கேட்காது

என் அனுபவ உண்மைக் கதை

இந்த உலகத்துலே ஒருவன் நொண்டியாக இருக்கலாம்.
குருடனாக இருக்கலாம்.
ஊமையாக இருக்கலாம்.
ஆனால் செவிடனாக மட்டும் இருக்கவே கூடாது.
கண்தெரியாதவர்களை ஐயோ பாவம் என்கிறது இவ்வுலகம்.
கால், கை இழந்தவர்களுயும், ஊமைகளையும் கூட அனுதாபத்துடன் பார்க்கிறது இந்த உலகம்.
ஆனால் செவிடர்களை வெறும் ஜோக்கர்களாகத்தான் பார்க்கிறது .
இதை என் சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்.
மற்ற குறைபாடு உடையவர்களை அனுதாபத்துடன்பார்த்து அனுசரித்துப்போகும் அதே உலகம் ஏன் செவிடர்களுக்கு ஐயோ பாவம் சொல்வதில்லை. அதற்குப்பதில் செவிட்டுப்பொணம் என்ற பட்டத்தைக் கொடுக்கிறார்களே அது ஏன்?
ஒரு ஆள் திரும்பத்திரும்ப ஊரே கேட்கிற அளவுக்குத் தொண்டை கிழிய ஒரு சமாசாரத்தை செவிடன் ஒருவனுக்குப் புரிய வைக்க முயலும்போது பொறுமை இழந்துவிடுவது இயற்கைதானே.
எதற்கு இவ்வளவு முத்தாய்ப்பு என்று கேட்பீர்கள்.
எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு முன் என் காதின் சோக க் கதையைக் கேட்டால் அப்படியாவது யாராவது ஒருவர் அல்லது இருவரின் அனுதாபம் கிடைக்காதா என்ற ஒரு நம்பிக்கைதான்.
சரி. இப்ப நான் என் சொந்த ( நொந்த) கதைக்கு வருகிறேன்.
நல்ல வேளையாக நான் உத்தியோகத்தில் இருந்த வரை எனக்குக் காது ஓரளவு சுமாராகக் கேட்டுக்கொண்டிருந்தது. மேலதிகாரிகள் என்னைத் திட்டுவதெல்லாம் தெளிவாகக் கேட்க முடிந்தது.
அப்புறம் வயது தன் வேலையைக்காட்ட ஆரம்பித்தது . திடீரென்று ஒரு நாள் நான் TVயைப் பார்த்துக் கொண்டிருந்த போது வழக்கமாகக் கேட்கும் அழுகைச் சத்தம் மிகவும் குறைவாகக் கேட்டது. வால்யூமைக் கூட்டினேன். என் மனைவி
“ஏன் இவ்வளவு சத்தமாக வைக்கிறீர்கள்” என்று சத்தம் போட்டாள். அது என்காதில் நன்றாக விழுந்தது. அப்போதுதான் அவள் சொன்னாள்
“வர வர உங்களுக்குக் காது கேட்பதில்லை. காரியச்செவிடோ என்று நினைத்தேன். எப்போது இந்த TV சத்தம் குறைவாகப் பட்டதோ அப்போது உங்கள் காது நிஜமாகவே ‘கேட்காது’ ஆகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன். முதலில் காது டாக்டரைப் பாருங்கள்” என்று அவள் சற்று உரக்க சொன்னவுடன் எதிர் ஃப்ளாட்காரர் வீட்டிக் கதவைத் தட்டி
“ஏன் இப்படிக்கத்துகிறீர்கள். எங்கள் வீட்டுக் குழந்தை தூங்க முடியவில்லை” என்று ஒரு வார்னிங் கொடுத்துவிட்டுப் போனார். அவர் வீட்டுக் குழந்தை ராத்திரி பூராவும் விரா விராவென்று அழுவது என்காதிலேயே விழுந்து என் தூக்கத்தையே கெடுப்பதை யாரிடம் நான் போய்ச்சொல்ல.
இப்பொழுதெல்லாம் என்னால் TV யைப் பார்க்க மட்டும்தான் முடியறதே தவிர புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள என்ன இருக்கிறது என்று சொல்கிறீர்களா? அதுவும் உண்மைதான்.
என்மனைவியின் தொந்திரவு தாங்காது அடுத்த வாரமே ஒரு ENT டாக்டரிடம் சென்று காதைக் காட்டினேன்.
