வெங்கயவர் எண்ணுவரோ வேறு - புன்மை, தருமதீபிகை 618

நேரிசை வெண்பா

உண்ணல் உறங்கல் உருளல் உடைபூண்கள்
பண்ணல் பழிவினைகள் பாராட்டல் - வண்ணமுலை
மங்கையரைக் கூடி மருவல் இவையன்றி
வெங்கயவர் எண்ணுவரோ வேறு. 618

- புன்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உண்ணுவது, உறங்குவது, உடை அணிகளைப் பூண்டு அலட்டித் திரிவது, காம போகங்களில் களித்துக் கிடப்பது ஆகிய இந்த இழி நிலைகளைத் தவிர வேறு உயர் நலங்கள் ஒன்றும் கயவர் கருதார்; ஆதலால் அவருடைய வாழ்வு வீணானதே என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உடல் உயிர்களின் கூட்டமே. சீவர்களின் நீட்டமாக யாண்டும் நிலவி வருகின்றது. என்றும் நிலையாயுள்ள உயிர்க்கு எவ்வழியும் நிலையின்றி இடையே பொன்றி ஒழிகின்ற உடல் உறவாய் அமைந்துள்ளமை அதிசய விசித்திரமாயுள்ளது. அநித்தியமான தேகம் இருக்கும்போதே நித்தியமான உயிர்க்கு நிலையான பயனை அடைந்து கொள்ள வேண்டும். அங்ஙனம் அடைந்தவர் பேரின்ப நிலையினராய்ப் பெருமகிமை கொண்டுள்ளார்; அடையாதவர் கடையராயிழிந்து கடுந்துயரங்களில் உழலுகின்றார். உரிய பயன் ஒழியவே ஊனங்களாயின.

அழிந்து படுகின்ற உடலையே ஓம்பி அந்த அளவில் ஒழிந்து போபவர் இழிந்த மாக்களாய் எண்ணப் படுகின்றனர்.

உண்ணல் உறங்கல் உருளல் என்றது பசி தீர உண்பதும், உறங்குவதும் மங்கையரோடு முயங்குவதும் மயங்குவதும் ஆகிய செயல்களிலேயே இழிந்து கழித்துவரும் வகைகளை உணர்ந்து கொள்ள வந்தது.

உயிர்க்கு உரிய உறுதி நலங்களைக் கருதிக் கொள்ளாமல் வன விலங்குகள் போல் வறிதே திரிவது பழிபட்ட இழிவாழ்வு ஆதலால் அது செத்த வாழ்வேயாம்.

நேரிசை வெண்பா

முடிப்ப முடித்துப்பின் பூசுவ பூசி
உடுப்ப உடுத்துண்ப உண்ணா - இடித்திடித்துக்
கட்டுரை கூறின் செவிக்கொளா கண்விழியா
நெட்டுயிர்ப்போ(டு) உற்ற பிணம். 31

- நீதிநெறி விளக்கம்

நல்ல அறிவுரைகளைக் கேட்டு ஞான நிலையில் உயர்ந்து வாழாமல் ஊன உடலையே ஓம்பி உழல்வது ஈனமாம் என இது உணர்த்தியுள்ளது. உயர்ந்த உணவுகளை உண்டு, சிறந்த உடைகளை அணிந்து, இனிய வாசனைகளைப் பூசி, அரிய மலர் மாலைகளைச் சூடிப் பெரிய அரச வாழ்வில் இருந்தாலும் உரிய உணர்வு குன்றி உயிர் ஊதியத்தை இழந்திருப்பின் அது பெரிய இழவேயாம்.

ஒத்ததை உணராமல் உண்டு களித்து வாழ்பவர் சவங்களே என்பது உய்த்துணர வந்தது. செத்த சவத்தில் மூச்சு இராது; ஒத்ததை உணராத இந்தப் பிணத்தில் மூச்சு ஓடிக் கொண்டிருக்குமாதலால் உயிர்ப்போடு உற்ற பிணம் என்றார். பயன் இழந்தபோது மனிதன் பாழாகின்றான்.

நேரிசை வெண்பா

உப்பிருந்த ஓடோ? ஒதியோ? உலாப்பிணமோ?
வெப்பிருந்த காடோ? வினைச்சுமையோ? - செப்பறியேன்
கண்ணப் பருக்குக் கனியனையாய்! நிற்பணியா(து)
உண்ணப் பருக்கும் உடம்பு.

