வாழ்க்கைப் பயணம்
தாய் தந்தையின்
கருத்து வேறுபாடு
வளரும் குழந்தைகள் படும்பாடு
எப்போதும் இருவரும்
சண்டை முரண்பாடு விட்டுக்கொடுக்காமை என்ற
பேய்களின் தொடர்போடு இருப்பார்கள்
நான் அன்று
ஒன்றும் அறியா விளையாட்டுச் சிறுவன்
தாய் தந்தை சண்டையை
முதலில் பார்த்தப்போது
பயமாக இருந்தது
நாளடைவில் அது பழகிப்போனது
இனி இருவரும்
சேர்ந்துவாழ வாய்ப்பே இல்லை
என்ற ஒரு கட்டம் வந்தது
அப்பனும் ஆத்தாளும்
பிரிந்துவிட்டனர்
நான் தாயோடு என் தாத்தா
வீட்டுக்கு அனுப்பப்பட்டேன்
அப்பாவைவிட்டு நான் பிரிந்தாலும்
அவரின் அக்கறை மட்டும்
என் அருகாமையிலே இருந்தது
என்னை சந்திக்க என் பள்ளிக்கு
வருவார்
அவருக்கு என்மீது
அளவுகடந்த பாசம்
எனக்கு எல்லாவற்றையும்
சிறந்ததாகவே வாங்கிக்கொடுப்பார்
எனக்கும் ஆசை இருந்தது
அப்பா அம்மா மீண்டும்
இணைந்துவிடுவார்களா என்ற
ஒரு தீராத ஆசை
இருவரும் இணையா இருக்கோடுகளாகவே
இருந்து வந்தனர்
என் தந்தை இறந்துவிட்ட
அந்த அதிர்ச்சி செய்தி
என் காதில் விழுந்தது
என் தாய்
மார்பிலும் வயிற்றிலும்
அடித்துக்கொண்டு அழுது
மயங்கி கீழே விழுந்துவிட்டாள்
அவள் அழுதக் காட்சியை
எதற்கும் ஒப்பிட்டு சொல்லிவிடமுடியாது
அம்மா அப்பா இருவரும்
பிரிந்திருந்தாலும்
அப்பா இருக்கிறார்
என்ற அந்த உன்னதமான
அடையாளங்கள் அம்மாவிடம்
இருந்தது
அவைகளை இழந்து நிற்கும்
அம்மாவை என்னால்
பார்க்கவே முடியவில்லை
தினம் தினம்
அம்மா அழுதுக்கொண்டே இருந்தாள்
அப்பாவை நினைத்து
அம்மாவிடம் கேட்டேன்
இவ்வளவு பாசம் உள்ள நீ ஏம்மா
அப்பாவைவிட்டு பிரிந்தீர்கள் என்று
அம்மா அழுதுக்கொண்டே சொன்னாள்
சந்தோஷம் கொடுக்காதவனிடம்
கூட நிம்மதியாய் வாழ்ந்துவிடலாம்
சந்தேகம் கொண்டவனிடம்
எப்படி வாழமுடியுமென்று...
.