உடனே காதுக்கான டெஸ்டுகளைச்செய்ய ஆரம்பித்தார்.
“எத்தனை நாளா உங்களுக்கு இந்த ப்ராப்ளம்” என்று கேட்டார். அவர் என்ன கேட்கிறார் என்று கேட்கவில்லை. டாக்டர் குரலை உயர்த்திப்பேசினார்.பிறகு சைகையுடன் கலந்த பாஷையில் ஒரு மெஷினுக்கு முன் உட்கார வைத்து
“நான் இதைத்தட்டுவேன். அந்த சத்தம்கேட்டால் நீங்க இந்த மெஷினின் இந்த பட்டனை அழுத்தவும்” என்றார். முதலில் காதில் ஒலி விழ விழ நான் பட்டனைத் தட்டி வந்தேன். அந்த ஒலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து பிறகு எனக்குக் கேட்கவில்லை. அத்துடன் அவர் நிறுத்திக்கொண்டு அதே டெஸ்டை அடுத்த காதுக்கும் செய்தார். பிறகு ரெண்டு காதுக்குமான சார்ட்டைக்காண்பித்து உங்கள் வலது காது இடது காதை விட மோசமாக இருக்கிறது என்றார்.
“ Your right ear is a bad ear. Left ear is a better ear என்றார். பிறகு
“உங்களுக்கு ஜலதோஷம் அடிக்கடி பிடிக்குமா?” என்றார்
ஜலதோஷம் என்ன ஐஸ்கிரீமா பிடிப்பதற்கு என்று என் மனதிற்குள் நினைத்துக் கொண்டு “ஆமாம் என்றேன்”
“ஜலதோஷம் பிடிக்கிறதுக்கு நீங்க இடம் தரக்கூடாது” என்றார்.
“நானா இடந்தரேன். அது பாட்டுக்கு என் மூக்குக்கள் என் பெர்மிஷன் இல்லாமல் புகுந்து கொள்கிறதே, நான் என்ன செய்ய? “
“சரி டாக்டர் அதுக்கு நான் என்ன செய்யணும்?”
“அதுக்கு நான் மருந்து தரேன். ஆனா நீங்க காது மெஷின்( hearing aid) கண்டிப்பாக போட்டுக்கணும். அதுக்கு உங்க காதை காட்டுங்க” என்று சொல்லி இரண்டு காதுகளிலும் ஏதோ ஒரு மெழுகைத் திணித்து, என் காதுக்குப் பொருந்தும்படியான கருவி செய்ய, ஒரு மெழுகு அச்சு வார்ப்படம் ( wax mould) ஒன்றை வெளியில் எடுத்து வைத்துக் கொண்டார். “இங்கே 6000 ரூபாயிலிருந்து 1,50,000 ரூபாய் வரையிலுமான மாடல்கள் இருக்கு. உங்க ரேஞ்ச் எவ்வளவு? என்றார்.
“இதைவிட சீப்பாக இல்லையா?” என்று கேட்டேன்.
உடனே ஒரு பெரிய வளையம் போன்ற ஒன்றைக் காட்டி
“இது 200 ரூபாய்தான். பாட்டரி செலவு கூட கிடையாது” என்றார்.
“ஆச்சரியமாக இருக்கிறதே டாக்டர். பேட்டரி இல்லாமல் எப்படி வேலை செய்கிறது?” என்றேன்.
“இதோ இதை உங்க காதில் தொங்க விட்டுக் கொண்டால், அதில் எழுதி இருக்கும் வாசகத்தைப் பார்த்து உங்களுக்குக் காது கேட்காது என்பதைப் புரிந்து கொண்டு எல்லோரும் பலமாகப் பேசுவார்கள். எனவே பாட்டரி, லாட்டரி எதுவும் தேவைப்படாது” என்று கிண்டலடித்தார்.
நான் காது கருவிக்கு எவ்வளவு விலை கொடுக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.
என் மனைவி, என் பக்கத்து வீட்டுக்காரர், மற்றும் TV இந்த சத்தத்தை எல்லாம் எல்லாம் கேக்கறதுக்கு இவ்வளவு செலவு பண்ணணுமா, இல்லே இப்படியே விட்டுட்டா எந்த சத்தமும் இல்லாம நிம்மதியா பாக்கி நாளை கடத்திடலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது டாக்டர்
“என்ன? நான்கேட்டது காதுலே விழல்லியா” என்று பலமாகக்கேட்டார்.
