தேர்தலோ தேர்தல்

(2015 தேர்தலுக்கு முன் எழுதிய ஒரு கற்பனைக்கதை)
(இது வெறும் நகைச்சுவைக்காகவே எழுதியதேயன்றி யாரையும், எந்தக்கட்சியையும் தாக்குவதற்காக எழுதப்படவில்லை)

தேர்தல் சீஸன் என்பது ஒரு மட்டுமல்ல. ஒருதெருவிழாவும் கூட. கட்சிகள் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு இந்தத் தெருவிழா ஆட்டத்தில் இறங்கி இருக்கின்றன. முன் பத்துப் பின் பத்து என்பது போல பல கட்சிகளும் வாக்காளர்களைக் கவர தேர்தலுக்கு முன்னால் சில சலுகைகள், தேர்தலுக்குப் பின் வெற்றி பெற்றால் பல சலுகைகள் என்று சலுகைகளை கொடுக்க முடியுமா முடியாதா என்ற கவலை இன்றி அள்ளி வீசுகின்றன. ஏற்கெனவே ஃபேன், டிவி, மிக்ஸி, கிரைண்டர், லாப் டாப், ஆடு, மாடு, கோழி என்று எதை எல்லாம் இனாமாகவோ, விலை இல்லாமலோ கொடுக்க முடியுமோ எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு இந்தத் தேர்தலிலும் பல சலுகைகளை வழங்க முன்வந்துள்ளன. இனாம்களில் நம்பிக்கை இல்லாத ஜனநாயகக் கட்சிகளும் சலுகைகளை வழங்கவந்திருப்பது இந்தத் தேர்தலின் ஒரு திருப்பு முனை. கட்சிகளின் வாக்குறுதி கிடக்கட்டும். இது குறித்து மக்கள் எந்த விதமான சலுகைகளை விரும்புகிறார்கள என்று தெரிந்து கொள்ள எனக்கு வந்த ஆவலில் என் தலை வெடித்துவிடும் போல் இருந்ததால் அதிலிருந்து தப்ப எனக்கு என்று நிருபர் யாரும் இல்லாததால் நானே பல்லாயிரக்கணக்கான மக்களை மொட்டை வெய்யிலில் பேட்டி கண்டு அவர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்துகொண்டு அதில் ஒரு சிறு பகுதியை வாசகர்களாகிய உங்களுக்குச் சமர்ப்பிக்கப் போகிறேன்.
***
ஏழைப்பெண்கள்

ஒரு கட்சி ஒவ்வொரு குடும்பத்திலுள்ள குழந்தைங்களுக்கும் தினமும் அரை லிட்டர் பால் தரப் போறாங்களாமே. அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?

ஆமாம். இது தேர்தல் முடியற வரையிலுமா? இல்லை. அடுத்த தேர்தல் வரையிலுமா?

இது அந்தக் கட்சி தேர்தல்லே ஜெயிச்ச பிறகுதான்.

அப்படின்னா தேர்தலுக்கு முன்னாலே தரமாட்டாங்களா?

தரமாட்டாங்க.

இதென்னடி இது கூத்து? முன்னாலே தரமாட்டாங்களாம். ஜெயிச்ச அப்புறம்தான் தருவாங்களாம்.

அந்தப் பாலு கெட்டுப் போயிட்டா மாத்துக்குப் வேறே பால் தருவாங்களா?

எங்க ஊட்டுலே நாலு குழந்தைங்க இருக்கே. அரை லிட்டர் எப்படிப் பத்தும்?

பாலுக்குப் பதிலா, கெரசின் தந்தாத்தான் பத்தும்.

தேர்தல்லே தோத்துப் போயிட்டா, அந்தக் கட்சி பாலு தராதா?

தேர்தல்லே ஜெயிச்ச அப்புறம்தான் அந்தப் பாலு.

தோத்துட்டா?

அந்தக் கட்சிக்குப் பாலுதான்.

