்படிப் பிடிச்சாலும் அந்தத் தண்ணியிலே கையைப் போட்டு உளப்பறா.
அதனாலே நானே தான் தண்ணி பிடிக்க வேண்டியிருக்கு.
அதைத் தவிர அப்பப்போ அக்வா கார்டை சுத்தம் பண்ணி மெயின்டெயின் பண்றது பேஜாரா இருக்கு.
இப்படி பண்ணல்லேன்னா வர தண்ணி அளவு ரொம்பவும் குறைஞ்சி போயிடுது. ஒவ்வொருதடவையும் கம்பெனிக்கு ஃபோன் பண்ணி அவங்க ஆள் வந்து ப்யூரிஃபயரை சுத்தம் செய்யறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுது.
காரண்டி பீரியட் முடிஞ்சா, அதுக்கு வேறே தண்டமா 600 இல்லை 700 ன்னு செலவு பண்ண வேண்டி இருக்கு.
அந்த பத்மா கூட இந்த உபத்திரவம் எல்லாம் வேணாம்னுட்டு இப்ப கேன் வாட்டர் வாங்க ஆரம்பிச்சுட்டா.
"இப்ப புரியுது உன்னோட அட்வைசர் யாருன்னு"
“அதை விடுங்க. கேன் வாட்டர் வாங்கினா பிரச்சினையே இல்லை. ஒரு ஃபோன் பண்ணினாப் போதும். அடுத்த அரை மணி இல்லே ஒரு மணி நேரத்துக்குள்ளே டாண்ணு தண்ணீர் கேன் வந்து சேர்ந்துடும். அதான்".
“சரி. இந்தக் கேன் தண்ணி நல்ல சுத்தமான தண்ணின்னு உனக்கு எப்படித் தெரியும்?. நிறைய போலிக் கம்பனிங்க கண்ட தண்ணியையும் பிடிச்சி நம்ம தலையிலே கட்டறாங்கன்னு நான் கேள்விப்பட்டேன். இதனாலே இப்ப ஊர்லே பல வியாதிகளும் வருதுன்னு சொல்றாங்களே”.
“நான் வாங்கறது பெரிய கம்பனிங்கனியிலே இருந்துங்க. பத்மாபகூட அந்தக்கம்பனியிலிருந்துதான் வாங்கறா. சொல்லப் போனா நான் அவ ரெகமண்டேசன்லதான் அந்தக் கம்பனி கிட்டேயிருந்து தண்ணி வாங்கறேன்.
“ஓ! பத்மா தான் உன்னோடே டெஸ்ட் லேப்பா?”
“அவ இந்த மாதிரி விஷயத்துலே எல்லாம் பெரிய கில்லாடிங்க”.
“கில்லாடியோ, கில்லேடியோ. சரி. புரிஞ்சிக் கிட்டேன். அந்த ப்யூரிஃபையரை என்ன பண்ணப்போறேன்னு கேக்கமாட்டேன். அதுக்கு நீ ஏதாவது பதில் வெச்சிருப்பே. எனக்கு எதுக்கு வம்பு?”
****************
"நான் உனக்கு ரெடிமேட் சப்பாத்தி மேக்கர் வாங்கித் தந்தேனே. என்ன ஆச்சு?"
அதை ஏன் கேக்கறீங்க? அந்தப் பாழாப் போன சப்பாத்தி மேக்கரை டிவியிலே அவங்க காட்டும்போது அவங்க சப்பாத்தி என்னமா உப்பிச்சு! பார்க்க ரொம்ப நல்லாத்தான் இருந்தது.
அமர்க்களமா உப்பி சப்பாத்தி வரதைப் பாத்துத்தான் ஆசைப் பட்டுக் கேட்டேன்.
நீங்களும் வாங்கிக் கொடுத்தீங்க.
ஆனால் நான் என்ன தான் செஞ்சாலும் அந்த பாழாப் போன சப்பாத்தி அந்தத் தட்டை விட்டு எழுந்திரிக்கணுமே.