அப்புறம் நான் ₹14000 விலையுள்ள ஒரு மாடலைக் காட்டினேன்.
“சரி. இன்னும் மூணு நாளிலே உங்க ஹியரிங் எய்ட் ரெடி ஆயிடும். நீங்க வந்து பே பண்ணிட்டு வாங்கிட்டுப் போகலாம்”. என்றார்.
மூணாவது நாள் சென்றேன். காதில் கருவியை மாட்டினார்.
“நீங்கள் இப்போது வெளியில் ரோடு பக்கமாகப் போய் சத்தம் எல்லாம் கேட்கிறதா என்று பாருங்கள்” என்றார்.
நான் வெளியில் ரோடு பக்கமாக வந்தேன். அதுவரையில் அமைதியாக இருந்த அந்த ரோடில் பஸ், கார், லாரி மற்றும் பலவகையான வாகனங்கள் போடும் சத்தம் உண்மையிலேயே பயங்கரமாக இருந்தது. என்னால் நம்ப முடியவில்லை.
டாக்டரிடம் சென்று “என்ன டாக்டர் இவ்வளவு சத்தமா, தாங்க முடியவில்லையே” என்றேன்.
டாக்டர் “நாங்கள் எல்லோரும் தினமும் இவ்வளவு சத்தத்துக்கு நடுவே தான் வாழ்ந்து கொண்டிருக்கோம்” என்றார்.
அட டா, மெஷின் போட்டுக்காமலே இருந்தா லைஃப் நல்லா இருக்கும் போல இருக்கே என்று ஒரு கணம் நினைத்தேன். இவ்வளவு நாள் எவ்வளவு நிம்மதியா இருந்திருக்கிறேன். இந்த மெஷினைப்போட்டுக்கொண்டு இவ்வளவு சத்தத்தையும் நாள் முழுவதும் கேட்டுக்கிட்டு இருக்கணுமா என்ற உணர்வு என்னை உந்தித் தள்ளியது.
இருந்தாலும் சாதாரண பேச்சுக்களைக்கேட்க இது தேவைப்படுகிறதே. என்ன செய்ய?சரி என்று அதைக் காதில் மாட்டிக்கொண்டு ஒரு புது சத்தம் மிகுந்த வாழ்க்கையைத் துவங்கினேன். இந்த உலகில் இவ்வளவு சத்தத்துக்கு நடுவேயா நாம் வாழ்கிறோம் என்ற ஆச்சரியம் அந்த சத்தங்கள் பழக்கம் ஆகும் வரை நீடித்தது.
எனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் நான் காது கருவி பொருத்திக் கொண்டதை சொன்னேன். அந்த சமயம் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தது. எல்லோரும் எனக்கு Happy new Ear” என்று வாழ்த்து அனுப்பினார்கள்.
பிறகு எனக்கு இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை என் ஹியரிங் எய்டை மாற்ற வேண்டி வந்தது. ஒவ்வொரு முறையும் டாக்டர் மேற்படி டெஸ்டுகளை எல்லாம் செய்து 18,000/20,000 என்ற விலையில் என் காதுகளை அலங்கரிக்கும் மெஷின்களைத் தந்தார். வழக்கம்போல மருந்துகள், டானிக் ஆகியவை கொடுத்து ஜலதோஷம் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும்படி கூறினார். ஆனால் ஜலதோஷத்திற்கு என்னவோ என்னை ரொம்பப் பிடித்துவிட்டது போலும். என்னை விட்டு அது நகர மறுத்தது. அதைத்தான் என்ன செய்தாலும் என்னால் தடுக்க முடியவில்லை.
மறுபடியும் என் கேட்கும் திறன் குறைந்து கொண்டே வந்தது. இந்தத் தடவை ஒரு ஸ்பபெஷலிஸ்ட் டாக்டரிடம் போகத்துணிந்தேன். R.A.புரத்திலிருந்த அந்த ரிசர்ச் லேபரடரி டாக்டரைப் பார்க்கப் போனேன். என் காதை ஆபரேஷன் செய்து சரி செய்ய முடியுமா என்று கேட்டேன். காதில் டார்ச் அடித்துப்பார்த்தார்.
