வேணாம்வேணாம்வேணவே வேணாம் 2 போலீஸ்கார்ர்
போலீஸ் பொழப்பு என்ன பொழப்புங்க? நாய்ப் பொழப்பை விட மோசமான பொழப்பு எங்க பொழப்பு. மத்த எல்லாரும் எட்டு மணி நேர ஊழியர்களனா நாங்க இருபத்து நாலு மணி நேர ஊழியர்களாம். ஓய்வு ஒழிவே கிடையாது. எங்களுக்கு. ஒரு நல்ல நாள் கெட்ட நாள் கிடையாது. வீட்டிலே ஒரு விசேஷம்னா கலந்துக்க முடியுதா இல்லை ஊர்லே ஒரு பண்டிகைனா கொண்டாடத்தான் முடியுதா? எல்லாம் போலீஸ்காரன் தலையழுத்து. விசேஷ நாள்லே தான் எங்ளுக்கெல்லாம் ஸ்பெஷல் ட்யூடி. பாதுகாப்பு பந்தோபஸ்துன்னு அன்னிக்கு தான் என்னிக்கும் விட வேலை ஜாஸ்தி. நாட்டுலே நாளுக்கு நாள் திருட்டு, கொள்ளை எல்லாம் ஜாஸ்திஆயிட்டே போகுது. புது புது டெக்னிக்குகளைப் புகுத்தி கொள்ளை, கொலை எல்லாம் செய்யறாங்க. அந்த டெக்னிக்குகளைப் புரிஞ்சிக்கிறதே பெரும்பாடா இருக்கு. போன தீபாவளியன்னிக்கு என்பொண்ணுக்கத் தலைதீபாவளி. நான் கஷ்டப்பட்டு லீவு வாங்கினேன். அன்னிக்குன்னு பார்த்து என்னோட ஏரியாலே ரெட்டைக்கொலை நடந்துடிச்சு. அவ்வளவு தான் அவசர அவசரமா ஃபோன் மேலே ஃபோன் போட்டு என்னை உடனே ஸ்பாட்டுக்கு வரச்சொல்லிட்டாங்க. அப்புறம் போகாம இருக்க முடியுமா? பொண்ணு மாப்பிள்ளையை எல்லாம் அம்போன்னு விட்டுட்டுப் போக வேண்டியதாயிட்டுது. நாள் முழுவதும் அந்தப் பொணங்களோடேயே பொழுதைக் கழிக்க வேண்டியதாப்போச்சு.சில சமயம் மூணு நாலு நாள் கழிச்சி பொணத்தைத் தோண்டி எடுக்க வேண்டி வரும். அப்ப அந்த நாத்தத்தை சகிச்சிகிட்டு வேலை செய்யறது இருக்கே அது ரொம்பக் கொடுமைங்க. இதுலே கைதிகளை கோர்ட்டுக்கு அழைச்சிக் கிட்டு போகும் போதெல்லாம் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணுங்க. இல்லை எங்க வேலை போயிடும் இல்லை எங்க உயிரே போனாலும் போயிடும். பெரிய பெரிய அரசியல் வாதிகளெல்லாம் வராங்கன்னா அவங்க பத்திரமா ஊர்போய்ச் சேருற வரையிலும் எங்களுக்கு உயிரே இருக்காது. இப்படி நான் எவ்வளவோ சொல்லிக் கிட்டே போகலாம். பொழுது விடிஞ்சி பொழுது போனா எப்பவும் ரௌடிகளுக்கு மத்தியில தான் நாங்க இருந்தாகணும். இதுலே நாங்க சுட்டாத்தப்பு சுடாட்டா தப்புன்னு இந்தப் பத்திரிகைக்காரங்க, டிவிக்காரங்க எங்களை அடிக்கிற கடுப்பு இருக்கே, ஏண்டா உயிரோட இருக்கோம்னு ஆயிடும். வேளா வேளைக்குச் சாப்பாடு கிடையாது. நேரம் கெடைக்கும்போது சாப்பிடறதாலே வயிறு கெட்டுப்போய் உப்புசம் ஏற்பட்டு வயிறு வீங்கிடுது. உடனே தொப்பை விழுந்துடுச்சுன்னு சொல்லி எங்களைக் கடுப்பேத்தறாங்க. மாமூல், லஞ்சம் அப்படி இப்படின்னு சொல்லி எங்க தலையை உருட்டறாங்க. போதாக்குறைக்கு இந்த சினிமாக்காரங்க எங்களைக் காமெடியன் ஆக்கி கலாய்க்கறாங்க. இல்லே. வில்லனாக்கி விளையாடறாங்க. ஒரு சிலபேர் லஞ்சம் வாங்கறாங்க. நான் இல்லேன்னு சொல்லல்லே. அதுக்காக விடிஞ்செழுந்தா போலீஸ்காரன் லஞ்சம் வாங்கறதையே பெரிய நியூஸாப் போட்டுடறாங்க. கோடிக்கணக்குலே லஞ்சம் வாங்குறவன் எல்லாம் குஷாலா இருக்கறான். அஞ்சு பத்து வாங்குறவனைப் பாத்து வயிறெறியறாங்க ஜனங்க. எங்க வேலையிலே கால் மடங்கு வேலை செய்யறவங்களெல்லாம் எங்களை மாதிரி நாலு மடங்கு சம்பளம் வாங்கறாங்க. நாங்க சங்கம் வெச்சுக்க முடியாது. எங்க கஷ்டங்களை எல்லாம் வெளியே நாங்க ஓபன்னா பேசமுடியாது. இதுக்கு மேலே இதைப் பத்தி பேசவேணாம்னு பார்க்கிறேன்.
இப்படி இருக்கும்போது என் பையனை எந்த வேலைக்கு போகப் போறேனு கேட்டா அவன் போலீஸ் வேலைக்குப் போகப்போறேன்னு சொல்றான். டேய், வேணாண்டான்னு சொன்னா நான் பெரிய போலீஸ் ஆபீசர் ஆகப் போறேங்கறான். ஆபீஸரானாலும் அந்த லெவலுக்கேத்த தொல்லைகளும் தொந்திரவுகளும் இருந்துகிட்டுத்தான் இருக்கும். இருந்து பாத்தாத்தான் போலிஸ்காரன் கஷ்டம் உங்களுக்கெல்லாம் புரியும். அதனாலே போலீஸ் பக்கமே தலையை வச்சிப் படுக்காதேடான்னு என் பையன்கிட்டே சொல்லியிருக்கேன். ஒரு இஞ்சினீயராவோ அல்லது ஒரு டாக்டராகவோ ஆகறதுக்குப் படின்னு சொன்னா கேக்க மாட்டேங்கறான்.. டாக்டர் அல்லது இஞ்சினீயரா போகப் பிரியப் படல்லைனா வாத்தியாராகவாவது ஆகலாம். வேணாம்.வேணாம். இந்த போலீஸ் உத்தியோகமே வேணாம். அது என்னோடு போகட்டும். வேணாம். வேணாம் .வேணவே வேணாம் போலிஸ் வேலை.