நேத்து ஒரு கட்சி வந்து பிரிட்ஜ் தரேன்னது.

பிரிட்ஜ் இல்லே. ஃப்ரிட்ஜ். பிரிட்ஜ்னா பாலம். ஃப்ரிட்ஜ்னா குளிர்ப் பொட்டி.

அது என்ன எளவோ? வாயிலே நுழஞ்சாத்தானே?

அம்மாம் பெரிய பெட்டி வாயிலே நுழஞ்சா என்ன ஆறது?

என்ன என்னை ஒண்ணும் தெரியாத பொட்டச்சின்னு நெனச்சியா? எனக்கு எல்லாம் தெரியும்.

சண்டையை நிறுத்துங்க. எதுக்கு ஓட்டுப் போடுவீங்க?

யார் எலக்சனுக்கு இரண்டாயிரம் தராங்களோ….
அதுக்கும்மேலே எலேக்சனுக்கு அப்புறம் பிரிட்ஜ் தராங்களோ அவங்களுக்கத்தான் எங்க ஓட்டு.

ஆனா அவங்க தான் கரண்ட் காசை மாசாமாசம் கட்டணும்.

அதெல்லாம் வேணாம். பிரிட்ஜ் கொடுத்தவுடனே அதை 3000 ரூபாய்க்கு வித்துட்டு எம் வூட்டுக்கார்ர் கடனை அடைப்பேன்.

அது வேண்டாத வேலை. நாம கடனைக் கட்ட வேண்டிய அவசியமே இல்லை. அரசாங்கம் எதுக்கு இருக்கு?

அதுவும் சரிதான்.
******

ஓட்டலில் சாப்பிடுபவர்கள்

நீங்க யாருக்கு ஓட்டுப் போடுவீங்க?

மூணு வேளை கும்பகோணம் டிகிரி காபி யார் கொடுக்கறாங்களோ அவங்களுக்குத்தான் என்ஓட்டு.

எந்தக் கட்சி தினமும் காலைலே வயிறு நிறைய இட்லி, சட்னி, சாம்பார் கொடுக்குதோ அந்தக் கட்சிக்குத்தான் என் ஓட்டு.

நீங்க சும்மா இருங்க. மசால் தோசைக்குத்தான் என் ஓட்டு.

தினமும் மூணு வேளை மசால் வடை தரவங்களுக்குத்தான் என் ஓட்டு

இல்லீங்க. ஆம்லட், இல்லை ஆஃப் பாயில்ட் முட்டை யார் தராங்களோ அவங்களுக்குத்தான் என் ஓட்டு.

அட போங்கய்யா. கேக்கறதுதான் கேக்கறோம். தாராளமாக் கேக்க வேண்டியதுதானே. இதுலே கஞ்சத்தனம் எதுக்கு? நெதமும் ரெண்டு வேளை சாப்பாடு ரெண்டு வேளை டிபன் கொடுக்கணும். வாரத்துக்கு ஒரு நாள் அப்பளம், வடை பாயசத்தோடே …..

ஏன் சிக்கன், முட்டை எல்லாம் விட்டுட்டீங்க?

நான் சுத்த சைவம்

நீங்க செத்த சைவம். தினம் ஏதாவது கறி இருக்கணும்.

கரி எதுக்குங்க?

அதுதான் இந்த இலை, தழை சாப்பிடறவங்க கிட்டேயே பேச்சு வெச்சிக்கிறது இல்லே. நான் சொல்றது ஆட்டுக்கறி, மாட்டுக்கறியை. ஒங்களை மாதிரி அடுப்புக்கரி ஆள் இல்லை நாங்க.

அவர்களுக்குள் சண்டை வருவதற்குள் அங்கிருந்து விட்டேன் சவாரி.

வீடு இல்லாதவர்கள்

என் வீட்டு ஓட்டைப் பிரிச்சி புதுசா ஓட்டைப் போட்டுத் தரவனுக்குத்தான் என் ஓட்டு.