“முதலில் நீங்கள் மந்தவெளி South canal Bank ரோடிலிருக்கும் எங்கள் டெஸ்ட்சென்டருக்குப் போய் ரொடீன் டெஸ்ட் எல்லாம் முடித்து விட்டு வாருங்கள், பிறகு பார்க்கலாம்” என்றார்.
சரியென்று மறுநாள் அந்த சென்டருக்கு வழக்கம் போல் இல்லாமல் அன்று வேஷ்டி கட்டிக்கொண்டு சென்றேன். போகும் வழியில் ஒரு ரிக்‌ஷா என் மீது இடிப்பதுபோல் வந்து “காது செவிடா உனக்கு? அப்பவே புடிச்சி கத்திக்கிட்டே வரேன். நீ எருமை மாதிரி நகராம நின்னுகிட்டே இருக்கியே. டமாரச்செவுடா நீ” என்றார் எனக்கு இப்பொழுது ஒரு புதுப்பட்டம் கிடைத்தது.
“ ஆமாம்பா, எனக்குக் காது கேட்காதுதான்” என்றேன். “ என்ன , கிண்டலா?” என்று சொல்லிவிட்டு என்னை எகத்தாளமாக பார்த்தார். இந்தப்புதுப்பட்டத்தைப் பெற்றுக்கொண்டு அந்த டெஸ்ட் சென்டருக்குள் நுழைந்தேன்.
அங்கு இரண்டு இளம் பெண்கள் இருந்தார்கள். அடடா, எகஸ்பர்ட் டாக்டர் இருப்பார் என்று பார்த்தால் வெறும் இரண்டு கத்துக்குட்டிகள் இருக்கிறார்களே என்று நினைத்து அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தேன். வேஷ்டி கட்டிக்கொண்டு வந்ததாலோ என்னவோ, ஏதோ ஒரு விவரம்தெரியாத கிராமத்தானைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்தார்கள்.
ஒரு பெண் வந்து “உங்களுக்கு என்ன” என்று கேட்டார். டாக்டர் கொடுத்த லெட்டரைக் காட்டினேன்.
Hearing test ஆ என்று சொல்லி “எத்தனை வருஷமாக காதுலே மாட்டிக்கிட்டு இருக்கீங்க” என்று கேட்டார்.
“நீங்க என்ன கேக்கறீங்க” என்று கேட்டேன்.
“ஓ! காது கேக்கலியா” என்று கேட்டு மறுபடியும் முதலில் சொன்னதைச் சொன்னார்.
“நான் பத்து வருஷத்துக்கு மேலா இந்த எய்டுகளை காதுலே மாட்டிக்கிட்டு இருக்கேன். இருந்தாலும் அடிக்கடி காது பவர் கொறஞ்சி இந்த மெஷன்களை மாத்த வேண்டி வருது. இந்தத் தடவை பெர்மனென்டா இதுக்கு ஒரு வழி செய்யணும். அதுக்குத்தான் இந்த டாக்டர்கிட்டே இப்ப நான் வந்திருக்கேன்” என்றேன்.
“காதுன்னா அப்படித் தான் கேக்கற திறமை குறைஞ்சி கிட்டே போகும். அதை ஒண்ணும் செய்யமுடியாது. அப்பப்போ டெஸ்ட் செஞ்சிகிட்டு மெஷினை மாத்திக்க வேண்டியதுதான்” என்றார். (பிழைக்கத் தெரிந்தவர்)
“இதை தவிர்க்க முடியாதா?” என்றேன்.
“அதை எல்லாம் நீங்க டாக்டர் கிட்டே தான் கேக்கணும்” என்றார்.
“இப்ப காது மெஷினைக் கழட்டுங்க” என்றார். கழட்டினேன்.
“உங்களுக்கு bad ear எது?” என்று கேட்டார் ஒரு பெண்.
நான் யோசிக்க ஆரம்பித்தேன்.
“எனக்கு bad year 2009 தான்” னு சொன்னேன்.