ஊஹூம். என்ன எளவு பண்ணினாலும் அந்த சப்பாத்தி நம்ம வீட்டிலே அந்த மாதிரி உப்பித் தொலைக்கவே மாட்டேங்குது. அது என்ன பாழாப்போன ரகசியமோ தெரியல்லே? வெறுப்பா ஆயிட்டுது. பக்கத்து வீட்டுப் பத்மாவும் அதையேதான் சொல்றா”
"அப்புறம் அப்பீலே இல்லே. அதனாலே அதைத் தூக்கி எறிஞ்சிட்டு பழையபடி கல்லுலே கட்டையை வச்சி உருட்டி உருட்டி செய்யப்போறியா?"
"அது முடியாதுன்னுதானே அந்த சப்பாத்தி மேக்கரையே வாங்கினேன். திரும்பவும் அதுக்கே போனா எப்படி?"
பின்னே என்னதான் பண்ணப் போறே?
"இப்பத்தான் எல்லாக் கடையிலும் ரெடிமேட் சப்பாத்தியே விக்குதே.
முந்தி எல்லாம் சப்பாத்தி சாப்பிட்டா நம்ம தொண்டைதான் விக்கும். இப்ப சப்பாத்தியே விக்க ஆரம்பிச்சுட்டுதே. அப்புறம் என்ன?
அதை வாங்கிட்டாப் போச்சு".
"ஆனா தொட்டுக்கறதுக்கு நீ ஏதானும் செய்ய வேண்டி இருக்குமே? குருமா, சீடன்மா, உருளைக்கிழங்கு மசாலா, உஜாலா இப்படி ஏதாவது…..”
“ இப்ப இதெல்லாம் கூட பௌடராவும், பாக் பண்ணி டின்னுலேயும் ரெடியா….”
“ வந்திருக்குன்னு உன் ஃப்ரெண்ட் பத்மா சொன்னாளா?…..”
“ஆமாம்”
“என் கண்ணுலே இந்த மாதிரி சமாசாரங்க எல்லாம் இதுவரையிலே படல்லே. கடையிலே வந்திருந்தா,அதை வாங்கிட்டாப் போச்சு".
ஆனா அப்பக்கூட அதை வாங்கி அதுலே என்ன டைரக்ஷன் எழுதியிருக்கோ அது மாதிரி செய்யணுமே. அது போர் இல்லியா? அதுக்கு உனக்கு நேரம் இருக்கா?”
“நீங்க சொல்றதும் சரிதாங்க. அதுவும் இப்படியே சுட வெச்சி சாப்பிடறமாதிரி ரெடிமேடா வந்துடும் கொஞ்ச நாளிலே".
"எல்லாம் ரெடிமேடாக் கிடைக்கிற இடம் ஹோட்டல் இருக்கும்போது உனக்கு என்ன கவலை?
இப்ப அநேகமா எல்லா ஹோட்டல்களிலேயும் கூட ஹோம் டெலிவரி செர்விஸ் வேறே ஆரம்பிச்சி இருக்காங்க. ஹோம் டெலிவரியே நம்ம மாதிரி சுறுசுறுப்பான ஆளுங்களுக்குத்தான் இருக்கு. அப்புறம் என்ன ?
அதனாலே நம்ம கிரைண்டர், சப்பாத்தி மேக்கர், தண்ணி ப்யூரிஃபயர் எல்லாத்தையும் தூக்கி எறிஞ்சிடுவோமா?"
"ஊம். அதையெல்லாம் ஒண்ணும் தூக்கி எறிய வேண்டாம். ஒரு ஆபத்து அவசரத்துக்கு இருந்துட்டுப் போகட்டும்".
“ஆமாம்.ஆமாம். ஸ்டேடஸ் ஸிம்பல்னு ஒண்ணு இருக்கே. அதை நான் மறந்தே போயிட்டேன்.”
**********
(இன்று)
"நீங்க கம்ப்யூட்டர் வாங்கும்போது என்ன சொன்னீங்க?
நான் ஆன் லைன்லயே இனிமே ரயில் டிக்கெட், ப்ளேன் டிக்கெட் எல்லாம் புக் பண்ணிடுவேன்.
இனிமே மணிக் கணக்குலே க்யூலே நிக்க வேண்டிய அவசியமேயில்லை.
டிராவல் ஏஜென்ட் கிட்டேயும் போக வேண்டியது இல்லை.
ஃபோன் பில், கரெண்ட் பில், வீட்டு வரி இப்படி சகலத்தையும் நான் இனிமே வீட்டிலே உக்காந்துகிட்டே பே பண்ணிடுவேன்னு சொன்னீங்க?