இப்பவே ஓட்டை இருக்கிறதாலே தானே வீடு ஒழுகுது. இன்னும் ஓட்டைப் போட்டுத் தரவனுக்குத்தான் என் ஓட்டுன்னு சொன்னா எப்படிங்க?

ஏங்க ஒட்டு வீட்டைக் கட்டிக்கிட்டு அழணும்?. யார் புதுசா மச்சு வீடு கட்டித்தராங்களோ அவங்களுக்குத்தான் என் ஓட்டு.

குளத்துலேயோ, குட்டையிலேயோ வீடு கட்டித்தந்தா, அந்த வீட்டை வெள்ளம் அடிச்சிட்டுப் போறதுக்கா?

தண்ணி குழாய்லேதான் வரணும். வீட்டுக்குள்ளே வரக்கூடாது.நல்ல மேடான இடத்துலே பெரிய வெள்ளம் வந்தாக்கூட மூழ்காத இடத்துலே வீடு கட்டித் தரணும்.

இப்ப சென்னையிலே வந்துதே அந்த மாதிரி வெள்ளத்தைச் சொல்றியா?

அப்புறம் வீட்டுக்கு ஒரு போட் தரணும்

என்ன போட்டுத்தரணும்?

ஒண்ணையும் போட்டுத்தர வேணாம். நான் சொல்றது தண்ணியிலே முதக்குமே அந்த போட்

அந்த வீட்டைக் கட்டித் தந்துட்டு அக்கடான்னு அரசாங்கம் போயிடக்கூடாது. பொங்கலுக்குப் பொங்கல் வெள்ளை அடிச்சித் தரணும்.

அப்புறம் ஆடு, மாடு, கோழி இதுக்கெல்லாம் இடம் ஒதுக்கித் தரணும் . இதெல்லாம் எந்தக் கட்சி செய்யுதோ அந்தக் கட்சிக்குத்தான் என்ஓட்டு
*******

வரி கட்டாத பொது மக்கள்

அப்படி எல்லாம் சொல்லக் கூடாதுங்க. விரலுக்குத் தகுந்த வீக்கம். அவங்கவங்களாலே என்ன தர முடியுமோ அதைத்தான் அவங்க சொல்றாங்க.

அந்தக் கட்சியா தரப் போகுது?. எல்லாம் அரசாங்கப் பணத்துலே தானே தரப் போறாங்க. தரதுதான் தராங்க. தாராளமாத் தரவேண்டியதுதானே.

அரசாங்கப்பணம்னா அது நாம கட்டற வரிப்பணம்தானே. அதனாலே அது நம்ம பணம்தானே.

நான் இந்த வரி ,கிரி யெல்லாம் கட்டறது இல்லீங்க.

அதென்ன அப்படிச் சொல்றீங்க?

ஆமா, இவங்க எல்லாம் எனக்கு மாமனா மச்சானா?

என்னங்க வீரபாண்டியக் கட்ட பொம்மன் வசனத்தை இப்ப பேசறீங்க.

நாம உழைக்கிறோம். நாம சம்பாதிக்கிறோம். நாம ஏன் அரசாங்கத்துக்கு வரி கட்டணும்னு கேக்கறேன்?

அதுவும் நல்ல கேள்விதாங்க. ஆனா மறைமுகமா நாம வாங்கற எல்லாப் பொருள்ளேயும் வரி மறஞ்சி கிடக்குதுங்க.

அப்படியா சொல்றீங்க நீங்க? அப்படின்னா எந்தக் கட்சி எல்லா வரியையும் ஒழிச்சிக் கட்டுதோ அந்தக்கட்சிக்குத்தான் என் ஓட்டு.

வரி இல்லேன்னா எந்த அரசாங்கமும் ஓடாதுங்க.

இப்ப மாத்திரம் என்ன அரசாங்கம் ஓடிக்கிட்டா இருக்கு?