( அந்த வருடம் டிசம்பர் மாதம் 31ம் தேதி இந்த வருடம் நல்ல படியாக முடிந்ததே என்று எண்ணிக் கொண்டிருக்கும்போதே, வீட்டிலே கீழே விழ எவ்வளவோ இடம் இருக்க, கிச்சனில் ஒரு ஸ்டூலில் ஏறப்போய் தலைகுப்புற கீழே விழுந்து என் விலா எலும்பு ஃப்ராக்சர் ஆயி படாத பாடு பட்டேன். எனவே அதை bad year என்று தீர்மானித்தேன்)
“என்ன சொல்றீங்க?. நான் ஒண்ணு கேக்கறேன், நீங்க ஒண்ணு சொல்றீங்க. ஓ! காதுலே சரியா விழல்லியா, இல்லே புரியல்லியா?” என்று சொன்னபடி
“உங்களுக்கு இந்த ரெண்டு காதிலே எந்தக் காது ரொம்பக்கேக்காதுன்னே கேட்டேன்”. “வலது காது” என்று சொன்னேன்.
“பின்னே என்னவோ 2009 ன்னு சொன்னீங்க”.
“அதுவா, நீங்க bad ear கேட்டதும் நான் என்னுடைய bad year ஐச் சொல்லிட்டேன்” என்றேன்.
என்னை ஒரு மெஷின் முன் உட்கார வைத்து முன்பு செய்தது போல அந்த டாங்க் (tong)டெஸ்ட்டை இரு காதுக்கும் செய்தார்கள் இரு காதுக்கும். பிறகு ஒரு ஹெட்ஃபோன்மாதிரி ஒன்றைப் பொருத்தி
“நான் தமிழில் கேள்வி கேக்கறேன். நீங்க பதில் சொல்லணும்” என்று சொன்னார்.
“சரி” என்றேன்.
“எங்கே தங்கி இருக்கீங்க?” என்றார்
“மந்தைவெளியில்” என்றேன்
“உங்க சொந்த ஊர்”
“அரியலூர்”
“சரி. இப்ப சென்னையிலே நீங்க என்ன பண்றீங்க?”
“நான் ரிடயர் ஆயி வீட்டிலே உக்காந்து கிட்டு இருக்கேன்”.
“ரிடயர் ஆறதுக்கு முன்னாலே என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?”
“காலேஜுக்குப் போய்க்கிட்டு இருந்தேன்”.
“என்ன சொல்றீங்க?”
“ உங்களுக்கும்காது சரியா கேக்கலையா?’ என்று மனதில் நினைத்துக் கொண்டு
“காலேஜுக்குப் போய்க்கிட்டு இருந்தேன்” என்றேன்.
“அங்கே உங்களுக்கு என்ன வேலை?”
“நான் அங்கே ஒரு புரொஃபசரா இருந்தேன்”.
“(ஆச்சரியத்துடன்)என்ன புரொஃபசராகவா?”
“ஆமாம்”
“எந்தக் காலேஜுலே?”
“கிண்டி எஞ்சினீரிங் காலேஜ், அண்ணா யுனிவர்சிடியிலே”
( இதை நான் அப்போது பெருமையாகச்சொல்லிக் கொண்டேன். இப்போது மாதிரி நான் வேலையிலிருந்த போது அண்ணா யுனிவர்சிடி பேர் கெட்டுப்போகவில்லை. அப்போது அது உண்மையிலேயே சிறப்பாகவே இருந்தது)
நான் சொன்னேனோ இல்லையோ அதுவரையிலும் ஏனோதானோன்னு இருந்த இரண்டு பேரும் அடுத்த நிமிஷமே இங்கிலீஷுக்கு மாறினது மாத்திரமல்ல, நான் உட்கார வேறு ஒரு நல்ல நாற்காலியைப் போட்டார்கள். அவர்கள் குரலும், நடவடிக்கையுமே மாறிவிட்டது. என்னங்க, வாங்க, போங்க எல்லாம் போய்விட்டது. என்ன சார், வாங்க சார், போங்க சார் வார்த்தைக்கு வார்த்தை “சார்” போட்டுப் பேசினார்கள். திடீரென்று மரியாதை கூடிவிட்டது.
சினிமாவில் மாத்திரம் நான், பார்த்திருந்த சீனை நான் இப்போது நேரில் கண்டேன். மாடிப்படி மாது, மாடிவீட்டு மாது ஆன மாதிரி.
என்னை என்வீட்டார், சொந்தக்காரர்கள் மற்றும் பலரும் இஞ்சினீரிங் படித்துவிட்டு, இருந்திருந்தும் வாத்தியாராக இருப்பதால் மதித்ததில்லை.