செஞ்சீங்களா?பேயும் பண்ணல்லை. பிசாசும் பண்ணல்லை.
கேட்டா எனக்கு பாஸ் வேர்டு எல்லாம் குழம்பிப் போகுது, இல்லே மறந்து போகுது….
“ஆமாண்டி. எனக்கு எதுக்கு எந்த பாஸ் வேர்ட்டுன்னு குழம்பிப்போகுது”.
“சும்மா கதை விடாதீங்க. குழம்பிப் போகுது, ரசமாப் போகுதுன்னு. உங்க டைரியிலே எழுதி வெச்சிக்க வேண்டியதுதானே?”
“ எழுதி வெச்சேனே. ரகசியமா இருக்கணுங்கறதுக்காக நான் அதை சுருக்கி எழுதி வெச்சிருந்தேன். ஆனா இப்ப பாக்கும் போது அது என்னன்னு எனக்கே புரியல்லே”௩
“ஆமாம். நீங்க செய்யற வேலை வேறே எப்படி இருக்கும்?. பெரிசா என்னை சொல்ல வந்துடுறீங்க.
அப்புறம் என்ன சொன்னீங்க? ஊம். கம்ப்யூட்டர் விவரங்களையெல்லாம் திருடறாங்க. ஆன்லைன்லே அடிக்கடி போனா நம்ம பாங்க் மற்றும் மத்த முக்கியமான விவரங்களெல்லாம் அவங்க கைக்குப் போயிட்டா நம்ம பணமெல்லாம் அரோகரா ஆயிடும்னு சொல்லி பழைய படி நீங்க க்யூலே நின்னு காத்திருந்துதான் டிக்கெட் எல்லாம் வாங்கறீங்க.
ஃபோன் பில், எலக்டிரிசிடி பில், வரி கட்டறதெல்லாம் பழைய மாதிரி க்யூவிலே நின்னு காத்திருந்து தான் பே பண்றீங்க.
போற நேரமெல்லாம் ஏடிஎம் வேலை செய்யறதில்லேன்னு சொல்லி பாங்கிலே க்யூல நின்னுதான் பணத்தை வித்ட்ரா பண்றீங்க. நான் இதை யார் கிட்டே போய்ச் சொல்றது? அதனாலே, நீங்க உங்க கம்ப்யூட்டரைத் தூக்கிப் போடும்போது என்னோடே கிரைண்டர், மிக்ஸி எல்லாத்தையும் தூக்கிப் போடலாம்".
"அதெல்லாம் இல்லை. இனிமேல் டிராவல் ஏஜென்ட் மூலம் டிக்கெட் வாங்கிடுவேன். நம்ம காம்ப்ளக்ஸ் அசோசியேஷன் மூலமா வரி யெல்லாம் கட்டிடுவேன்".
“மறுபடியும் டிராவல் ஏஜெண்டா? அவங்களுக்குத் தண்டமா கொடுக்கிற சார்ஜ் எல்லாம்கம்ப்யூட்டர் வந்த பிற்பாடு குறையும். ஆன்லைன்லே புக் பண்றதாலே அலைச்சல் மாத்திரம் இல்லே, ஸ்டேஷனுக்குப் போய்வர ஆட்டோ சார்ஜூம் குறையும் அப்படி இப்படின்னு ரொம்ப அலட்டலா பேசினீங்களே. இப்ப பரவாயில்லியா?”
“ என்ன பண்றது? கம்ப்யூட்டருக்கும் எனக்கும் ஒத்து வரல்லே. நம்ம பாங்குலே என்னடான்னா, இருக்கிற கன்ஃப்யூஷன் பத்தாதுன்னு பத்து நாளைக்கொருதரம் பாஸ்வேர்டை மாத்தச் சொல்றான். அதுக்குன்னு ஒரு தனி ஆளைவெச்சிக்கணும் போல இருக்கு.
அது கம்ப்யூட்டர் இல்லே. கன்ஃப்யூஸ்டர். நிறைய கன்ஃப்யூஷன் ஆயிடுது. அதெல்லாம் சின்னப் பசங்களுக்குத்தான் லாயக்கு.
