18 அவளுடன் பேசும்போது

______________________

"கனகாம்பரத்தில் ஒளி படுகிறது" என்று குறுஞ்செய்தி அனுப்பி இருந்தாள். மாலையில் அவள் செடிகளுக்கு நீர் வார்க்கும்போது அங்கிருந்தேன்.
கனகாம்பர விதைகள் நீர் பட்டு வெடித்து சிதறியதில் குட்டிகள் திகிலுடன் விழித்து குலைத்தன.

அவள் அவற்றோடு விளையாடி கொண்டிருக்க நான் பார்த்துக்கொண்டே இருந்தேன்.

ஹாலில் வந்து உட்கார்ந்த போது ஜேம்ஸ் ஆலனின்.... புத்தகம் இருந்தது.

ஸ்பரி...

கேள்...

நீங்கள் விடாமல் ஏதேனும் வேலையில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டே இருக்கிறீர்கள் அல்லவா?... உங்கள் வாழ்க்கை லட்சியம் என்ன?

ஒன்றுமில்லை.

ஒன்றுகூடவா..? தொழில்... எழுதுவது... சமூக அந்தஸ்து... இப்படி ஒன்று கூடவா?

எதுவுமில்லை.

ஏன்?

லட்சியம் குறிக்கோள் என்பதெல்லாம் என்ன? யாருக்கு நம்மைப்பற்றி நிரூபிக்க வேண்டும்?

ஆனால் உங்கள் எழுத்துக்களில் நிறைய கேள்விகள் வரும். அதை தேடுவது கூட ஒரு லட்சியம் அல்லவா?

அந்த கேள்வியில்தான் பதில் இருக்கும். பெருக்கி கழிக்க அது தெரிந்து கொள்ளலாம். அந்த விடையில் எஞ்சிய தோல்விதான் அடுத்த கேள்வி...

இந்தப்பயணமே ஒரு லட்சியவாதம் அல்லவா? நீங்கள் எப்போதும் பின் நகர்ந்து மட்டுமே செல்ல முயற்சி செய்கின்றீர் ஸ்பரி. கூட்டங்கள் என்பது உங்களுக்கு ஆகாது.

"அரண்மனையின் நிழலில் ஒதுங்க நேர்ந்தால் எனக்கு உடல் இன்னும் எரிகிறது." என்றேன்.

இதுவும் கூட இருப்பின் மீது கேள்விகள் கேட்கும் உங்களின் இன்னொரு குறிக்கோளாகவே நான் பார்க்கிறேன்.

ஆனால் நான் இதை இயல்பாக எடுத்து கொள்கிறேன். எனக்கு துக்கங்கள் இல்லை. பொழுதைக்கெடுக்கும் உறவுகளை மனம் கசந்து பார்க்கிறேன். நான் விலகி நிற்க விரும்புகிறேன். நான் லட்சியங்களுக்கு உதவாதவன். அந்த துரும்புகள் என்னை அசைக்க முடியாமல் மீண்டும் மீண்டும் என்னை அழுத்துவதை ஒருபோதும் விரும்பவில்லை.

உங்களிடம் படிக்க வரும் ஒரு குழந்தைக்கு இதை சொல்லி தருவீர்களா?

பெற்றோர்கள் என்னை நம்ப மாட்டார்கள்.
நாய்குட்டிகளுக்கு கல்வி தேவையில்லை. இதனாலேயே நாங்கள் நேசித்து கொள்ள எந்த குறிக்கோளும் இல்லாமல் போகிறது.

பின் நீங்கள் வாழ்வில் வெற்றி பெற்றவர் என்பதை எப்படி புரிந்து கொள்வேன்?

என் வாழ்வில் நீ புரிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் ஒன்றும் இல்லை.

நான் உங்களோடு இருக்கிறேன்.

நானும் உன்னோடு இருக்கிறேன். நாம் எப்போதும் கூட இருப்பது ஒரு விதத்தில் இல்லாமல் இருப்பது போலத்தான்.

என்ன சொன்னாலும் குறிக்கோள் வேண்டும் ஸ்பரி...

உன் குறிக்கோள் என்ன?

அவள் சொன்னாள்.

இதை எந்த குறிக்கோள் இன்றியும் நீ எளிதாக செய்து முடிக்க முடியுமே. இப்போது நீ செய்வது உன் காரியத்திற்கு வண்ணம் பூசுகிறாய். மற்றவரை கவரும் நோக்கம். வேறு ஒன்றும் இதில் இல்லை.

நாம் இது பற்றி பேசாமல் இருப்பது நல்லது ஸ்பரி... நீங்கள் கருத்துக்களால் என்னை உடைக்க பார்ப்பது வீண் செயல் என்றாள் கோபத்துடன்.

நான் அவளை பார்க்கும் போது அதே கோபத்தில் ஜ்வலித்தாள்.

உன் பாதையில் நீ இஷ்டம் போல போ. ஆனால் அதில் சத்தியங்களை பரப்ப வேண்டாம். கடைசியில் நீ கண்டறிந்த உன் உறுதியான செய்திகளை ஒரு மரத்தின் நிழலில் தங்கி இருக்க அனுமதிக்கலாமே.

வரப்போகும் தகுதியுள்ள பயணி நிச்சயம் அந்த கொடைகளை ஏற்றுக்கொள்வான். அது தவிர்த்த மற்ற அனைத்தும் உன்னுள் கொழுந்து விட்டெரியும் உன் சாகசங்கள் மட்டுமே. அதை என்றாவது ஒரு நாள் நீயே வெட்கப்பட்டு அணைக்க வேண்டியும் வரலாம்.

மௌனமாய் இருந்தவளிடம் காஃபி வேண்டும் என்றேன்.

இருங்கள்...உங்களுக்கு காஃபி எடுத்து வருகிறேன் என்று உள்ளே சென்றாள்.

நாய்குட்டிகள் கீழிருந்த ஒரு புத்தகத்தை கிழிக்க ஆரம்பிக்க நான் அதை வாங்கி புத்தக அடுக்கில் வைத்தேன்.


_______======_________

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Jul-20, 12:05 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 71

சிறந்த கட்டுரைகள்

மேலே