அண்ணாயுனிவர்சிடி புரொஃபசர் என்றவுடன் இந்த உலகத்தில் இந்த இரண்டு பெண்களைத் தவிர நான் என் தொழிலுக்காக மதிக்கப்பட்ட இடம் இரண்டே இரண்டுதான்,
ஒன்று அமெரிக்கன் எம்பஸி,
மற்றொன்று வாஷிங்டன் ஏர் போர்ட்(டில் இருந்த கஸ்டம்ஸ் அதிகாரி).
உடனே அந்தப்பெண்கள் அவர்களுக்குக் காது பற்றித் தெரிந்த பல தகவல்களையும் மிகுந்த பவ்யத்துடனும், அடக்கத்துடனும் சொல்லி
“சார். நீங்கள் நாளை எங்க டைரக்டருடன் உங்கள் ப்ராப்ளம் எல்லாவற்றையும் சொல்லுங்கள் கட்டாயம் ஏதாவது தீர்வு கொடுப்பார்” என்று ஆங்கிலத்தில் கூற அவர்கள் தயாரித்த ரிப்போர்ட்டு வாங்கிக்கொண்டு மறுநாள் ரிசர்ச் சென்டர் டைரக்டரைப் பார்த்தேன். ஆனால் என் காது நான் யாராக இருந்தால் என்ன என்று யார் சொல்வதையும் கேட்பதில்லை என்று அக்கடா என்று இருந்தது.. அந்த டைரக்டரும்
“இது நரம்பும் வயசும் சம்பந்தப்பட்ட கோளாறு. காதில் அவ்வப்போது கருவிகளைப் போட்டுக்கொள்வதைத்தவிர வேறு வழி கிடையாது” என்றார்.
“ஆபரேஷன் ஏதாவது செய்து சரி செய்ய முடியாதா” என்று கேட்டதற்கு
“செலவு செய்யணும்னு ஆசை இருந்தா செஞ்சுக்கலாம். ஆனால் அதெல்லாம் பயன் படாது. அதனால் நீங்கள் காது கருவிகளைப் பயன் படுத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது” என்றார். ( இந்தக்காலத்துலே தேவையே இல்லை என்றாலும் ஆபரேஷன் செய்யும் டாக்டர்களுக்கு மத்தியில் இப்படி ஒருவரா?) அப்போது எனக்கு வயது 75.
********
சில ஆண்டுகள் கழித்து என் மனைவி இறந்த பிறகு நான் என் மகளுடன் கலிஃபோர்னியாவில் தங்க நேரிட்டது. அங்கே என் காதின் கேட்கும் தன்மை 10% ஆகக் குறைந்தது. நான் போட்டிருந்த காதுக்கருவி பயன்படவில்லை.
கிட்டத்தட்ட டமாரச்செவிடன் ஆனேன் அந்த ரிக்‌ஷாக்காரன் சொன்னது போல.
காதை கொஞ்சமாவது சரி செய்து கொள்ள முடியுமா என்று பார்க்க டாக்டரிடம் அணுகினேன். இங்கும் செய்ய வேண்டிய டெஸ்ட் எல்லாம் செய்து ஒரு புதுக் கருவி பொருத்திக்கொண்டேன். இந்தியாவை விட அமெரிக்கா இந்த மாதிரி விஷயங்களில் மிகுந்த முற்போக்கான நாடாயிற்றே. இங்கே கிடைக்குக் காது கருவிகளைப்போட்டுக்கொண்டால் நன்றாக கேட்க முடியமே என்ற எண்ணத்தில் என் மனதில் அப்போது இந்தக் கவிதை பிறந்தது.
Hearing is the greatest bliss
Without which you don't know how much you miss
I rejoice at hearing noises
I enjoy hearing familiar voices
I could enjoy the melody of lilting music
The denial of which so far has made me fall sick
All along both my ears were totally shut
And the entire outside world was completely cut
But now with these hearing aids
I could hear the roar of the sea and its tides.
இதெல்லாம் வெறும் கற்பனையாகவே போய்விட்டது.
புதுக்கருவி பொருத்திக் கொண்டும் என்னால் தெளிவாகக்கேட்க இயலவில்லை.
தூரத்தில் உள்ள சிறு சிறு சத்தங்களும் என் hearing aid மூலமாக மிகப் பலமாக கேட்கிறதே தவிர எந்த சத்தத்தை நான் தெளிவாகக் கேட்க வேண்டுமோ அந்த சத்தத்தை நான் கேட்க முடிவதில்லை.