ஓடணும்னா ஓடணும்னு இல்லீங்க. அரசாங்கம் நடக்கணும் இல்லையா, அதைச் சொல்றேங்க.

அரசாங்கம் ஓடணுங்கிறீங்க, நடக்கணுங்கிறீங்க, படுக்கணுங்கறீங்க. ஆளை விடுங்க. என் ஒரே தீர்மானம் வரி போடாதவங்களுக்குத்தான் எங்க ஓட்டு. அவங்க போடற சட்டையிலே கூட வரி இருக்கக்கூடாது.
********

மோதிரப் பிரியர்கள்

விரலுக்குத் தகுந்த வீக்கம்னு சொல்லுவாங்க. அதனாலே அரசாங்கத்தாலே எவ்வளவு முடியுமோ அவ்வளவும் பண்ணுவோம்.

நீங்க விரலுக்குத் தகுந்த வீக்கம்னு சொன்ன உடனே எனக்கு ஒண்ணு தோணுதுங்க. எங்க வீட்டுலே இருக்கிற ஒவ்வொருத்தர் விரலுக்கும் யார் அரைப் பவுன்லே மோதிரம் போடறாங்களோ அவங்களுக்குத்தான் என் ஓட்டு.

அதுக்கு ரொம்ப செலவாகுங்களே.

அதனாலே என்ன? அரசாங்கம்னு வந்த பிறகு செலவுக்குப் பயந்தா எப்படி?

சரிங்க எங்க தலைவர்கிட்டே சொல்றேங்க.
*********

மாணவர்கள்

யார் லேடஸ்ட் ஸ்மார்ட் ஃபோன் தராங்களோ அவங்களுக்குத்தான் என் ஓட்டு. அதை விட்டுட்டு பாலு, தயிரு, இட்லி, காபின்னுட்டு இது என்னங்க கருமம்?

எந்தக் கட்சி பரீட்சையிலே காப்பி அடிக்கிறதை ஆதரிக்குதோ அந்தக்கட்சிக்குத்தான் என் ஓட்டு.

முட்டாப்பயலே, எந்தக் கட்சி பரீட்சையே கிடையாதுன்னு சொல்லுதோ அதுக்குத்தான் என் ஓட்டு.

மாணவங்க ஈவ் டீஸிங் பண்ணலாம்னு சொல்ற கட்சிக்குத்தான் என் ஓட்டு.

மாணவ மாணவிகளுக்கு என்னிக்கு வேணாலும் எத்தினி ஷோ வேணாலும் இனாமாப் பாக்க அனுமதிக்கிறவங்களுக்குத்தான் என் ஓட்டு.

லவ் பண்றவங்களை ஆதரிச்சி அதை எதிர்க்கிற பெற்றோர்களை உள்ளே பிடிச்சிப் போட்டு லவர்ஸூக்கு லவ் அல்”லவ்”வன்ஸூம் தந்து அவங்களுக்கு பெற்றோர்கள் கிட்டே இருந்து z பாதுகாப்பு தரவங்களை நாங்க ஆதரிப்போம்.

கிளாஸூலே என்ன செஞ்சாலும் எங்களைத் தட்டிக் கேட்காத ஆசிரியர்கள் இருக்கணும். அப்படித் தப்பித் தவறி ஏதாவது தட்டிக் கேக்கற ஆசிரியர்களை ஒரு தட்டுதட்டி அரெஸ்ட் பண்ணணும்.

நம்ம வீட்டுப் பொண்ணுகளுக்கு யார் இனாமா கல்யாணம் பண்ணி வெக்கராங்களோ அவங்களுக்குத்தான் என் ஒட்டு
********

அரசு அலுவலர்கள்

யார்நீங்க?

பிரைவேட் சர்வேயர்.

சர்வேயர்னா ரோடுலே போயி சர்வே எடுக்க வேண்டியதுதானே. இந்த நேரத்துலே இங்கே ஏன் வந்தீங்க?