அதனால கொஞ்சம் செலவு ஆனாலும் பரவாயில்லே. ஏஜென்ட்டுக்குஃபோன் பண்ணி சொல்லிட்டா வேலை ஆயிடும். வீட்டு வரி, தண்ணி வரி இதை எல்லாம் அசோசியேஷன் மூலமாக் கட்டிடலாம்.
என்ன எலக்ட்ரிசிட்டி பில்லை மாத்திரம் நேராப் போய் கட்ட வேண்டி இருக்கும்.அது ஒரு விதத்துலே நல்லதுதான். வீட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடக்காமல் வெளியிலே போயி நாலு பேரைப் பாக்க முடியுது. அந்த சந்தோஷமெல்லாம் ஆன்லைன்லே இல்லை.”
"சப்பைக் கட்டுக் கட்டாதீங்க. என்னைச் சொன்னீங்களே?
பொம்பளைங்களைக் கிண்டல் அடிக்கிறதே இந்த ஆம்பளைங்களுக்குப் பொழப்பாப்போச்சு. ஈயத்தைப் பாத்து இளிச்சதாம் பித்தளை.
உங்களுக்கும் இப்ப எல்லாம் ரெடிமேடா நடக்கணும்னு ஆசைதான்.
அது சரிப்பட்டு வராததாலே உங்க வேலையையெல்லாம் செய்ய இப்ப ஏஜண்ட், தேவைப்படுது. வெளியிலே போறதுக்கு சான்ஸ் கிடைக்குது". இல்லியா?.
“ எனக்கு சான்ஸ் கிடைக்கிறதோ இல்லியோ, இப்ப ஒனக்கு என் தலையை உருட்டர சான்ஸ் கிடச்சிருக்கு”
**************
"அது சரி. டாக்டர் இந்த மாதிரி சொல்லிட்டாரே நம்ம ரெண்டு பேருக்கும் குழந்தை பிறக்கிறதுக்கான சான்ஸே இல்லேன்னு".
“நாமும் பார்க்காத டாக்டர் கிடையாது. பண்ணிக்காத வைத்தியம் கிடையாது.”
“போகாத ஜோசியர் கிடையாது. வேண்டாத கடவுள் கிடையாது”
"நீயோ ரெடிமேட் ஆசாமி. எல்லாம் தயாரா உனக்கு உடனே கிடைக்கணும். அதான் ஆண்டவன் உன்னாலே பத்து மாசம் பொறுமையா சுமந்து குழந்தை பெக்கப் பொறுமையில்லேன்னு தான் குழந்தை பாக்கியத்தைக் கொடுக்கலையோ என்னவோ?"
"நீங்க சும்மா இருங்க. என்னைக் குத்திக் காட்ட நேரம் கிடைச்சா விட மாட்டீங்களே".
"வாடகைத்தாய் (surrogate mother) மூலமா குழந்தை பெத்துக்கறதைப்பத்தி உன்னுடைய ஐடியா என்ன ?"
"வேணாங்க. அதுலே நிறைய சிக்கல் இருக்கு. பாலசந்தரோடே படம் ஒண்ணு பாத்தேன். அதுலே அந்தப் பொண்ணோடே அம்மாவே தன் மகளுக்காக வாடகைத்தாயா மாறரா. நினைச்சாலே கஷ்டமா இருக்கு. அந்த ஐடியாவே எனக்குப் பிடிக்கலை. அதுக்கும் பத்து மாசம் காத்துக்கிட்டிருக்கணும்".
"அப்படின்னா ரெடிமேடா ஒரு குழந்தை வேணுங்கறே. அதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு”
“என்னங்க அது"?
"அதுதான் ஏற்கெனவே பிறந்து ரெடியா இருக்கிற ஒரு குழந்தையைத் தத்து எடுத்துக்கிறதுதான்".
“ஆமாங்க. நீங்க சொல்ற மாதிரியே ஒரு குழந்தையை தத்து எடுத்துப்போம்”
“வாழ்க்கையிலே எல்லாமே ரெடிமேட் ஆனது மட்டுமில்லாம வாழ்க்கையே ரெடிமேட் ஆயிடுத்து. உம்.”
**************
ஆனாலும் அவரவர்களுடைய முழு வாழ்க்கையையும் அவரவர்கள்தான் வாழ்ந்தாகணும். அதற்கு பதிலான குறுக்கு வழியோ அல்லது ரெடிமேடான தீர்வோ எதுவும் கிடையாது.
******************
முற்றும்