மீண்டும் ஒரு கருவறை

***********************************************************************************


நிலமே!
என்றும் நடுவுநிலை தவறாதவள் நீ

நல்லோர் தீயோர்
உள்ளோர் இல்லோர்
கற்றோர் மற்றோர்
பாரபட்சமில்லை உன்னிடம்
அனைவரையும் தாங்குகிறாய்

உலக சமநிலைப்படுத்தும்
உனது தேக​ சிலிர்ப்பினில்
ஏற்றத் தாழ்வின்றி
மீண்டும் ஒரு கருவறையாக​
உயிர்களை உன்னுள்
வாங்கிக்கொள்கிறாய்.

என்றும் நடுவுநிலை தவறாதவள் நீ!

உன்னில்
எது விதைக்கப்படுகிறதோ
அதைப் பன்மடங்காக​
அள்ளித் தருகிறாய்

முத்துமுத்தாய் கதிர்வகைகள்
கொத்துக்கொத்தாய் கனிவகைகள்
வாசம் வீசும்​ மலர்கள்
பிணி தீர்க்கும் மூலிகைகள்

உன்னில்
எது விதைக்கப்படுகிறதோ
அதைப் பன்மடங்காக​
அள்ளித் தருகிறாய்

பாரபட்சமில்லை உன்னிடம்

அந்தோ!
உன்னில் இங்கே
விஷ​ வித்துக்களுமல்லவா
விதைக்கப்படுகின்றன​..

ஆனால்
என்றும் நடுவுநிலை தவறாதவள் நீ!

விதைக்கப்படுவது
எதுவானாலும்
அதைப் பன்மடங்காக​
திரும்பத் தருகிறாய்

பாரபட்சமில்லை உன்னிடம்

உயிரற்றவைகளை
மட்கச் செய்திடும்
ஆற்றல் உடைய​வளே!

அருமை உயிர்களைக்
களவாடிச் செல்லும்
அந்த​ விஷ​ வித்துகளையும்
ஜடமாகக் கருதிடாயோ!

உன்னில்
மட்கிட​ச் செய்திடாயோ?

நிலமே!
என்றும் நடுவுநிலை தவறாதவள் நீ!


*********************************************************************************************

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை. (4-Jul-20, 1:43 am)
பார்வை : 293

மேலே