பல கட்சிகளும் இந்த நேரத்துலே வாக்குறுதிகளை அள்ளிக் கொட்டறாங்க. நீங்க எந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடுவீங்கன்னு தெரிஞ்சிக்கத்தான் இந்த சர்வே.

அதுக்கு இப்ப ஏன் வந்தீங்க?

உங்களுக்கு லஞ்ச் இடைவேளை ஆச்சே அதான் வந்தேன்.

லஞ்ச் இடைவேளைன்னு யார் சொன்னா? இது எங்க லஞ்ச இடைவேளை.லஞ்ச் இடைவேளை இல்லை.

பின்னே கொஞ்ச நேரம் கழிச்சி வரவா?

இங்கே கொஞ்சறதுக்கு எல்லாம் நேரம் கிடையாது. சரி வந்து தொலச்சிட்டீங்க. சுருக்கமாச் சொல்றேன். கேள்விக்கு மேலே கேள்வி கேட்காம ஆளை விடுங்க. என் பேரு ,ஃபோட்டோ எதுவும் எங்கேயும் வரக்கூடாது.

சரிங்க. லஞ்சம் மற்றும் ஊழல் இல்லாத அரசாங்கத்தைக் கொடுக்கிறதா எல்லாக் கட்சியும் சொல்லுதே.

அதெல்லாம் சும்மாங்க. நாங்க இருக்கிற வரையிலும், நம்ம அரசியல்வாதிகள் இருக்கிற வரையிலும் அது நடக்காது. நடக்கவும் விடமாட்டோம்.

எங்களுக்கு மாசாமாசம் சம்பள உயர்வு தரணும். லஞ்சம் வாங்காம இருக்க வாராவாரம் லஞ்சப்படி தரணும். ஆபீஸுலே எங்க சீட்டுலே இருக்கணும்னு யாரும் எங்களைக் கட்டாயப் படுத்தக் கூடாது. காபி,டீ எல்லாம் குடிக்கப் போற நேரத்துலே எங்களை யாரும் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. ஒரு பேப்பரையோ,ஃபைலையோ இத்தனை நாளைக்கு மேலே எங்க டேபிள்ளே வெச்சி இருக்கக் கூடாதுன்னு சட்டத்தைச் சொல்லி மிரட்டக்கூடாது. அப்பப்போ நாங்க கேக்கற சலுகைகள உடனடியா நிறைவேத்தணும். அரசாங்கம் தாமதிக்கக் கூடாது, வருஷத்துக்குப் பதினஞ்சு நாள்தான் கேசுவல் லீவுங்கறதை உடனடியா வாபஸ் வாங்கணும். அதை மாசத்துக்குன்னு திருத்தம் செய்யணும். மெடிக்கல் லீவுக்கு டாக்டர் செர்டிபிகேட் கேட்கக்கூடாது. ஊழியர்கள் மீது அரசாங்கம் முழு நம்பிக்கை வைக்கணும். லஞ்ச் இடைவேளை ஒரு மணி நேரம்கிறதை மூணு மணி நேரம் ஆக்கணும். மேல் அதிகாரிகளோ ஃபீமேல் அதிகாரிகளோ எங்களை சும்மா அதைச் செய், இதைச் செய்யினு சொல்றதோ, ஒரு டெட் லைன் கொடுக்கிறதோ கூடாது. ஆபீஸுக்கு வந்துதான் வேலை செய்யணும்னு எங்களை யாரும் கட்டாயப் படுத்தக் கூடாது. ஆபீஸ்லே அட்டெண்டண்ட் ரிஜிஸ்டர்லே கையெழுத்துப் போடச்சொல்லி எங்களைக் கட்டாயப் படுத்தக் கூடாது. அப்படி ஆபீசுக்கு வரச்சொன்னா, வீட்டுலே இருந்து ஆபீசுக்குப் போய்வர எங்களுக்கு ஆட்டோ அலவன்ஸ் தரணும். எங்க ஊழியர் சங்கம் அப்பப்ப போடற தீர்மானங்களை அரசாங்கம் உடனடியா ஏற்றுக் கொள்ளணும். இதை ஆதரிக்கிற கட்சிக்குத்தான் எங்க ஓட்டு.
*********

நடுத்தர வர்க்கத்துப் பெண்கள்

மாசத்துக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கித்தர கட்சிக்குத்தான் என் ஓட்டுன்னு எங்க சங்கம் தீர்மானம் போட்டிருக்கு.