நேருக்குநேர் முகத்தைப்பார்த்து ஒருவர்க்கு ஒருவர் என்ற அளவில் முகபாவங்களையும், அசைவுகளையும் பார்த்துத்தான் பேசமுடிகிறது.
சங்கீதம் கேட்க முடிவதில்லை. ஒரே அபஸ்வரம். இதையா மக்கள் விழுந்து விழுந்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஆச்சரியம். “காற்றினிலே வரும் கீதம்” இந்தப்பாடலை எத்தனை ஆயிரம் முறை கேட்டு ரசித்திருக்கிறேன். அதை இப்போது கேட்டால். பாவம் வேண்டாம். M.S அவர்களின் ஆவி வருத்தப்படும். இந்தக் கருவிகளப் பொருத்திக் கொண்டு MS ன் மதுர கானத்தை இப்போது நான் எப்படிக் கேட்கிறேனோ அப்படி MS கேட்டால், அவர் பாடுவதையே நிறுத்தி இருப்பார்.
டிவியைக் கேட்கமுடிவதில்லை.( அதிருஷ்டம் செய்தவர் என்கிறார் என் அடுத்த வீட்டுக் காரர்.
ஒரு காலத்தில் ஒரு நாளில் மூன்று சினிமா பார்த்தவன். ஒரு சினிமாவைப் பார்த்து விட்டு அதன் டயலாக்குகளை பக்கம் பக்கமாக உதிர்த்தவன். இன்று தமிழ்சினிமாவை ஆங்கில சப்டைட்டில்களுடன், ஆங்கிலப் படங்களைப்பார்ப்பது போல் பார்க்க வேண்டி இருக்கிறது. இன்று சினிமா என்றாலே இரண்டு அல்லது இரண்டரை மணி நேர தண்டனையாக ஆகிவிட்டது. ( சில சினிமாக்கள் அப்படி இருப்பது உண்மைதான்)..
பல பாட்டுக்களின் வார்த்தைகள் என் காதுகளில. விழுவதுமில்லை. என்னால் புரிந்து கொள்ளவும் முடிவதில்லை. “ பாட்டு காதில் விழாமல்இருப்பதற்கு நீ சந்தோஷப்பட வேண்டும். அந்தக்கண்ணறாவி பாட்டுக்களின் வார்த்தைகள் உன் காதில் விழாமல் இருப்பதே நீ செய்த பூர்வ ஜன்ம புண்ணியம்” என்று என் காதில் விழும்படி என் நண்பர் ஒருவர் உரக்கச்சொன்னார்.
சுற்றியுள்ளோர் என்னை வைத்துக்கொண்டே அகில உலக ரகசியங்களை எல்லாம் பலமாக பேசும் சூழ்நிலை. அப்போது அவர்கள் என்னைப் பற்றித்தான் ஏதோ பேசுகிறார்களோ என்ற சந்தேகம்.
கல்யாண வீட்டிற்குப் போனால் அங்குள்ள பின்னணி சத்தத்தில் யார் பேசுவதையும் புரிந்து கொள்ள முடியாமல் தலையைத்தலையை ஆட்டி ஒரு அசட்டுச்சிரிப்பு சிரித்து சமாளிப்பேன். இன்றேல் வாய்மூடி மௌனியாக மன்மோகன் சிங் ஆகிவிடுவேன்
அமெரிக்காவில் இந்தியாவிலிருந்து வந்து அளிக்கும் தமிழ்நாடகங்களை ஆவலாக பார்க்கப்போய், அதைப் புரிந்தகொள்ள முடியாமல் தூங்கிப்போனேன்.
அரசியல் கூட்டங்களை விடாது போய்க்கேட்டு ரசித்தவன். இன்று எந்த அரசியல் வாதி எப்படி எப்படி எல்லாம் எதிர் கட்சிகளைத் திட்டுகிறான் என்பதைக் கேட்டுக்களிக்க முடியாதவனாக ஆகிவிட்டவன்.
பாட்டுக் கச்சேரிகளுக்கு இன்று கான்டீனுக்காக மட்டும் போய்வரும் நிர்ப்பந்தம்.