- சிவநேச வெண்பா

பராபரனைப் பணியாது பருத்திருக்கும் உடம்பை இராமலிங்க அடிகள் இங்ஙனம் வெறுத்திருக்கிறார். உயிர்க்கு எவ்வழியும் ஆதாரமாயுள்ள அந்தப் பரம்பொருளைச் செவ்வையாகத் தோய்ந்து கொள்வதே உடம்பு எடுத்த பயன்ஆம்; உரிமையான அப்பயனை இழந்து போவது கொடுமையான பழியாய் நின்றது. ஒதி - ஒருமரம். உலாப்பிணம் என்றது நடைப்பிணம். உயிருடையதாயினும் துயரான பொறி புலன்களில் வெறிமண்டி வீழ்ந்து மனம்போன பழியுடையதாதலால் பயன் இல்லாத உடல் பழியடைய நேர்ந்தது.

பொறி புலன்களில் வெறிமண்டி வீழ்ந்து மனம்போன போக்கெல்லாம் மதியழிந்து போதலால் மனிதன் கதி இழந்து கடையனாயினான்.

மனமும் மனிதனும்.
நேரிசை ஆசிரியப்பா

கொடுந்தவம் புரிந்தொரு குரங்குபெற் றாற்போல்
மலைக்கப் பெற்றிட மனமெனும் இளைஞன்
உலக்கைக் கொழுந்தென ஒருவன் பிறந்தனன்;
வருமிவன் சேட்டை வகுக்கவாய் கூசும்:
விதிவிலக்(கு) அறியா மிகச்சிறியன் ஆயினும்
விண்மண் நடுங்க வினைகள் இயற்றிக்
காமக் குழியில் கடுகிப் படுகுழி
விழுமதக் களிறென விழுந்து திகைப்பன்;
பதியை இழந்த பாவையின் செயல்போல்
கோபவெங் கனலில் குதித்து வெதும்புவன்;
நிதிகவர் கள்வர் நேரும் சிறைஎன
உலோபச் சிறையில் உழன்று வாழ்வன்;
மோகக் கடலில் மூழ்கி மயங்குவன்;
மதத்தால் வீறி மதங்களில் வியப்பன்:
மச்சரங் கொண்டு மகிழ்கூர்ந்(து) அலைவன்:
காசில் ஆசை மூசிய வேசையை
அரிய தெய்வமென்(று) ஆடுவன்; பாடுவன்;
அணிகள் அணிவன்; அடியும் பணிவன்;
எலும்பைச் சுரண்டும் எரிநாய் போலச்
சுற்றுவன்; பற்றுவன்; தொழுவன்; எழுவன்;
கணத்தில் உலகெலாம் கண்டே இமைப்பில்
உற்ற இடத்தில் உறுவன் அம்மா!
சேய்மை எல்லாம் செல்லற் கிளையான்
பித்தோங் கியஉன் மத்தனாய்த் திரிவான்;
சொல்வழி நில்லான்; நல்வழி செல்லான்:
சேர அழைக்கில் சிரத்தே ஏறுவன்:
வெட்டிலும் துணியான்; கட்டிலும் குறுகான்;
கள்ளது குடித்துத் துள்ளுவான் போல
மதத்தால் பொங்கி வழிந்து துள்ளுவன்;
பிறந்த இப்பாவி இறந்தான் இல்லையே!
சென்றநாள் எலாமிச் சிறுவனால் அன்றோ
வருசுகம் காணா வைச்சுமை நேர்ந்தேன்.

மனத்தைக் குறித்து இதில் உரைத்திருக்கும் நிலைகளை ஓர்ந்து உணர்க. புல்லிய புலையாட்டங்கள் புலனாய் நின்றன.

உலக மையல்களில் இழுத்து அலைந்து அல்லல் பல செய்து எல்லையில்லாத இடர்களை மனம் இழைத்ததனாலேதான் நல்ல கதியை இழந்து நான் நாசமுற நேர்ந்தேன் என மானச மருமங்களை வெளிப்படுத்தி ஒரு ஞான சீலர் இவ்வாறு பரிதபித்திருக்கிறார். அறிவுக் காட்சி அரிய பல உரிமைகளை அருளுகிறது.

மதி கெட்டு மடையனாய் மயங்கி அலைபவன் கதிகெட்டுக் கடையனாய் இழிந்து தொலைகின்றான். உறுதிநலங்களை உணர்த்து ஒழுகினவன் உயர்ந்த பேரின்ப நிலையை அடைந்து கொள்கிறான். அடையவுரியதை அடையாதிருப்பது அவமேயாம். கருதி உணர்ந்து கதி நலம் காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-May-20, 11:13 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 44

மேலே