ஏண்டி, அந்தக் கட்சி உன் சங்கத்தோடே புருஷனா மாசத்துக்கு ஒரு பட்டுப்புடவை வாங்கித்தர. நல்ல வேளையாப் போச்சு வாரத்துக்கு ஒரு வைர நெக்லஸ் கேக்காம போனியே?

.ஏன் வாங்கித் தந்தா என்னவாம்?. போன தடவை நம்ம ஓட்டுப் போட்ட பரதேசி எம் எல் ஏ யோட பொண்டாட்டி இப்ப நாளுக்கு ஒரு நெக்லஸ் போட்டுக்கிட்டு மினுக்கலையா?
**********
விவசாயிகள்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் அப்படின்னு வள்ளுவரே கூறி இருக்கிறார். விவசாயம் நம் நாட்டின் உயிர்நாடி. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்பதால் விவசாயிகள் எல்லோரினும் மேம்பட்டவர்கள். இவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் இந்தத் தேர்தலில் என்று அரிய ஆவலாய் ஒரு பழுத்த விவசாயியைப் பேட்டி கண்டேன்.

அவர் சொன்னதாவது:
அவர்: எங்க மானங்காத்த பூமி இண்ணிக்கு வானம் பாத்த பூமியா ஆயிட்டுது. தண்ணி இல்லாம பயிருங்க எல்லாம் வாடுது. விளைச்சலே இல்லை. யார் , எந்தக் கட்சி என் நிலத்துக்குத் தண்ணி விடுதோ அந்த கட்சிக்குத்தான் என் ஓட்டு.

நான்: தண்ணி இருந்தாத்தானே விடுவாங்க. அவங்க தண்ணிக்கு எங்கே போவாங்க?

அவர்: எங்கே போவாங்க, வருவாங்கன்னு எனக்குத் தெரியாது. தண்ணி நிலத்துக்கு வந்தாகணும். அப்புறம் அரசாங்கம்னு எதுக்கு இருக்கு?. தண்ணிவிட யோக்கியதை இல்லாத அரசாங்கம் இருந்தா என்ன, போனா என்ன?

நான்: மழை பெஞ்சாத்தான் தண்ணி வரும்.

அவர்: இது எங்களுக்குத் தெரியாதா? இதச்சொல்ல ஒரு கட்சி, ஒரு அரசாங்கமா? எப்படியும் எங்களுக்குத் தேவையானபோது மழை பெய்ய வெக்கணும்.

நான்: உம்………...

அவர்: இப்ப கர்நாடகாவிலே இருந்து அவங்க இஷ்டப்படும்போதுதான் நமக்கு காவிரித் தண்ணி கொடுக்கறாங்க. மத்த நேரத்துலே நமக்கு தண்ணி காட்டறாங்க. இன்றைய விஞ்ஞான வளர்ச்சியை வெச்சி காவிரியை தமிழ்நாட்டுலே இருந்து கர்நாடகா போற மாதிரி திசை திருப்பி விடணும். கர்நாடகா நமக்கு இப்ப தண்ணி காட்டற மாதிரி நாம அதுக்குத் தண்ணி காட்டணும்.

நான்: இது…...

அவர்: முல்லைப் பெரியாறு தண்ணி முழுவதையும் தமிழ் நாட்டுப்பக்கமா திருப்பி விடணும்.

நான்: இதெல்லாம் எப்படிங்க முடியும்?

