தொலைந்தவளை தேடுகிறேன்
இன்றுவரை
நான் தேடி கொண்டு தான் இருக்கின்றேன்
நம்பமுடியவில்லை
நேற்றும் கண்டேன்
அவள் சாயலில் ஒருத்தியை
அவளாக இருக்காதோ!
ஒரு நப்பாசை
அவள் வாழ்ந்த இடத்துக்கெல்லாம்
அடிக்கடி போய்வருவதுண்டு
அவள் மட்டும் அங்கிருப்பதில்லை
நிச்சயம் வருவேன் என்றவள்
கண்டிப்பாக வருவாள்
என்னிடம் அவள் பொய் சொன்னதில்லை
யாரோ சொன்னார்கள்
நீ சிதறி கிடந்தாய் என்று
என்னை காண வந்தவள்
சிதறி போக மாட்டாள்
பொய் சொல்ல வேண்டாம் என்றழுதேன்
கடைசியாய் பார்க்கும் போது
பன்னிரண்டு வயசிருக்கும்
தெத்தி பல் தெரிய சிரிப்பாள்
கண்களை பார்த்து பேசுவாள்
பருவ காதல் தான்
இன்றைக்கு வரை அது இருக்கிறதே
அம்மாவுக்கு அவளை தெரியாது
அறிமுக படுத்துவதாய் இருந்தேன்
காணாமல் போய்விட்டாள்
கள்ளி, உன்னைத் தேடுகிறேன்
நீ தந்த ஒற்றை பூவிதழ்
புத்தகத்தில் வைத்திருகின்றேன்
உனக்காக தருவதற்கு
எத்தனை வைத்திருக்கிறேன்
எப்பொழுது வருவாய்
இன்றைக்கு உனக்கு
இருப்பத்தி மூன்று இருக்கும்
எத்தனை ஆனாலென்ன
எனக்காக நீ வருவாய் !
வர மாட்டேன் என்று
ஒற்றை வார்த்தை சொல்
செத்து போவேனே தவிர
வேறொன்றும் இல்லை........!!
"தொலைந்தவளை தேடுகிறேன்"
R.Barathy