இந்தக்காலத்திலே ஃபோனை காதில் ஒட்ட வைத்துக்கொண்டு பக்கத்தில் இருப்பவனைப் பார்த்துப் பேசாமல் எங்கோ இருக்கும் ஒருவரிடம் மணிக்கணக்காகப் பேசும் ஆட்கள் நிறைந்த இந்த உலகத்தில் ஃபோன் என்றாலே பயந்து காத தூரம் ஒருவன் ஓடுகிறானென்றால் அது நான்தான்.
என் காதில் விழும் என்னுடைய குரலே வேறு யார் குரலோ போல் ஒலிப்பதால் நான் பேசும்போது வேறு யாரோ என்னுள் புகுந்து கொண்டு பேசுவது போல் தோன்றுகிறது.
சில சமயம் நான் பேசுவதே என் காதில் விழாமல் நான் என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறேன்.
நாலு பேர் சந்தோஷமாக சிரித்துப் பேசுவது என்னவென்று காதில் விழாவிட்டாலும் அவர்களுடன் கூடி நானும் சிரிப்பேன்.
ஒருவருடன் தமிழில் பேசுவதற்குக்கூட எனக்கு ஒரு உதவியாளர், ஒரு இன்டர்பிரட்டர், ஒரு துபாஷி தேவை. எதிரிலிருப்பவர் என்ன சொல்கிறார் என்பதை என் உதவியாளர்தான் எனக்குப் புரியும்படியாக எனக்கு என்னைப் பார்த்து சொல்ல வேண்டும்.
இந்த உலகிலேயே தமிழில் வேறு ஒரு தமிழனுடன் பேசும்போது அவன் தமிழில் சொல்வதை நான் புரிந்து கொள்ள ஒரு இன்டர்பிரட்டர் அவன் சொல்லும் பதிலை என் பக்கம் திரும்பி என் காதில் விழும்படியாக எடுத்துக்கூறும் நிலை வேறு யாருக்கும் வரவேண்டாம் என்று என் குரலை காது கொடுத்து கேட்கச்சொல்லி ஆண்டவனைப் பிரார்த்திக்கும் ஒரே ஜன்மம் நானாகத்தான் இருக்கும். இதெல்லாம் காது கேட்பவர்களால் புரிந்துகொள்ள முடியாத சமாசாரங்கள்.

எத்தனை தடவை ஒருவர் ஒன்று கேட்க நான் ஒன்று சொல்ல எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்து இருக்கிறார்கள். எப்படி இருந்தாலென்ன.? என்னால் நாலு பேர் சந்தோஷப்படுகிறார்கள் என்றால் எனக்கும் சந்தோஷந்தானே.,.
இந்த உலகின் ஒரு பாதியை என் காது மூடி விட்டது.
இதை எல்லாம் என் டாக்டரிடம் சொன்ன போது என்மகள் மூலம் அவர் சொன்ன பதில்
“எவ்வளவுதான் தான் நாம் செயற்கை கருவிகளைப் பயன்படுத்தினாலும் அவை இயற்கைக்கு ஒரு போதும் ஈடாகாது. They are but poor substitutes. இயற்கையான காதுக்கு இந்த செயற்கைக்காதுகள் ஒரு போதும் சமமாக முடியாது. எனவே இருப்பதை வைத்துக் கொண்டு வாழக் கற்றுக் கொள்ளுங்கள்” என்பதுதான்.
ஆக தத்துவத்தின் பிறப்பிடமாகிய இந்தியாவில் பிறந்த நான் இப்படிப்பட்ட மகத்தான தத்துவத்தை ஒரு அமெரிக்க டாக்டர் சொல்லி, “கேட்காத காது” மூலம், புரிந்துகொள்ள நேர்ந்தது.
இருக்கப்போவதோ இன்னும் சில மாதங்களோ, வருடங்களோ என்னும்போது காது கேட்காததைப் பற்றிக் கவலைப்படாமல் நிம்மதியாக வாழ்வோம் என்று டாக்டர் சொன்னதையும், கொடுத்ததையும் காதில் போட்டுக்கொண்டு வந்தேன்.
இதுதான் “ காதோபதேசம்” என்பதோ?
************************************

எழுதியவர் : ரா.் குருசுவாமி (ராகு) (28-Jun-20, 11:19 am)
சேர்த்தது : ரா குருசுவாமி
Tanglish : ketkaathu
பார்வை : 142

சிறந்த நகைச்சுவைகள்

மேலே