நஞ்சு உண்ணி - நேரிசை வெண்பா

நஞ்சு உண்டவன் சிவபிரான். அதனைக் குறித்து நஞ்சுணி” என இடக்கராகக் குறிப்பிட்டுப் பாடுமாறு சிலர் கேட்கக் காளமேகம் பாடுகிறார்.

நேரிசை வெண்பா

சிரித்துப் புரமெரித்தான் சிந்துரத்தைப் பற்றி
உரித்துதிரம் பாய வுடுத்தான் - வருத்தமுடன்
வாடுமடி யாருடனே வானவரும் தானவரும்
ஓடுபயந் தீர்த்தநஞ்(சு) உண்ணி. 147

- கவி காளமேகம்

பொருளுரை:

உயிரே அழிந்து போமோ என்ற வேதனையுடையவராக வாட்டமுறும் அடியார்களுடனே தேவர்களும் அசுரர்களும் அச்சமுற்று ஓடிக் கொண்டிருந்த போது, அந்த அச்சத்தைத் தீர்த்து நஞ்சை உண்டவன் சிவபெருமான். மேலும், அவன் தன் சிரிப்பினாலே திரிபுரக் கோட்டைகளை எரித்துச் சாம்பலாக்கிய வனும், தாருக வனந்து முனிவர்கள் ஏவிய யானையைப் பற்றி அதன் தோலை உரித்து, உதிரம் கொட்டிக் கொண்டிருக்க இடையிலே உடுத்துக் கொண்டவனும் ஆவான்.

நஞ்சை உண்டது ஒன்றுமட்டுமன்று; சிரித்துப் புரமெரித்ததும், சிந்துரத்தை உரித்ததும் அவனே என்று போற்றுகின்றார் அவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Jul-20, 1:55 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 56

சிறந்த கட்டுரைகள்

மேலே