அவர்: முடியாட்டி ஓட்டு கிடையாது. அம்புட்டுத்தான்.
அப்புறம் மழை பெஞ்சாலும் பயிரெல்லாம் அழிஞ்சுடுது. பெய்யாட்டியும் அழிஞ்சுடுது. அதனாலெ மழை பெய்யற வருஷம் மழைக்கால பயிர் சேத நஷ்ட ஈடும், வெயில்காலத்துலே வெயில்கால பயிர் சேத நஷ்ட ஈடும், மழை பெஞ்சாலும் பெய்யாட்டியும், வெயில்அடிச்சாலும் அடிக்காட்டியும் ஒவ்வொரு வருஷமும் தரணும்.
பயிருக்கெல்லாம் இப்ப அரசாங்கம் கொடுக்கிற விலை எங்களுக்குக் கட்டு படியாகவில்லை. இடைத்தரகரை ஒழிச்சிட்டு நாங்களே நேரடி வியாபாரம் பண்ற மாதிரி எவ்களுக்கு டிவி, ஃப்ரிட்ஜ் மாதிரு டிராக்டர், விளைச்சலே அதிகப்படுத்த டிராக்டரும், பண்டங்களை சந்தைக்கு எடுத்துக்கிட்டுப்போக டிரக்கும் அரசாங்கம் எங்களுக்குத்தரனும்.

நான்: இந்த விவசாயிங்க தற்கொலை பத்தி….

அவர்: எந்த விவசாயி தற்கொலை பண்ணிக்கிட்டாலும், நஷ்ட ஈடா மாசாமாசம் முப்பதினாயிரம் ரூபா அவங்க குடும்பத்துக்குத் தந்துடணும். அவன் கொழந்தைங்களுக்கான படிப்பு மத்தும் கல்யாண செலவு எல்லாத்தையும் அரசாங்கமே ஏத்துக்கணும்.இப்படிப் பண்ணினாத்தான் தற்கொலை பண்ணிக்கிட்டவங்க ஆவி அமைதியாகும். இது தவிர விவசாயிங்க பிள்ளைங்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு பண்ணித்தரணும்.

தான்: ஜாதி ஒதுக்கீட்டுலேயே அது வந்துடுமே.

அவர்: இப்ப உடல் ஊனமானவங்க கூட ஜாதி ஒதுக்கீட்டுலே வரலாம். அவங்களுக்குத் தனியா இட ஒதுக்கீடு பண்ணலையா? அது போலத்தான் இதுவும்.

நான்: இப்பவே இட ஒதுக்கீடு 69 சதவீதத்துக்குப் போயிட்டுது. இப்படி ஆளாளுக்கு இட ஒதுக்கீடு கேட்டுக்கிட்டு இருந்தா இட ஒதுக்கீடு எப்படிங்க முடியும்?

அவர்: அதான் 100 விழுக்காட்டுலே உன்னும் 31 பாக்கி இருக்கு இல்லே. அப்புறம் என்ன?

நான்: சுப்ரீம் கோர்ட் ஒப்புக்காது இல்லே.

அவர்: சுப்ரீம் கோர்ட் என்னங்க சுப்ரீம் கோர்ட்? ...... இதுக்குமேலே அவர் சொன்ன வார்த்தையை எழுதறதுக்கு இல்லை.

ரொம்பவும் விவரம் தெரிஞ்ச விவகாரமான விவசாய ஆள்கிட்டே மாட்டிக் கிட்டோமோ, மேலும் எதையாவது பேசிவிடப் போகிறாரே என்று பயந்து நடையைக் கட்டினேன்.
**********************

எழுதியவர் : ரா. குருசுவாமி (ராகு) (17-Jun-20, 2:55 pm)
சேர்த்தது : ரா குருசுவாமி
Tanglish : therthalo therthal
பார்வை : 86

சிறந்த நகைச்சுவைகள்

மேலே